For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச காச நோய் தினம்!

08:00 AM Mar 24, 2024 IST | admin
சர்வதேச காச நோய் தினம்
Advertisement

காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி (இன்று) சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

“டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா’ நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம் /இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், “காச நோயை தடுக்கும் திட்டம் 2006-2015′ என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.ஒருவருக்கு தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள். நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். பெரும்பாலானோர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிப்புக்குளாகிறார்கள்..காச நோய்க்கு இன்று மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும்கூட, இன்றும் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்க்கு 17 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறுகிறது உலகச் சுகாதார அமைப்பு. ஆண்டுதோறும் 80 - 90 லட்சம் பேர் காச நோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

Advertisement

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் முன்னொரு காலத்தில் உயிரைப் பறிக்கும் நோயாகக் கருதப்பட்டது காசநோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டு, சதா இருமலோடு வேலைக்கும் போய், குடும்பத்தையும் காப்பாற்றிக் கரைசேர்த்து உயிரையும்விட்ட தமிழ் சினிமா கதாநாயகியைப் பார்த்து கண்ணீர் வடித்த ரசிகர்களெல்லாம் இங்கே இருக்கிறார்கள். புற்றுநோயைப்போல அவ்வளவு தீவிரமான நோய் அல்ல காச நோய். ஆனால், இதுகுறித்த பயம், எல்லோரையும் ஆட்டுவிக்கக் கூடிய ஒன்று. காச நோய்க்கு மருந்து உண்டு; அதை குணப்படுத்த முடியும். என்றாலும்கூட, இன்றைய டிஜிட்டல் உலகிலும் அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை

`காசநோய்’, `எலும்புருக்கி நோய்’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் டி.பி நோய் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மனித இனத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. 3,000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய மம்மிக்களில் இருந்த எலும்புகளைச் சோதித்துப் பார்த்தபோது, அவற்றில் காச நோய் பாதித்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆசியக் கண்டத்திலும் வாழும் மக்கள் காலம் காலமாக காச நோயை எதிர்கொள்வதற்கு ஏற்ற எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மனிதன் காச நோய் என்கிற ஒன்றை நம்பவே இல்லை. சாபத்தாலும், பாவத்தாலும்தான் காச நோய் ஏற்படுகிறது என்ற எண்ணம் மனிதர்களுக்கு மேலோங்கி இருந்தது! அப்போதுதான் ராபர்ட் காக் என்ற அறிவியல் அறிஞர் `காச நோய் பாவத்தால் வருவதல்ல. அது ஒரு பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரி தொற்றுவதால் ஏற்படுகிறது’ என்பதை நுண்ணோக்கியின் மூலம் கண்டறிந்தார். அந்த உண்மையை உலகுக்கும் எடுத்துச் சொன்னார். அவர் காச நோய் கிருமியைக் கண்டறிந்த நாளான மார்ச் மாதம் 24-ம் தேதியை உலகச் சுகாதார நிறுவனம், `உலக காச நோய் தினமாக' அனுசரித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நாளை நமது இந்திய அரசும், மாநில அரசுகளும் காச நோய் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தக் கடைப்பிடிக்கின்றன.

காச நோய் பற்றிய சில முக்கியச் செய்திகள்…!

* நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.

* எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.

* புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.

* இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.

* டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* முடி மற்றும் நகம் தவிர உடலின் எந்த உறுப்பையும் தாக்கும் காச நோய்.

* நுரையீரல் காச நோய் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இருமல், தும்மல் போன்ற செய்கைகளால் பரவும். நுரையீரல் காச நோயை விரைவில் கண்டறிந்து குணப்படுத்த வேண்டியது சமூகத்தில் அதன் பரவலைத் தடுக்கும்!

* மேலும், நுரையீரல் காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது கைக்குட்டை அல்லது துண்டால் முகத்தை மூடிக்கொண்டால், காச நோய் மற்றவருக்குப் பரவும் வாய்ப்புக் குறையும்.

* இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், காச நோய்க்கான சளிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்தப் பரிசோதனை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே செய்யப்படுகிறது.

* காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மருந்து உட்கொண்டால் பூரண குணமடையலாம். இந்த மருந்துகள் அனைத்தும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே கிடைக்கின்றன,

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement