உலக தையல்காரர் தினமின்று!
1845ஆம் ஆண்டில் பூட்டு தையல் வளைய முறையைப் பயன்படுத்தி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த வில்லியம் எலியாஸ் ஹோவ், பிறந்தநாளான பிப்ரவரி 28 உலக தையல்காரர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆள் பாதி ஆடை பாதி என வெளித் தோற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒரு பழமொழியைக் கூறுவார்கள். அந்த பழமொழியின் அர்த்தம் போல தான் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட முக்கிய காரணியாக விளங்குவது உடை தான்.இன்றைய காலகட்டத்தில் புத்தாடைகள் வாங்குவது என்பது சாதாரணமாகி விட்டது. ஆனால் 90'ஸ்களின் காலகட்டம் வரை பண்டிகைக் காலங்களிலும், பள்ளி துவங்கும் முன்னர் தான் புத்தாடை தைக்கும் பழக்கம் இருந்தது. ஆம் சரியாகத் தான் படித்தீர்கள். தற்போது வீதியெங்கும் ஆயத்த ஆடைகள் ஆலம் விழுதாகக் கிளை பரப்பி இருந்தாலும் அந்தக் காலங்களில் துணி எடுத்து அளவெடுத்துத் தைக்கும் பழக்கம் தான் வெகுவாக இருந்தது.
முன்பெல்லாம் தீபாவளி, கோவில் திருவிழாக்கள், பள்ளி திறக்கும் நாட்களில் துணிகளை டெய்லரிடம் மக்கள் கொடுப்பார்கள். டெய்லர் பொறுமையாக அளவு எடுத்து, அதற்கென வைத்திருக்கும் ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்வார். சில நாட்களுக்குப் பிறகு தான் தைக்கப்பட்ட புத்தாடை கைகளில் கிடைக்கும். ஆசையாசையாக எடுத்த துணி அளவெடுத்துத் தைத்து முடித்து கைக்குக் கிடைக்கும் வரை மக்கள் அதற்காக ஆர்வமாகக் காத்திருப்பார்கள்.அந்த புத்தாடை வந்தவுடன் அதற்கு பொட்டு வைத்து சாமி கும்பிட்டு பின்னர் தான் அதனை அணிந்து கொள்வார்கள். திருமணம், திருவிழா என எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு பல வாரங்களுக்கு முன்னரே புத்தாடை அணிவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கிவிடும். அந்த அளவிற்கு அந்த காலங்களிலும் புத்தாடைகளும், டெய்லர்களும் மக்களின் மகிழ்ச்சியான தருணங்களில் முக்கிய பங்காக இருந்தனர்.
மேலும் அந்தக் காலத்தில் பெரிய முதலீடு எதுவும் இல்லாமல், ஆண்கள், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்கக்கூடிய தொழிலாக தையல் தொழில் இருந்தது. இதற்கு ஒரு தையல் எந்திரமும், நூல், ஊசி, பொத்தான், கத்தரிக்கோல், அளவெடுக்கும் பட்டை இருந்தாலே போதும். சொந்தமாக தையல் தொழில் தொடங்கி சம்பாதிக்க முடியும்.வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசவும், நேர்த்தியாக, ரசனையாக ஆடைகளைத் தைக்கத் தெரிந்திருந்தால் இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம். முன்னரே சொன்னது போல் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி ஆர்டர்களுக்கு 3 மாதங்கள் வரை விடிய விடிய இருந்து தைப்பார்கள். தற்போது நிலைமை தலைகீழ். அதிகபட்சம் 20 நாட்கள் தைப்பதற்கு துணிகள் வருவதே அபூர்வமாக உள்ளது.பள்ளிச் சீருடைகளைத் தைக்கவே தற்போது அதிக அளவு துணிகள் வருகின்றன.
அதே சமயம் விழாக்காலங்களில் மக்கள் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளையே அணிகின்றனர். அதற்கான வேலைவாய்ப்பு இன்னமும் இருக்கிறது. அதனால், தரமாகவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் ரசனைக்கேற்ப ஆடைகளைத் தைத்துக் கொடுத்தால் தையல் தொழிலை லாபகரமாகச் செய்யலாம். தையல் கலைஞர்களின் தையல் 10 ஆண்டுகளானாலும் அப்படியே இருக்கும். ஆனால், ஆயத்த ஆடைகளில் அதை எதிர்பார்க்கவே முடியாது. எந்த ஒரு வடிவமைப்பையும் பொதுவாகவே செய்வார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
எனி வே ஹேப்பி டெய்லரிங் டே