உலக சித்தர்கள் தினம்....💚......இன்று!
உலக சித்தர்கள் தினம் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. அதாவது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 2009 ஏப்ரல் 14 இல் சித்திரைப் புத்தாண்டு நாளை உலக சித்தர்கள் நாளாக அறிவித்தார். இதனை அடுத்து முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு உரையாற்றினார். 2வது உலக சித்தர்கள் நாள் 2010 ஏப்ரல் 14 இல் சென்னை, அடையாறில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 2000 த்திற்கும் அதிகமான சித்த மருத்துவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்[2]. மூன்றாவது சித்தர்கள் நாள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் 2011 ஏப்ரல் 14, 15 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது.
👣சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள் என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும்.இதை ஒளவையார் `எறும்பும் தன் கையால் எண் சாண்' என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இச்செயல்களை மருத்துவக் கண்ணோட்டமுள்ளவர்கள் அறிவர்.
இன்று நவீன மருத்துவ முறையில் உடற்கூற்றுத் தத்துவங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சித்தர்கள் இத்தத்துவங்களை தன் உடலையே சோதனைச்சாலையாக்கி அறிந்து, ஆன்மீகப்பெயர்களில் இவற்றை அழைத்துள்ளனர். மனித உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் பகுத்தனர்.
சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங்களில் (உடலின் வேதியியலில்) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும். உதாரணமாக நீர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண்டும். அது போல் நாடிகள் சர்வர இயங்க வேண்டும்.
இதுதவிர, மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும் இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன்1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர்.
முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள் பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர்( திருமந்திரம்729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச்சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.
முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள்.
சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எகிப்து, மெசபடோமியா, சீனா, கிரேக்க மருத்துவங்களுக்கு முற்பட்டது தமிழரின் சித்த மருத்துவம். ரத்தத்தின் தன்மை, வேகம், அழுத்தத்திற்கு ஏற்ப துடிக்கும் நாடித்துடிப்பைக் கொண்டு நோய் கணிக்கப்படுகிறது. இதை வளி (காற்று) என்ற வாதம், அழல் (நெருப்பு), பித்தம், ஐயம் (நீர்) என்ற கபத்தை சித்த வைத்தியர்கள் கணிக்கின்றனர். அதை 96 தத்துவங்களின்படி ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐம்பூதங்கள், மனம், சித்தம், ஆதாரம், நாடி நரம்புகள், தேகம், செயல்கள், மெய்ஞானத்தால் நோயாளிக்கு ஏற்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன.
பண்டை காலத்தில் சித்த மருத்துவர்கள் நோயாளியின் சிறுநீர், மலம், வியர்வை, ரத்தத்தை கொண்டு சிக்கலான நோய்களை கணித்தனர். மொத்தம் 4,448 நோய்கள் மனித சமுதாயத்தை பாதிக்கின்றன. இதில், 500 நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படாது; பிற நோய்களை மணி என்ற உயர்தர உலோக மருந்துகள், மந்திரம் என்ற யோகமுறை வாழ்வு, அவிழ்தம் என்ற சாதாரண மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்பது சித்த மருத்துவக் கொள்கை. அகத்தியர், போகர், திருமூலர், யூகி முனிவரின் மெய்ஞானத்தால் விளைந்த ஓலைச்சுவடிகளே இன்றைய சித்த மருத்துவ பாடநூல்கள். ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் துவங்கும் முன் சித்த மருத்துவம்தான் முதன்மை வகித்தது. ஆங்கிலேயர் உடலை காக்க இந்தியாவில் நுழைந்த மேற்கத்திய டாக்டர்கள் மற்றும் அவர்களின் மருந்துகளின் மேல் மக்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பே அலோபதி மருத்துவம். இதனால், சித்த மருத்துவ பயன்பாடு குறைந்தது.
ஆம்.. முன்னொரு காலம் இந்த சித்தர்கள் மூலம்
♦ பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சவால் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருள்களை, மூலிகைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கினார்கள்
♦ எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் .
♦ முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.
♦தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞானசக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்து அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்துக்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.
♦ கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம் சிமிழ் வித்தை, சூத்திரம், சிற்ப நூல் மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரே சமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உள்ளனர்.
♦ அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர் பெருமக்களும் உள்ளனர். சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோயில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
♦ மருந்துகள் மட்டுமன்றி பத்திய முறைகள், யோகம், வர்மம், கொக்கணம் போன்றவைகளும் சித்தர்கள் வகுத்த நோய் தீர்க்கும் வழிகளாகும். கலப்படமில்லாத உணவு, கள்ளமில்லா மனது, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் நாமும் சித்தர்கள் போன்று மரணத்தை வெல்லலாம்.
இதன் மேல் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட வியப்பு, இந்திய முறை மருத்துவர்களின் போராட்டத்தால் 1822 ல் கோல்கட்டாவில் பாரம்பரிய மருத்துவக் கல்வி நிலையம் துவக்கப்பட்டது. பின் இந்நிறுவனம் மூடப்பட்டது. பின், 1918 ல் டாக்டர் ராவ் சாகிப் தலைமையில் சித்த மருந்துகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அதன் மாறுபட்ட பரிந்துரையால் இந்திய மருத்துவமுறை வளர்ச்சி தடைபட்டது.
பின்னர் 1921ல் உஸ்மான் குழு இந்திய மருத்துவத்திற்கு ஆதரவாக பரிந்துரைத்தது. இதை அடுத்து அரசு, 1923 ல் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவமுறை பள்ளியை ஏற்படுத்தியது. 1964 ல் மேத்தா குழு பரிந்துரைப்படி இந்திய மருத்துவத்தை மட்டும் தனி பாடமாக கொண்டு சென்னை, பாளையங்கோட்டையில் கல்லூரிகள் துவக்கப்பட்டன. 1970 ல் இந்திய மருத்துவமுறை கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. 1982 ல் திருநெல்வேலி, 1985 ல் பழநி (தற்போது சென்னை), 2005 ல் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னையில் பி.எஸ்.எம்.எஸ்., - எம்.டி., சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டன. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் இணைந்து 'ஆயுஷ்' என்ற பெயரில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்குகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ பிரிவு செயல்படுகிறது. தமிழகத்தில் 1,500 அரசு சித்த மருத்துவர்கள், 3,000 தனியார் சித்த மருத்துவர்கள், 5,000 அரசு பதிவு பெற்ற பாரம்பரிய மருத்துவர்கள் உள்ளனர். இதன் மீது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சுவீடன், கனடா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
பிற நாடுகளின் விஞ்ஞானிகள் சித்தர்களின் நூல்களை மொழி பெயர்க்கின்றனர். ஜெர்மன், பிரிட்டன், சீனாவில் உலக பாரம்பரிய மருத்துவ ஆய்வு மையம் ஏற்படுத்தி, இந்திய மருத்துவத்தை பதிவு செய்து வருகின்றனர்.
உலக சித்தர்கள் தினமான இன்று பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி, பிணியற்ற சமுதாயம் படைப்போம் என்று உறுதி கொள்வோம்.