For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக சிந்தனை தினமின்று!

08:36 AM Feb 22, 2024 IST | admin
உலக சிந்தனை தினமின்று
Advertisement

1926-ஆம் ஆண்டு பெண்கள் வழிகாட்டி மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.அமெரிக்காவில் நடந்த 4-ஆம் உலக மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

பிப்ரவரி 22-யை ஏன் தேர்ந்தெடுத்தனர்?

பிப்ரவரி 22-ஆம் தேதி ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த தினம் ஆகும்.எனவே அவர்கள் பிறந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே சிறப்பு நாளாக கொண்டாடுவது என முடிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி 22 சிந்தனை தினமாக கொண்டாடி வந்தனர். ஐ.நா. அங்கீகரித்த நிலையில் 1932-ஆம் ஆண்டில் இருந்து சிந்தனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகெங்கிலும் இருந்து நன்கொடை பெற்று இந்த இயக்கத்தை மேலும் உயர்த்த முடிவு செய்து அதன் படி செயல்படுத்தி வர்றாங்க.

Advertisement

சிந்தனையே புதிய தொடக்கத்துக்கான திறவுகோல் சிந்தனை இல்லை என்றால் அறிவியலும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்திருக்காது இது தவிர நம்முடைய அடுத்த செயலுக்கும் அடிப்படையாக இருப்பது சிந்தனை தான். “சிந்தனை என்பது உள்ளத்தின் விளக்கு” என்னும் மலேசியப் பழமொழிக்கேற்ப ஒரு நல்ல சிந்தனை ஒளியைப்போலவே நிறைய விளக்குகளை ஒளிரச் செய்யும். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஐசக் நியூட்டனின் சிந்தனை புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஆணிவேராய் இருந்தது. புவியீர்ப்பு விசை உண்டென்றால் அவ்விசையிலிருந்து விடுபட்டால் நாம் விண்ணில் எளிதாகப் பறக்க முடியும் என்ற அடுத்த சிந்தனை உருவாகியது. விடுபடு திசைவேகத்தின் மூலம் உலகப் பரப்பிலிருந்து பறந்து நிலவிலே காலடி வைத்தான் மனிதன். அச்சிந்தனையை மெருகேற்றியதால் இன்று செயற்கைகோள்களை அனுப்பி மண்ணிலிருக்கும் நாமனைவரும் அலைபேசிகளால் ஒன்றிணைந்தோம்.

சிந்தனையே உலக வளர்ச்சியின் திறவுகோல், சிந்தனை இல்லாவிட்டால் அல்லது சிந்திக்க தெரியாவிட்டால் நாம் இன்னும் மிருகங்களைப்போல்தான் சுற்றித்திரிந்திருக்க வேண்டும். நமது ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருப்பது சிந்தனைதான்....சிந்தனை என்பது முன்னேற்றப் பாதைக்கான வழியாக இருந்து, அவ்வழியில் ஏற்படும் பிரச்னைகளை நீக்க உதவுகிறது....நற்சிந்தனை நல்ல மனிதனை உருவாக்குகிறது. ஆகையால், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், செயல்கள், பழக்கவழக்கங்கள், பண்பு போன்ற அனைத்தையும் கவனமாக சிந்தித்து மேற்கொண்டால் வாழ்க்கை மேன்மை அடையும்....!

அதே சமயம் சிறிய பிரச்சினைகளை பெரிய சுமையாகச் சுமப்பவர்கள் ஆரோக்கியமற்ற சிந்தனையாளர்கள். ஆயிரம் பிரச்சினைகளையும் “இதுவும் கடந்து போகும்” என்று நினைப்பவர்கள் ஆரோக்கியமான சிந்தனையாளர்கள். பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுபவர்கள் உலகளாவிய சிந்தனையாளர்கள். “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கேற்ப நற்சிந்தனை நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. சிந்தனைகளை கவனியுங்கள்; அவை வார்த்தைகளாக மாறும்; வார்த்தைகளை கவனியுங்கள்; அவை செயல்களாக மாறும்; செயல்களை கவனியுங்கள்; அவை பழக்கமாக மாறும்; பழக்கங்களை கவனியுங்கள்; அவை பண்பாக மாறும்; பண்பினை கவனியுங்கள்; அதுவே வாழ்க்கையாகும்.

சிம்பிளாகச் சொல்வதானால் சிந்திக்கும் திறன் மட்டும் இல்லாவிட்டால் உலகில் வளர்ச்சி என்பது நடந்தேயிருக்காது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிந்தனையாளர் தோன்றிதான் நாம் இன்றைய இந்த வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். எனவே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டேயிருப்போம். அந்த சிந்தனைகள் நம் எதிர்காலத்தை வளமாக்கட்டும். நமது பூமியை செழிப்பாக்கட்டும். நற்சிந்தனைகள் எல்லா இடத்திலும் ஓங்கி வளரட்டும். இந்தாண்டு கருப்பொருளான சுற்றுச்சூழல், அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது சிறப்பாக செயல்படுத்த அனைவரும் உலக சிந்தனை நாளில் உறுதி பூணுவோம்.

ஆக இதை எல்லாம் சிந்திக்கவே இத்தினமா(க்)கும்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement