உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்!
மனிதநேய முத்திரையோடு உலகளாவிய ரீதியில் பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவதுதான் செஞ்சிலுவைச் சங்கம். ஒரு மனிதனிடம் நாடு, இனம், மொழி, மதம், ஜாதி, நிறம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிர்களை காக்க உருவாக்கப்பட்ட இயக்கமே செஞ்சிலுவை சங்கம். ஒரு நாடு இன்னொரு நாடுடன் போர் செய்யும் போது அதில் ஏற்படும் இழப்புகளை மீட்க வேண்டும். முதலில் உயிர்களை மீட்டால் தான் அவர்களுக்கு தேவையான உடமைகளை தர முடியும். அந்த சேவை மனப்பான்மையை அடிப்டையாக கொண்ட அமைப்பு இது. அப்பேர்பட்ட செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஒப்பில்லா மனிதர் ஹென்றி டூனன்ட் பிறந்த தினம் ‘உலக செஞ்சிலுவை தினம்’-ஆண்டுதோறும் மே-8 -ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
1828 மே 8 ல் சுவிட்சர்லாந்த் நாட்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட். கல்வியிலும் சிறந்து விளங்கியவர். முதலில் ஜெனிவா வங்கியில் வேலை செய்தார். அந்த வேலை அவருக்கு மன நிறைவை தரவில்லை. பின்னர் விவசாயம் செய்யலாம் என்று முடிவு எடுத்து அதற்கான பணிகளை மேற் கொண்டார்.நிலங்களை முழு வீச்சில் தயார் செய்யும் பணியில் இறங்கினார். அந்த நிலத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. அதற்கான தண்ணீர் வாங்க வேண்டும் என்றால் பிரெஞ்சு அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதியை பெற பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை பார்க்க பலமுறை முயற்சி செய்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஹென்றி டுனாண்ட் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து நெப்போலியனை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இருவரும் சந்தித்த இடம் போர்க்களம். அங்கு பல உயிர்கள் மரணத்தில், பல உயிர்கள் மரண விளிம்பில், மற்ற உயிர்கள் கை-கால்களை இழந்து துடித்துக்கொண்டு இருந்தது. இதை பார்த்த ஹென்றி டுனாண்ட் கண்களில் கண்ணீர் வடிந்தது. தண்ணீருக்கு சென்ற மனம் கண்ணீருக்கு பஞ்சம் இல்லாமல் நிலத்தில் ரத்த வெள்ளத்தில் கலந்தது. அந்த அவலங்களை கண்டு தனது விவசாய கனவை புதைத்தார். அவரது மனதில் மனித நேய விதை முளைக்க ஆரம்பித்து விட்டது. காயப்பட்டவர்களின் உயிரி காக்க, உதவி செய்ய உருவாக்கிய அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். தன்னுடைய வருமானம் அனைத்தையும் அதில் முதலீடு செய்து சங்கத்தை வளர்த்தார். பல்வேறு நாடுகளும் செஞ்சிலுவை சங்கத்தோடு இணைந்தன. தொழில் நஷ்டம் ஏற்பட்ட போதும், செஞ்சிலுவை சங்கம் வெற்றிகரமாக மக்களுக்கு உதவியது. இது சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நடுநிலையான மனிதநேய அமைப்பாகும். உலகில் மக்கள் பாதிப்பு அடையும் போது சர்வதேச உரிமைச்சட்டத்தின்படி நடைமுறைப்படுத்தும் மனித நேய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
அதே போல நாடுகள் இடையே போர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மனித உரிமைகளை கண்காணிக்கிறது. அவ்வாறு உரிமை மீறல் நடந்தால், உடனே இந்த அமைப்பு சர்வதேச மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு பதிவு செய்யும்.இக்கட்டான காலக்கட்டத்தில் நாடுகள் கடந்து, ஒரு மனிதனின் உயிரை காக்கும் கடவுள் போல செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் உள்ளன. முதலில் 15 நாடுகள் மட்டுமே இந்த அமைப்புகளில் இடம்பெற்று இருந்தன. தற்போது 192 நாடுகள் செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்பினராக உள்ளன. அந்த நாடுகளில் சுகாதார சேவை, மருத்துவ சேவை, முதலுதவி சேவை, நிவாரணம் என பல்வேறு மனிதாபிமான சேவைகளை அந்தந்த நாட்டின் அரசுடன் சேர்ந்து செய்கிறது.
போர்கள் நடந்து முடிந்த பிறகு அந்த இடத்திற்கு சென்று, பழைய நிலையை உருவாக்க பல நாடுகளின் உதவிகளுடன் சேவைகளை செய்கின்றன. இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வை உருவாக்க, வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செஞ்சிலுவை அமைப்பில் உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கு மருத்துவ பயிற்சி, முதலுதவி பயிற்சி மற்றும் மனிதநேய பண்புகளை வளர்க்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
நடமாடும் மருத்துவ சேவை, ரத்ததானம், நோய் விழிப்புணர்வு, சாலைகள் புனரமைப்பு, நிவாரண உதவி வழங்கல் போன்றவை இந்த அமைப்பின் முதன்மை பணி.அது மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை மக்களுடன் இணைந்து செய்து வருகிறது. 2013--2015 மீள் கட்டமைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டமாக இணைத்து, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளங்கள் மூலமாக சமூக பணிகளை துடிப்புடன் செய்து வருகிறது.
உயிர் உடல் நலம் என்பவற்றைப் பாதுகாப்பதும் மனித கெளரவம் பேணப்படுவதை உறுதி செய்வதுமே இச் சங்கத்தின் பிரதான நோக்கமாகும். அனைத்தின மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வை வளர்த்து நட்புறவு கூட்டுறவு என்பவற்றை நிலைபெறச் செய்து நிரந்தர சமாதானத்தைக் கட்டி எழுப்புவதும் அதன் குறிக்கோள்களாகும். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பது பிரதானமான ஏழு கொள்கைகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டதாகும். மனிதநேயம், பாரபட்சமின்மை நடு நிலைமை தொண்டர் சேவை, ஒருமைப்பாடு, சுயாதீனம், சர்வதேச மயம் என்பனவே அவையாகும்.
செஞ்சிலுவை அமைப்புக்கெனவே தனித்துவமான ஒரு அடையாளம் அமையப்பெற்றுள்ளது. வெண்ணிற பின்னணியில்ட அமைந்துள்ள செந்நிற சிலுவையே அந்த அடையாளமாகும். ஹென்றிடுனன்ற்டின் பிறந்தகமான ஸ்விட்ஸர்லாந்து நாட்டு தேசியக் கொடியே இச்சின்னம் அமையப் பெற வழி கோலியது. அந்நாட்டு தேசியக் கொடியில் செந்நிற பின்னணியில் அமைந்த வெண்ணிற சிலுவை காணப்படுகிறது. எனவே ஸ்விஸ் வாசியான ஹென்றி டுனற்க்கு கெளரவம் செலுத்தும் வகையிலேயே நிறம் மாறி சின்னம் இவ்வாறு அமையப் பெற்றது
முதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, அமைதிக்கான நோபல் பரிசு ஹென்றிக்கு வழங்கப்பட்டது. அதில் கிடைத்த பரிசு தொகையையும் செஞ்சிலுவை சங்கத்திடன் வழங்கினார். அப்படி கடவுளுக்கு நிகரான கடமையாற்றியதால் சிலுவை அல்லது பிறையை பின்தொடர்வோரால், இன்றைய செஞ்சிலுவை அல்லது செம்பிறை தினம் கொண்டாடப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நிதி திரட்டுவதும், மனிதாபிமானத்தை மேம்படுத்த தன்னார்வத் தொண்டுகளை ஏதேனும் வகையில் செய்வதும்தான் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி. இரத்த தான இயக்கங்கள், பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அல்லது முதலுதவி கற்றல் அமர்வுகள் என பலவற்றிலும், அவை தேவைப்படும் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் சென்று சேர்கிறது என்பதை அறியவும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.