தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக அகதிகள் தினமின்று!

07:13 AM Jun 20, 2024 IST | admin
Advertisement

லகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

Advertisement

ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது 4.1 செகண்ட்டுகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக கடந்த 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகின்றது. இதில் 95% வீதமான ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் உலகளவில், சுமார் 7 கோடி மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இதில், 51 சதவிகிதம் பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது வருந்தத்தக்கது. ஆப்கானிஸ்தான், இராக், சோமாலியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிருந்தே அதிக மக்கள் வெளியேறுகின்றனர். உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கென்யாவிலுள்ள டடாப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சுமார் 3.29 லட்சம் அகதிகள் வாழ்ந்துவருகின்றனர். அப்படி அகதிகளாக வெளியேறியுள்ள மக்களில் 86 சதவிகிதம் பேருக்கு அடைக்கலம் கொடுப்பதே வளரும் நாடுகள்தாம் என்கிறது ஐ.நா. அகதிகள் ஆணையம். உலகில் அதிக நாடுகளில் வாழும் அகதி மக்கள் இலங்கைத் தமிழர்கள்தாம் என்கிறது ஐ.நா-வின் கிளை அமைப்பான UNICEF. இலங்கைத் தமிழர்கள் உலகெங்கிலும் உள்ள 54 நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தில் சுமார் 4.5 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு, நாடற்று இருந்த ஐரோப்பியர்களுக்காக 1950, டிசம்பர் 14- ம் தேதி தொடங்கப்பட்டதுதான் ஐ.நா. அகதிகள் ஆணையம். அகதிகளைக் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றுவது, அகதி மக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது எனப் பல நாடுகள் எடுக்கும் அதிரடி முடிவுகளைத் தடுக்க, 2016- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்மட்டக் குழு ஒன்றைக் கூட்டியது ஐ.நா. சபை. அதில், ``அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறியது. மேலும், அகதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் கல்வி, மருத்துவம், பணியாற்றும் உரிமை ஆகியவற்றை வழங்கவேண்டு என்றும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு, பஞ்சத்தில் அடிபட்டு, தஞ்சம் அடைய இடம் தேடி, அகதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம். முகாம்களில், முகம் தெரியாமல், முகவரி தொலைத்து ஏங்கி தவிக்கும் உள்ளங்கள். வேற்று நாட்டவர்கள் என்ற கட்டுப்பாட்டில், திறந்த வெளியில் கைதிகளாக சிறைப்படுத்தப்படும் கொடுமை.

துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்ததால் நிம்மதி இழந்த இவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்ல; நலம் நாடி வந்தவர்கள். வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். போரில் உயிர் பிழைத்து, சொந்த நாட்டில் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து, அகதியாய் வந்த நாட்டிலும் உரிமைகள் இல்லை. என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இவர்களது வாழ்க்கை, காலத்தின் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது..!அதே சமயம் அரவணைக்கப்பட வேண்டியவர்கள் இந்த அகதிகள் என்பதை நினைவில் கொள்வோம்!

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
culturalinternationalInternational DayRefugeesWorld Refugee Dayஅகதிகள்உலக அகதிகள் தினம்
Advertisement
Next Article