தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக சுனாமி விழிப்புணர்வு நாள்!

06:13 AM Nov 05, 2024 IST | admin
Advertisement

லக அளவில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களால் 2004 டிசம்பர் 26ஆம் தேதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? சுனாமி தாக்குதல் நடந்து ஆண்டுகள் 20 கடந்து விட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஆங்காரமான சப்தம் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்போது 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்ற கொடிய இயற்கை பேரழிவைான ஆழிப் பேரலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும், நவம்பர் 5 ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப் படுகிறது.

Advertisement

சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. ஜப்பான் மொழியில் சு (Tsu) என்றால் துறைமுகம் (Harbour). நாமி (nami) என்றால் அலையை (wave) குறிக்கும். சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை " என்று அழைக்கப்படுகிறது.ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன் புலூக்" என்று அழைப்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் “சுமாங்" என்றும், சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைக்கப்படுகிறது.

Advertisement

சுனாமி பேரழிவு அரிதான ஒன்றாக இருந்தாலும் இதன் தாக்கம் மிகக் கொடுமையானது. கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து ராட்சதஅலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதைத்தான் சுனாமி என்று அழைக்கிறார்கள்.கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண் கல் விழுதல் ஆகியனவற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.சுனாமி அபூர்வமாக நிகழக் கூடியதுதான். எனினும் இயற்கைப் பேரிடர்களில் அதிகபட்ச உயிரிழப்பையும், பலத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமிக்கு எல்லையே கிடையாது.கடந்த 100 ஆண்டுகளில் நடந்த 58 சுனாமி தாக்குதல்களில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலே சமீபத்திய அதிக உயிரை காவுவாங்கிய இயற்கை பேரழிவாகும். அப்போது நிகழ்ந்த ஆழிப்பேரலையில் சிக்கி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பலியானார்கள்.

காரணம்

பொதுவாக சுனாமி ஏற்பட நான்கு முக்கியக் காரணிகள் உள்ளன. அவைகள்:

நிலநடுக்கம்,

நிலச்சரிவு,

எரிமலை வெடிப்பு,

கிரகங்களுக்கு இடையேயான மோதல் - extraterrestrial collision (சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள் (asteroid), விண்கற்கள் (meteors) ஆகியவை ஆகும்).

1. நிலநடுக்கம்

கடற்கரை பகுதிகள், கடலுக்கு அடியில் பெரிதளவில் நிலநடுக்கம் ஏற்படும்போதும் சுனாமி ஆழிப்பேரலைகள் எழுகின்றன.இந்த நிலநடுக்கங்கள் ரிக்டா் அளவுக்கோலில் 6.5ஐ தாண்டும்போது ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நிலநடுக்கத்தின் காரணமாக கடலுக்கு அடியில் பாறைகள் நகர்வுகளாலும் சுனாமி ஏற்படுகிறது. கடலுக்குள் செங்குத்தான நிலையில் நிலநடுக்கம் ஏற்படும்போதும் சுனாமி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.

2. நிலச்சரிவு

அதேபோல், நிலச்சரிவு ஏற்பட்டு கடலுக்குள் அதிகப்படியான தண்ணீர் செல்லும்போதும் சுனாமி அலைகள் எழும்பும்.

3. எரிமலை

கடலுக்கு அடியில் அல்லது கடலுக்குள் உள்ள பெரிய எரிமலைகள் வெடித்துச் சிதறும்போதும் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது. 1883 ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள கிரகட்டோவா (krakatoa) என்னும் எரிமலை வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக 135 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்துவந்து தாக்கின. இந்த சுனாமி தாக்குதலுக்கு 36 ஆயிரத்து 417 பேர் பலியானார்கள்.

4. கிரகங்களுக்கு இடையேயான மோதல்

அடுத்ததாக கிரகங்களுக்கு இடையேயான மோதல். இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். சமீபத்திய காலங்களில் இதுபோன்ற சுனாமி தாக்குதல்கள் நடைபெறவில்லை. வானில் நடக்கும் தாக்குதல்களால், கடல் அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திவருகின்றனர்.

சமிக்ஞை

சுனாமி ஏற்படும் முன்னதாக கடலுக்குள்ளிருந்து ஒருவித பயங்கரமான சப்தம் (உறுமல் போன்ற இரைச்சல் ஒலி) கேட்கும். அந்த சப்தம் விமானம் அல்லது ஏவுகணைகள் பறப்பதுபோல்கூட இருக்கும். இதை நீங்கள் உணர்ந்தால் சற்றும் தாமதிக்க வேண்டாம். எவ்வித உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டாம். அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக நகர்ந்துவிடுங்கள். அதாவது தாழ்வான பகுதியில் நிற்க வேண்டாம். உயர்வான பகுதிக்குச் சென்றுவிடுங்கள்.

சுனாமி நேரங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அரசுத் தரப்பில் சில எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வானுயர்ந்த கட்டடங்கள், பெரிய கனரக இயந்திரங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்களை சுனாமி தாக்குதலிலிருந்து முழுவதுமாகக் காப்பாற்றாது. ஆனால் தாக்குதலின் வீரியத்தைக் குறைக்கலாம், தற்காலிக பாதுகாப்பு அளிக்கலாம். ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலில் கட்டடத்தில் பாதுகாப்பாக இருந்த பலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனால் உயிர் இழப்பு அதிகரித்தது.

2004ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலுக்குப் பின்னர்தான், அதுகுறித்த விழிப்புணர்வு இந்தியாவுக்கு தெரியவந்தது. சுனாமி தாக்குதலை முன்கூட்டியே கண்டறியும் கருவி கண்டுபிடிப்பது குறித்தும் பேசப்பட்டது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சுனாமி குறித்து ஆய்வு செய்யும் பல்கலைக்கழகங்கள் ஜப்பானில் அதிகம் உள்ளன. ரஷ்யா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இது குறித்த படிப்புகள் தற்போது காணப்படுகின்றன.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5-ம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம். இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
5 Novembeawareness dayoceanraise awarenessTsunami DaytsunamisWorld Tsunami Awareness Dayசுனாமிசுனாமி விழிப்புணர்வு தினம்பேரிடர் மேலாண்மை
Advertisement
Next Article