உலக வயலின் தினம்!
ஆண்டு தோறும் டிசம்பர் 13 ஆம் தேதி உலக வயலின் தினம் கொண்டாடப்படுகிறது. வயலின் இசையின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவும், வயலின் கலைஞர்களின் கலையை பாராட்டவும் வாய்ப்பளிக்கும் ஒரு சர்வதேச விழா தான் இது. இந்த வயலின் உலகளவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்நாளில் இசை ஆசிரியர்கள், இசையைக் கற்பவர்கள், வயலின் இசை கலைஞர்களால் பல்வேறு வயலின் இசைக் கச்சேரிகள் நடத்தப்படும்.
சர்வதேச அளவில் இசைத்துறை பலகோடி ரூபாய் பணம் புழங்கும் மிகப்பெரிய துறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. சினிமா, நாடகம், கச்சேரி, பாடல் பதிவு, இணையவழி ஆல்பங்கள் என இன்றைய இசைக்கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் ஒருபுறம் மக்கள் செல்வாக்கை அதிகளவில் பெற்றாலும், இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கெனவும் தனி ரசிகர் பட்டாளம் கடந்த பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. உலகளவில் அதிகம் இசைக்கப்படும் இசைக்கருவி என்றால் அது பியானோ/ கீபோர்டுதான். இதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது வயலின் என்பது பலரும் அறியாத விஷயம். கிளாசிக், ஜாஸ், நாட்டுப்புற ராக் மற்றும் கர்நாடக வரையிலான பல்வேறு வகையான இசை பாணிகளில் பயன்படுத்தப்படும் வயலின் என்ற ஒப்பற்ற மற்றும் கேட்கும் நேரத்தில் மனத்திற்கு வருடலை தரும் இசை கருவியை கொண்டாடாமல் எப்படி இருக்க முடியும்.வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான ஒரு அமைப்பாகும். இந்த தந்திக் கருவியின் அமைப்பை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிடில் (Fiddle) என்றும் அழைக்கப்படுகிறது.இப்பேர்பட்ட வயலின் கதையை தெரிந்து கொள்வோமா?
வயலின் என்ற நரம்பிசைக் கருவி, இந்தியாவில்தான் தோன்றியதாம். பின், மேலை நாடுகளுக்குப் பரவியது. அங்குள்ள அறிஞர்கள் பல மாற்றங்கள் செய்தனர். மாற்றங்களுடன் வந்த வயலின் கருவியை, இந்திய கலைஞர்கள், இசைக் கச்சேரிகளில் பயன்படுத்து கின்றனர்.கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிராமம் திருமகூடலு. இங்கு, அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இது, 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்குள்ள கருங்கல் துாணில், வில்லைக் கொண்டு, ஒரு இசைக் கருவியை வாசிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் உள்ளது. அக்காலத்திலே வயலின் போன்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டதற்கு சான்று இது.
அதே சமயம் இன்னொரு வரலாற்றுக் கதை இது: கடந்த 8-ஆம் நூற்றாண்டுமுதல் காலாகாலமாக ஆட்டின் நரம்பின்மீது குதிரை முடிக் கற்றை வைத்து தேய்த்து இசைக்கப்படும் பலவித இசைக்கருவிகள் உருவாகத் துவங்கின. இவை ஆங்கிலத்தில் 'போயிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்' என அழைக்கப்பட்டன. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, ஆப்ரிக்க நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சாரங்கி, தில்ருபா, ரெபாப் உள்ளிட்ட வயலினை ஒத்த போயிங் இசைக்கருவிகள் 16 ஆம் நூற்றாண்டுவரை பிரபல கலைஞர்களால் இசைக்கப்பட்டன. ஆனால் இந்த போயிங் கருவிகளுக்கென பிரத்யேகமான ஓர் வடிவமோ, அல்லது தரக்கட்டுப்பாடுகளோ கிடையாது.
இந்நிலையில் இத்தாலியின் புகழ்பெற்ற இசைக்கருவி வடிவமைப்பாளர் அன்டோனியோ ஸ்ட்ராடிவேரி (Antonio Stradivari) 17 ஆம் நூற்றாண்டில் உலகளவில் பிரபலமான போயிங் இசைக் கருவிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல்வேறு போயிங் கருவிகளை ஒன்றிணைக்க எண்ணினார். இதனையடுத்து இவற்றின் பல குணாதிசயங்களைப் பெற்ற ஓர் நவீன போயிங் கருவியை உருவாக்க நினைத்தார். இதனையடுத்து வயலின், செலோ உள்ளிட்ட இசைக்கருவிகள் உலகுக்கு அறிமுகமாகின. வயலினை இசைக்கலைஞர்கள் சுலபமாக வாசிக்க ஏற்றவாறு, அதில் பல நவீன மாற்றங்களைச் செய்தார் ஸ்ட்ராடிவேரி.
வயலினில் ஆட்டின் நரம்புகளுக்கு மாற்றாக உலோகத்தாலான தந்திகளைப் பயன்படுத்தினார். இந்த நான்கு தந்திகளுக்கு G, D, A, E எனப் பெயரிட்டார். வயலினின் 'Bow'-வில் உயர்ரக பிரேசில் குதிரையின் வால் முடிக்கற்றையை இணைத்தார். தந்திக்கும் குதிரை முடிக்கும் இடையே உராய்வை ஏற்படுத்த வயதான மரத்தின் பிசினில் இருந்து தயாராகும் 'ரோஸின்' என்கிற துகளை குதிரை முடிக்கற்றையில் வைத்துத் தேய்த்தார். இதனால் ரோஸின் தடவிய குதிரை முடிக்கற்றையை தந்தியில் வைத்துத் தேய்த்தால் 'க்ரீச்ச்ச்ச்...' என்கிற நாராசமான சப்தம் உண்டானது. மேப்பல் மரத்தால் உருவான வயலின் உடலில், ஆங்கில எழுத்தான 'f' வடிவத்தில் இருபுறமும் துளையிட்டார். இதன்மூலம் காற்று வயலினுக்குள் சென்று வெளியே வரும். இதனால் வயலினை இசைக்கும்போது மனதை மயக்கும் இசை பிறக்கும். எபோனி மரத்தால் வயலினின் ஃபிங்கர்போர்டு, ஸ்ப்ரூஸ் மரத்தால் வயலினின் கைப்பிடியை உருவாக்கினார். இந்த வடிவம் பின்னாட்களில் போயிங் இசைக்கருவிகளுக்கு ஓர் புதிய அடையாளத்தைத் தந்தது.
மேலை நாட்டு கிளாஸிகள் இசையை இசைக்கவே முதன்முதலில் வயலின் பயன்படுத்தப்பட்டது. வடக்கு இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் வயலினுக்கு 'ஃபிடில்' என்கிற பெயரும் உண்டு. கிளாஸிகல் இசையின் உச்சஸ்தாயியான 'ஜி கிளஃபில்' செயல்படும் வயலின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பிரபலமடையத் துவங்கியது. மேலை நாட்டு சிம்ஃபொனி இசைக்கச்சேரிகளில் வயலின், பியானோ, செலோ, டிரம்பெட், டுஃபா உள்ளிட்ட இசைக்கருவிகள் தவிர்க்க முடியாத இசைக்கருவிகளாகின. இதில் வயலின் கலைஞர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பீதோவன், மொசார்ட், பகானினி, விவால்டி உள்ளிட்ட பல இசைக்கலைஞர்கள் வயலினுக்கு சிறப்பான இசைக் குறிப்புகளை உருவாக்கத் துவங்கினர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த ஸ்ட்ராடிவரிஸ் என்பவர், இப்போது புழக்கத்தில் உள்ளது போன்ற வயலினை உருவாக்கினார். சில்வர் ஓக், பைன், மேப்பிள் போன்ற மரங்களில் வயலின் இசைக்கருவி செய்யப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பால ஸ்வாமி தீட்சிதர், ஐரோப்பியர் வடிவமைத்த வயலினை, 1821ல் இசைக்க பயின்றார். அதில் கர்நாடக இசையை நிகழ்த்திக் காட்டினார். வயலினில் இருந்து பல புதுக்கருவிகள் தோன்றியுள்ளன.
வயலின் குறித்த டிட் பிட்ஸ்
வயலின் இசைக் கருவியில் 70 பாகங்கள் உள்ளன.
பிரபல இசை மேதையான மொசார்ட், முதலில் வயலின் இசைக்கத்தான் கற்றுக்கொண்டார்.
இத்தாலியை சேர்ந்த காஸ்பரோ ட சாலோ, ஆண்டிரன் அமடி, ஆண்டோனியோ ஸ்டிராடிவாரி ஆகியோர் 17-ம் நூற்றாண்டில் பல்வேறு கட்டங்களில் வயலின் இசைக் கருவியை மேம்படுத்தி உள்ளனர்.
உலகில் அதிக விலை மதிப்புள்ள வயலின் 16 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
ஒரு மணி நேரம் வயலின் இசைப்பதன் மூலம் ஒருவர் 170 கலோரிகளை குறைக்க முடியும்.
வயலின் இசைக் கருவிகள் பெரும்பாலும் மேப்பிள் மரத்தால் செய்யப்படுகின்றன.
உலகிலேயே மிக வேகமாக வயலின் இசைக்கக்கூடிய கலைஞராக சசெக்ஸ் நகரின் பென் லீ கருதப்படுகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் பன்றி, ஆடு, குதிரை ஆகிய மிருகங்களின் குடல்களைப் பயன்படுத்தி வயலின் கம்பிகள் தயாரிக்கப்பட்டன.
உலகின் மிகப் பெரிய வயலின் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. இதன் நீளம் 4.27 மீட்டர்.
நிலவளம் ரெங்கராஜன்