உலக ஆமைகள் நாள்!
நிதானத்திற்காக பெயர் போனது ஆமைகள்.ஆனால் மெதுவாக ஒரு வேலையை செய்தாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருந்தாலோ பொதுவாக அவர்களை ஆமையுடன் ஒப்பிட்டுக்கூறுவர். ஆனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுகிற ஆமைகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உலகின் பழமையான ஊர்வன வகைகளில் ஒன்றாகும். எந்த அவசரமும் இன்றி சாவகாசமாக வழியிலிருக்கும் புற்களைச் சிறிது சிறிதாக மேய்ந்துகொண்டே அநியாயத்துக்கு மெதுவாகச் செல்லும். அவற்றை நேரம்போவது தெரியாமல் நின்று ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஆமைகளைப் பார்க்கும்போது நாமும் அவற்றைப்போலவே நேரத்தைப் பற்றிய கவலைகளை மறந்துவிடுகிறோம். ஓடுகளுக்குள் மறைந்திருக்கும் அந்த உடலைத் தூக்கிக்கொண்டு மொத்த காட்டையும் அளந்துகொண்டிருக்கும் இவை இல்லையென்றால் உலகம் எப்படியிருக்கும்? அவற்றின் அந்தப் பொறுமையான நடைக்குப் பின்னால், மிகப்பெரிய சூழலியல் சமநிலையே ஒளிந்துள்ளது. அவை முட்டையிடுவதற்காகக் குழி தோண்டுவதன் மூலமாகத் தன் ஆற்றலில் பாதியை நிலத்துக்குத் தானம் அளிக்கின்றன. நீருக்கும் நிலத்துக்கும் இடையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டேயிருப்பதன் மூலமாக அவை பல சேவைகளைச் செய்கின்றன. கடல் மற்றும் நன்னீரில் வாழும் ஆமைகளே நிலத்துக்கும் நீருக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றன.
அவை யாருக்கும் எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. அதற்கு மாறாகப் பற்பல நன்மைகளைச் செய்கின்றன. நீர் வாழ் ஆமைகளின் உணவுப் பட்டியலில் இறக்கும் மீன்களும் உள்ளன. அவை மிகச் சிறந்த துப்புரவாளர்கள். அவை இறக்கும் மீன்களைச் சாப்பிட்டு விடுவதால்தான் ஏரி, குளங்கள், ஆறுகள் இன்னமும் நாற்றம் அடிக்காமல் சுத்தமாக இருக்கின்றன. முட்டையிடுவதற்காகக் குழி தோண்டுவதன் மூலமாகப் பல்வகையான பூச்சிகளுக்கு வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பூச்சிகளுக்கு மட்டுமல்ல, முயல்கள், நிலத்தில் குழிதோண்டி வாழும் ஆந்தைகள் என்று சுமார் 350 வகையான உயிரினங்கள் ஆமைகளின் உதவியோடு தமக்கான வாழ்விடத்தை ஏற்படுத்திக்கொள்கின்றன. அவை மிகச்சிறந்த தாவரவியலாளர்களும்கூட. அவை வாழும் இடத்தில் மிக நேர்த்தியாக விதைப் பரவல்களைச் செய்கின்றன. ஓர் ஆமை ஒரு செடியைச் சாப்பிட்டுவிட்டு, சுமார் அரை மைல் தூரம் சென்று தன் உடற்கழிவை வெளியேற்றுகின்றது. அந்தக் கழிவில் வெளியேறும் விதைகளின் மூலமாக அங்கும் அந்தத் தாவரம் முளைத்துக் கிளைவிடத் தொடங்கும். கடற்கரைக்கு வந்து முட்டையிடும் கடல் ஆமை, தம் உடல் ஆற்றலில் சுமார் 75 சதவிகிதம் ஆற்றலை நிலத்திலேயே விட்டுச் செல்கின்றது.
இப்பேர்பட்ட ஆமைகள் பாம்பு, முதலை போன்றவற்றிக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றன. இவ்வளவு ஏன்.. டைனோசர்களின் காலத்திற்கு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக ஆமைகள் கருதப்படுகின்றன. தற்போது உலகெங்கிலும் காணப்படுகிற ஊர்வன இனத்தை சேர்ந்த ஆமைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. நீர் மற்றும் நிலத்தில் வாழ்கின்ற பல அரிய வகை ஆமைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. உலக அளவில் இவற்றின் இருப்பு ஆபத்துக்குள்ளாகி வருகின்றது. ஆமைகளில் பல்வேறு வகைகள் இன்று அழிவின் விளிம்பில் தம் இனத்தின் இருப்பை இந்த உலகில் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கின்றன. கூகுள் வலைதளத்தில் Turtle என்று தேடினால் நமக்குக் கிடைப்பது பெரும்பாலும் கடல் ஆமை வகைகள்தான். மக்கள் மத்தியிலும் நன்னீர் ஆமைகளைவிடக் கடல் ஆமைகளே பெரும்பாலும் தெரியவருகின்றன. ஆனால், இந்தியாவில் 28 வகையான நன்னீர் மற்றும் நிலத்து ஆமை வகைகள் இருக்கின்றன. அதில் 17 வகைகள் சர்வதேச உயிரினங்கள் பாதுகாப்பில் சிவப்புப் பட்டியலில் (IUCN Red List) இருக்கின்றன. அவை அழியும் நிலையிலிருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள். இவற்றைப் பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை. இந்த ஆமைகளின் வாழ்விடம், எங்கெல்லாம் அவை காணப்படுகின்றன, எண்ணிக்கை என்று எந்தவிதமான தரவுமே நம்மிடம் முழுமையாக இல்லை. இதை எல்லாம் கவனத்தில் கொண்டே ஆமைகளின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும்மே 23இல் உலக ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆமைகள் தினம் உருவான கதை உங்களுக்குத் தெரியுமா?
அமெரிக்க ஆமைகள் மீட்பு (American Tortoise Rescue) மையம் இதற்கு தொடக்கப்புள்ளி வைக்கவில்லை என்றால் உலக ஆமைகள் தினம் என்ற ஒன்றே இருந்திருக்காது. இந்த லாப நோக்கற்ற அமைப்பு 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூசன் டெல்லம் அம்ற்றும் அவரது கணவர் மார்ஷல் தாம்சன் என்பவர்களால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இவர்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ்கின்ற 4000க்கும் மேற்பட்ட ஆமைகளை மீட்டு அவைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதன்பிறகு 2001ஆம் ஆண்டிலிருந்து உலக ஆமைகள் தினத்தை கொண்டாடிவருகிறது. ஆமை தினம் பல்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. ஆமைகள் போல உடை அணிந்து கொள்வது, நெடுஞ்சாலைகளில் வழி தவறிச் சென்ற ஆமைகளை மீட்டு அவற்றின் வாழ்விடங்களில் சேர்ப்பது, என்பதில் இருந்து, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஆமைத் தொடர்பான கைவினைப் பொருட்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆமைகளைக் குறித்து அறிவாற்றலை வளர்ப்பது என பலவகையாகக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஆமைகள் காட்டுப்பகுதிகளில்தான் வாழ்கின்றன என பலர் நினைக்கின்றனர். ஆனால் நிஜத்தில் அது சாத்தியமில்லை. பல ஆமைகள் செல்லப்பிராணிகள் கடைகளில் விற்கப்படுகின்றன. சிலர் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு ஆமைகளை பரிசாகவும் அளிக்கின்றனர். தற்போது நிறைய ஆமை மீட்பு மையங்கள் மற்றும் சரணாலயங்கள் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. சிலர் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர் பெரும்பாலும் அனைத்து தட்ப வெப்ப சூழலிலும், வாழக் கூடிய இந்த ஆமை, ஒரு உயிரினம் என்பதிற்கும் மேல் கலை, இலக்கியம் எனப் பலப் பரிமாணங்களில் வலம் வருகிறது.ஆமைகள் அவற்றின் இறைச்சி, ஓடு மற்றும் தோலுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடி வர்த்தகம் செய்யப்படுகின்றன. சுற்றுப்புற மாசுபாடு காரணமாகவும், ஆமைகளின் வாழ்விடத்தை அழிப்பதாலும் ஆமைகளின் அழிவு அதிகரிக்கின்றன.
ஆமைகள் நீர் மற்றும் நிலப்பரப்பில் வாழ்வதால், சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும், சூழலை சமநிலைப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அழிந்து வரும் ஆமைகளை பாதுகாப்பதிலும், சுற்று சூழலை பாதுகாக்கும் ஆமைகளின் வாழ்விடத்தை காப்பாற்றவும் பல்வேறு அமைப்புகள் மற்றும் குழுக்கள் மூலம் இணைந்து நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டும். ஆக, இந்த ஆமைகள் பல்லுயிர் ஆதார உயிரினமாகப் பார்க்கப்படுகின்றன. எனவே , ஆமைகள் அழிக்கப்பட்டாலோ, எண்ணிக்கையில் மிகவும் குறைந்தாலோ, அந்தச் சூழல் மண்டலமே நிலைகுலைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆமைகள் இருந்தால்தான் கடல் சூழல் மண்டலம் ஆரோக்கியமாக விளங்க முடியும்.
வாழ்வில் ஏற்கெனவே பல சவால்களைச் சந்தித்து வரும் ஆமைகளுக்கு மனிதர்கள் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறார்கள். இறைச்சிக்காகப் பிடித்தல், முட்டைகளை உணவுக்காக அப்புறப்படுத்துதல், ஆமைகளின் மேலோட்டுகளுக்காக அவற்றைக் கொல்லுதல், மீனவர்களால் தவறுதலாகப் பிடிக்கப்படுதல், தவறான மனித செயல்பாடுகளால் கடல் மற்றும் கடற்கரையின் சூழல் பல்வேறு வழிகளில் மாசடைவதால் அதன் வாழ்விடங்கள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஆமை இனங்கள் அழிந்து வருகின்றன.
அதுமட்டுமன்றி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி பைகள் கடலுக்குள் செல்லும்போது, அவை பார்ப்பதற்கு ஜெல்லி மீன்களைப் போலவே காட்சியளிக்கின்றன. அதனால் ஆமைகள் அவற்றைத் தவறுதலாக உண்பதால் பெருமளவில் இறக்கின்றன. கடல் ஆமைகள் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாதுகாக்கப்பட்ட உயிரினம். அவற்றை வேட்டையாடுதல் துன்புறுத்துதல் தண்டனைக்குரிய குற்றம்.கண்ணுக்குத் தெரியாத கடல்களில் தனிமையில் வாழும் ஆமைகள் நமது சுற்றுச்சூழலுக்கும், உணவு பாதுகாப்புக்கும் இவ்வளவு நன்மைகளை செய்யும்போது, நாம் அவற்றைப் பாதுகாப்பதில் கவன் செலுத்துவோமா?
நிலவளம் ரெங்கராஜன்