For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலகக் குரல் நாள் இன்று !

05:14 PM Apr 16, 2020 IST | admin
உலகக் குரல் நாள் இன்று
Advertisement

வேர்ல்ட் வாய்ஸ் டே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

உயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும்.பிறந்த கணத்தில் அழுகையில் ஆரம்பித்து, `அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது பாடலாக உற்சாகமாக வெளிப்படுகிறது.

மனிதனின் இந்த பேசும் அமைப்புக்கு காரணமாக இருப்பது பேசும் பெட்டி என்பது. இது மனிதனை தவிர இன்னொரு உயிரினத்திற்கு இருக்கிறது என்றால் அது கிளிக்கு மட்டும்தான். இதன் பேசும் பெட்டி கிட்டத்தட்ட மனிதனின் பேசும் பெட்டியில் 50 சதவீதம் உள்ளது. அதனால்தான் கிளிகள் மனிதனைப் போல் தெளிவாக பேசமுடியா விட்டாலும் சில வார்த்தை களை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தால் அந்த வார்த்தைகளை மட்டும் பேசும்.

Advertisement

ஆண், பெண் குரல் வித்தியாசம் நான்கு வயதுக்கு மேல்தான் தோன்றத் தொடங்குகிறது. இது லேசான தொடர் மாற்றத்துடன் 12 வயது வரை தொடர்கிறது. அதன்பின் அதில் விஸ்வரூப மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கு கரகரப்பான குரலும் பெண்ணுக்கு இனிமையான குரலும் தோன்றுகிறது. இந்த குரல் இனிமை பெண்ணுக்கு 50 வயது வரை பெரிதாக மாறுவதில்லை. அதன்பின் அந்த குரலில் பெண்மையின் மென்மைபோய் கரகரப்பு சேர்ந்துவிடுகிறது.

மனிதனை பேச வைப்பது குரல் நாண்கள் என்று சொல்லப்படுகிற தசை மடிப்புகள்தான். இந்த குரல் நாண்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்து நிலையிலும், பேச முயலும்போது விரைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்று அடையும் காற்று, நாம் பேசும் போது திரும்பி வந்து விறைப்பாக இருக்கும் குரல் நாண்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது.

குரல் நாண் என்பது ஆணுக்கு 1.75 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை நீளம் இருக்கும். இதுவே பெண்ணுக்கு 1.25 செ.மீ. முதல் 1.75 செ.மீ. நீளம் இருக்கும். இந்த குரல் நாண்கள் சப்தத்தை உண்டாக்க ஒரு வினாடிக்கு ஆணுக்கு 120 முதல் 130 முறையும், பெண்ணுக்கு 200 முதல் 220 முறையும், குழந்தைகளுக்கு 300 முதல் 310 முறையும் அதிர்கிறது. இந்த அதிர்வுதான் பேச்சாக வெளிப்படுகிறது.

அறுபது வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலரின் குரல் நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளத் தொடங்கிவிடும். அதனால் அவர்கள் குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதனால்தான் வயதான சிலரால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் போய் விடுகிறது. எந்த வயதிலும் குரல் நாண் தளர்ச்சியடையாமல் மனிதனால் காக்க முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மதுவும், புகைப் பிடித்தலும் தொண்டை குரல் நாணை நேரடியாக பாதிக்கும் காரணிகள் என்கிறார்கள். மேலும், மாசு படிந்த காற்றை சுவாசிப்பதும் குரலைப் பாதிக்குமாம். தண்ணீர் நிறைய குடித்து எப்போதும் குரல் நாணை ஈரமாக வைத்திருப்பவர் களின் குரல் எந்த வயதிலும் இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் இந்த குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும். அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், "பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்" (Brazilian Society of Laryngology and Voice) 1999 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

குரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:

* சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசிக்கொண்டே சாப்பிட்டால் உணவு, உணவுக்குழாய்க்கு போவதற்கு பதில் மூச்சுக்குழாய்க் குள் போய்விடும். இதனால் குரல் ஆரோக்கியம் பாதிக்கும்.

* புளிச்ச ஏப்பம் தொண்டையில் ஏற்படும்போதும் குரல் கெடும். விக்கல் ஏற்படுவதாலும் குரல் கெட வாய்ப்பிருக்கிறது.

* மது அருந்துதல், புகைப்பிடித்தலை தொடரும்போது குரல்நாண் கெட்டு குரல்வளையில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றும். முதல் அறிகுறியாக குரல்நாண் தடித்துப்போகும்.

* தொண்டையிலிருந்து காற்று வர தடை ஏற்பட்டாலும் குரல் மாறும். முக்கியமாக குறட்டை விடுபவர்களுக்கு குரல் தடித்துப்போகும். குரல் தெளிவாக இருக்காது. அதுபோல் வாயும் அடிக்கடி உலர்ந்துபோகும். இதையும் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

குரலை இனிமையாக்க:

* தினமும் சீரான இடைவெளியில் முடிந்த அளவு அதிக தண்ணீர் பருகவேண்டும். பிரணாயாமப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

* தொடர்ந்து 15 நிமிடங்கள் பேசினால், இடையில் சில நிமிடங்கள் தொண்டைக்கு ஓய்வுகொடுக்கவேண்டும்.

* அதிக சூடான, அதிக குளிரான உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

* அதிக சத்தமாக ஒருபோதும் பேசக்கூடாது.

* மாதுளை முத்துக்களில் இருந்து சாறு எடுத்து, அதில் தேன் கலந்து பருகவேண்டும்.

* சிறிய வெங்காயத்தை நறுக்கி வெண்ணெய்யில் வறுத்து சாப்பிடவேண்டும்.

* கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று சாப்பிடவேண்டும்.

* இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு பாலில் சிறி தளவு மஞ்சள் தூள், மிளகு தூள் கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு நீங்கி குரல் இனிமையாகும்.

இந்நாளில் நம் குரல் மூலம் நல்லதையே வெளிப்படுத்தி நமது குரலை இனிமையாக வைத்துக் கொள்வோமே!.

Tags :
Advertisement