For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

🦉உலக சுனாமி விழிப்புணர்வு தினம்🌊

10:21 AM Nov 05, 2023 IST | admin
🦉உலக சுனாமி விழிப்புணர்வு தினம்🌊
Advertisement

ழிப்பேரலை என்று நம் தமிழில் அழைக்கப்படும் சுனாமி, ஒரு ஜப்பான் மொழிச் சொல்லாகும். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை என்பதன் அடிப்படையில் "துறைமுக அலை" என்ற பொருளில் சுனாமி என்றழைக்கப்படுகின்றது. சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வதால் ஏற்படக்கூடியது. ஜெட் விமானத்தின் வேகத்துக்கு இணையாகவும், சில சமயங்களில் அதைவிடக் கூடுதலாகவும் இருக்கும் என்று கூறப்படும் இந்த அலைகளின் வேகம் ஒவ்வொரு சுனாமியின் போதும் வேறுபடுகின்றது. 17 ஆண்டுகளுக்கு முன் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை அழித்தது. இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து என கணக்கிடப்பட்டாலும், இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடியப் பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கைப் பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றதால், மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை அதிகமாக கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் தேதி, இந்த உலக சுனாமி விழிப்புணர்வு நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Advertisement

அதாவது ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதற்காக அனைத்து உலக நாடுகளையும் ஒங்கிணைத்து ஐ.நா. சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாடு நடத்தியது. அதில் பேசியவர்கள் இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மக்களுக்கு அளிக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் சுனாமியில் இருந்து உயிர் பிழைத்த செக் குடியரசின் பிரதிநிதி உட்பட சிலர் பேசும்போது சுனாமி தொடர்பான தங்கள் எண்ணங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

இதேபோல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியில் தாய்லாந்து கடற்கரையில் இருந்து தப்பித்த செக் குடியரசைச் சேர்ந்த பெட்ராநெம்கோவா என்பவர் பேசும்போது, ‘‘தண்ணீர் அல்ல ஒரு பெரிய கான்கிரீட் கட்டிடம் தன் மீது விழுந்ததைப் போன்று உணர்ந்தேன். நான் தங்கியிருந்த பயணியர் விடுதி சில வினாடிகளில் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. எல்லா இடங்களிலும் இடிபாடுகளே காணப்பட்டன. எனவே இயற்கைப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடுகள் கையாள்வது அவசியம்’’ என்றார்.

முடிவில் ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5-ம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம். இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

உலகம் கண்டிராத பேரழிவு

கடந்த 100 ஆண்டுகளில் 58 சுனாமி பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இதில் 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஏறக்குறைய ஒரு பேரிடரின் போது 4,600 பேர் பலியாகி இருக்கின்றனர். இவற்றில் அதிகபட்ச உயிரிழப்புகளைப் பதிவு செய்தது இந்தியப் பெருங்கடலில் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலை சம்பவம். இதில் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்து, இது வரை உலகம் கண்டிராத மிக மோசமான இயற்கை பேரிடரை விளைவித்தது. அதன்பிறகு தான் உலகின் பல்வேறு நாடுகளும் விழிப்புணர்வுடன் சுனாமியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான மையங்களும், அமைக்கப்பட்டன.

கடலோர உயிரியல் மண்டலப் பாதுகாப்பு, உலகம் முழுவதும் சூறாவளி, புயல்கள், வெள்ளம், சுனாமி போன்றவற்றால் எளிதில் பாதிக்கும் வகையில் 700 மில்லியன் மக்கள் கடலோர, தாழ்வான மற்றும் அதிக ஆபத்து கொண்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்று தெரிவிக்கின்றது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலையே பெரிதும் சார்ந்து வாழ்கின்ற இம்மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செய்வதற்கு வாய்ப்பில்லையாதலால், இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை வசதிகளைச் செய்து தர வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது.

அது சரி.. சுனாமி ஏன் உருவாகிறது?

நிலத்தில் மட்டுமன்றி, கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் உருவாகின்றன. அதன் விளைவாகத்தான் சுனாமிகளும் தோன்றுகின்றன. எல்லாப் பூகம்பங்களும் சுனாமியைத் தோற்றுவிப்பதில்லை. மிகக் கடுமையான பூகம்பங்கள் மட்டுமே சுனாமியை உருவாக்குகின்றன.

சுனாமி எப்படி இருக்கும்?

கடலுக்கு அடியில் பூகம்பம் நிகழும் இடத்திலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கும் நிலப்பகுதி சுனாமியால் தாக்கப்படலாம். அப்படி என்றால் சுனாமியின் ஆற்றல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

சுனாமி வரும்போது கடல் நீர் 10 முதல் 30 மீட்டர் உயரம் வரை மேலே செல்லும். அதிவேகத்தில் நிலத்துக்குள் புகுந்து, அனைத்தையும் மூழ்கடித்துவிடும். பிறகு வந்த வேகத்தில் கடலுக்குள் நீரை இழுத்துச் செல்லும். இப்படி வந்து செல்லும்போது உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் அதிக அளவில் ஏற்படுத்திவிடும்.

சுனாமி வரும்போது எப்படித் தப்பிக்கலாம்?

சுனாமி வருவதற்கு முன்பு கடல்நீர் உள்வாங்கும். அப்போதே ஆபத்தை உணர்ந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும். ஆனால், மக்கள் கடல் உள்வாங்குவதை அதிசயம் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.

நடுக்கடலில் கப்பலுக்கு ஆபத்து ஏற்படாதா?

சுனாமி வரும்போது நிலத்திலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதே, நடுக்கடலில் இருக்கும் கப்பல் என்னவாகும் என்று தோன்றுகிறதா? நடுக்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு சுனாமியால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. கப்பலில் இருப்பவர்களால் சுனாமி வந்ததைக்கூட உணர இயலாது. காரணம், நிலத்தில் 10 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஏற்படும் அலைகள், நடுக்கடலில் ஓர் அடி உயரத்துக்குத்தான் ஏற்படுகின்றன. அதனால் நடுக்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு சுனாமியால் பாதிப்பு இல்லை. சுனாமி நிலத்தில் மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே சுனாமி வருவது முன்கூட்டியே தெரிந்தால், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களை நடுக்கடலுக்குள் கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

முன் எச்சரிகைகள்

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அண்டை நாடுகள் தாராளமாக உதவிக் கரம் நீட்டு கின்றன. இது ஆரோக்கியமான செயல்தான். அதேசமயத்தில் பேரிடர் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் விஷயத்திலும் அண்டை நாடுகள் பெரிய மனதோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர், பத்திரிகை, ஊடகவியலாளர்கள் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கடற்கரை ஓரங்களில் பொழுது போக்கு பூங்காக்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை அமைப்ப தற்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது. அரசு இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் பெருமளவு உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கலாம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement