சர்வதேச பாம்புகள் தினம்
இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி சர்வதேச பாம்புகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சின்னஞ்சிறிய புழு முதல் மிகப்பெரிய யானை வரையிலான அத்தனை உயிர்களுக்குமான இருப்பிடமாக திகழ்கிறது இப்பூவுலகு. இதில் வாழ்வதற்கு மனிதனுக்கு இருக்கும் உரிமைகள் அத்தனையும், புழு, பூச்சிகள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஒன்றின் கழிவு ஒன்றின் உணவு என்ற சித்தாந்தப்படி, ஒவ்வொரு உயிருக்குமான வாழிடம், உணவு என அனைத்தையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறது இயற்கை. 'இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்' என இயற்கை வரையறுத்துள்ள லட்சுமணக்கோட்டை, அடிக்கடி மீறுவது மனிதன் மட்டும் தான். அந்தவகையில் உலகில் மிகவும் விசித்திரமான பிராணி மனிதன்தான் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.
எந்த இனமும் அரிதி பெரும்பான்மையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவளையை பாம்பு தின்கிறது. பாம்பை, கழுகு தின்கிறது. இப்படி நடந்தால்தான் பல்லுயிர் பெருக்கம் பலப்பட்டு, உயிர்சங்கிலி உடையாமல் காக்கப்படும். ஆனால், மனிதன் தனக்கு நன்மை செய்யும் உயிரினங்களை மட்டும் விட்டு விட்டு, தீமை செய்யும் உயிரினங்களை அழிப்பதில் வெகு முனைப்பு காட்டுகிறான். அந்த வகையில் மனிதனின் எதிரி உயிரினங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவை பாம்புகள். உயிர்ச் சமநிலையை பேணுவதில் பாம்புகள் மிக முக்கியமானவை. குறிப்பாக நம்மைப் போன்ற விவசாய நாட்டில் எலிகளை கட்டுப்படுத்துவது என்பது, மிகச் சவாலான ஒரு செயல். ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன. அதிலும், உணவுதானிய சேமிப்புக் கிடங்குகளில் எலிகளால் வீணாகும் தானியங்களின் அளவு கணக்கற்றது.
கொஞ்சம் விரிவாக சொல்வதானால் இந்த எலிகளை கட்டுப்படுத்துவதில் மிக மிக முக்கியமான பங்கு பாம்புகளுடையது. பாம்பு என்கிற உருவத்தை பார்த்தவுடன் பயமும் அவற்றை கொல்வதற்கான முயற்சிகளுமே உடனே நடக்கிறது. அத்தனை பாம்புகளும் ஆபத்தான விசமுடையவையா என்றால் அதுவும் இல்லை. உலகளவில் 3,458 வகை பாம்பு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில் 600 வகை பாம்புகளே நஞ்சுள்ளவை. அதிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதனை கொல்லும் அளவுக்கு விஷமுள்ளவை. இந்தியாவை பொறுத்தவரை நான்கு வகைகள் மட்டுமே மனிதனைக் கொல்லும் விஷம் உள்ளவை. அவற்றில் நல்ல பாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் போன்றவை கொடிய நஞ்சுடைய பாம்புகள்.மனித குடியிருப்பு பகுதியில் அதிகமாக காணப்படக்கூடிய சாரைப்பாம்பு, மலைப்பாம்பு, மண்ணுளிபாம்பு, தண்ணீர்பாம்பு, கொம்பேரி மூக்கன் போன்றவை நஞ்சற்ற பாம்புகளாகும். பச்சைபாம்பு, பூனைபாம்பு போன்ற பாம்புகள் குறைந்த நஞ்சுடையவை. இந்தியாவில் பொதுவாக பாம்புகளை பற்றிய தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்பி வருகின்றனர்.
பாம்பு பால் குடிக்கும், பழிவாங்கும், மகுடிக்கு மயங்கும், நல்லபாம்பும் சாரைபாம்பும் இனச்சேர்க்கையில் ஈடுபடும், பாம்பின் தலையில் மாணிக்க கல் உள்ளது என்பன போன்ற தவறான வதந்திகளை நம்புகின்றனர். நல்ல பாம்புகளில் ஆண் மற்றும் பெண் இனப் பாம்புகள் உள்ளன. அதேபோல் சாரை பாம்பிலும் ஆண், பெண் இனம் உள்ளன. பாம்புகள் வசிக்கும் இடங்கள் என நாம் நினைக்கும் இடங்களில் கூடுதல் கவனமாக இருந்தால் போதும். மின்சாரம் தொட்டால் ஆளையே காலிசெய்து விடும். அதற்காக மின்சாரத்தை பயன்படுத்தாமலா இருக்கிறோம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம். அதுப்போலத்தான் பாம்புகளும். நாம் பாதுகாப்புடன் இருந்தால் பாம்புகளால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை.
உலகளவில் இந்தியாவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பாம்பு கடியால் இறக்கிறார்கள். ஆனால், பாம்பு கடித்து இறப்பவர்களில் விஷம் ஏறி இறப்பவர்களை விட, அதிர்ச்சியால் இறப்பவர்களே அதிகம். உலகில் அதிக நச்சுப்பாம்புகள் உள்ள ஆஸ்திரேலியாவில், பாம்புகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கே பத்துபேர் இருந்தால் அதிகம். ஆக, பாம்புகளை பற்றிய விழிப்பு உணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். பாம்பை கண்டதும் உடலில் அட்ரீனல் சுரந்து, பயமும் பதட்டமும் அதிகமாகி வேகமாக ஓடத்தோன்றும். இப்படி பாம்புகளை பற்றிய பயத்தை, 'ஒப்கிடோபோபியா' என்கிறார்கள்
எப்படிப் பாதுகாப்பது ? மனிதர்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாம்புகள் ஒருபோதும் மனிதர்களை தேடி துரத்தி தாக்குவதில்லை. ஏனென்றால் மனிதர்கள் பாம்புகளுக்கு இயற்கை இரையல்ல. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி இல்லாமல் பாம்புகளை தனி மனிதர்கள் பிடிக்கக் கூடாது. பாம்புகளை அடிப்பது, வேறு இடத்துக்கு கடத்துவது குற்றமாகும்.
இதை எல்லாம் சகலருக்கும் புரிய வைக்கும் நாளே இந்த உலக பாம்புகள் நாளாக்கும்!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்