🦉உலக மழைக்காடுகள் தினம்🌳
பூமியில் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக அறியப்படும் மழைக்காடுகள் மனிதர்கள் உயிர்வாழ சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40% வழங்குவதாக அறியப்படுகிறது. இன்று பூமியில் மழைக்காடுகளின் பரப்பளவு வேகமாக குறைந்து வருவதால், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஜூன் 22ஆம் தேதி உலக மழைக்காடு தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான மழைக்காடுகளை போற்றும் வகையில் உலக மழைக்காடு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் நாம் பாதுகாக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறோமோ, அவ்வளவுக்கு பூமி உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மழைக்காடு என்பது உலகம் முழுவதும் காணப்படும் ஒரு வகைக் காடு. இந்தப் பெயரிலிருந்தே அந்தக் காடுகளில் மழை அதிகமாகப் பொழிவதால், இக்காடுகள் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுவதைத் தெரிந்துகொள்ளலாம். இவை பெரும்பாலும் நிலநடுக்கோட்டுக்கு அருகேதான் உள்ளன. இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கப் பகுதிகளில் இந்தக் காடுகள் காணப்படுகின்றன. நமது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளக் காடுகள், மழைக்காடுகள்தான். அதேநேரம் ஒவ்வொரு மழைக்காடும் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்றே வேறுபட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் வித்தியாசமாக இருப்பதுதான்.
மழைக்காடுகள் பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. காபி, மசாலா, காய்கறி, ரப்பர் மற்றும் பாமாயில் முதல் பல்வேறு பொருட்கள் வரை, மனிதர்கள் பல அன்றாட தேவைகளுக்கு மழைக்காடுகளை நம்பியிருக்கிறார்கள். பல ஆராய்ச்சியாளர்கள், ஆயுர்வேதம் மற்றும் மூலிகை மருத்துவர்கள் மழைக்காடுகளில் பயன்படுத்தப்படாத பல்வேறு மருத்துவ தாவரங்கள் உள்ளன, அவை இன்று குணப்படுத்த முடியாத நோய்களைக் கூட குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மேலும், மழைக்காடுகள் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் முக்கியமான போராளிகள். அவை மாசுபாடு மற்றும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி காலநிலை வடிவங்களை உறுதிப்படுத்துகின்றன.
தொந்தரவு செய்யப்படாத மழைக்காடுகளில் உள்ள மரங்கள் மிக உயரமாக இருக்கும். சில வகை மரங்கள் 60 மீட்டர் உயரம் வரை (200 அடி) வளரக்கூடும். அம்மாடி! மழைக்காட்டு மரக் கிளைகளுக்குச் சென்றால், அங்கு வித்தியாசமான சூழ்நிலையைப் பார்க்கலாம். அப்பகுதிகள் ஈரம் குறைவாகவும், வெப்பம் அதிகமில்லாமலும் இருக்கும். இதன்காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு, அங்கே பல்வேறு விதமான சூழ்நிலைகள் உருவாகின்றன.
இன்றைய உலகின் வேகத்தில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு மதிப்புள்ள வருடாந்திர புதைபடிவ எரிபொருள் உமிழ்வைச் சமன் செய்ய போதுமான கார்பனை வைத்திருக்கும் திறன் மழைக்காடுகளுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அவை தாங்களாகவே வெளியிடும் கார்பனை விட இரண்டு மடங்கு கார்பனை உறிஞ்சுகின்றன. இன்று மழைக்காடுகள் வேகமாக அரிக்கப்பட்டு வருவதால், பேராசை பிடித்த அரசாங்கங்கள் ஊக்குவிக்கும் தீங்கான நடைமுறைகளுக்கு எதிராக எழுந்து நிற்பது அவசரநிலை போன்ற ஒரு சூழ்நிலையாகும், இது இறுதியில் இந்த அழகான மற்றும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை முழுமையாக இல்லாது போய் விடும் என்பதை புரிய வேண்டிய நாளிது.
நிலவளம் ரெங்கராஜன்