பன்னாட்டு பருப்பு தினமின்று!.
பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.அதிலும் தால்/டால் என அழைக்கப்படும் பருப்பு வகைகள் இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அதை நினைவூட்டவே பன்னாட்டு பருப்பு தினம் இதே பிப்ரவரி 10 கொண்டாடப்படுகிறது.சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட வலியுறுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று, பருப்பு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல். இது, சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும்கூட.பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து. ஆம்.. பருப்பு வகைகளில் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறன. ஒவ்வொரு பருப்பு வகையும் அதன் தனித்துவமான சுவை மற்றும் சமையல் முறைகளைக் கொண்டுள்ளது. இப்படி பல வகைகளில் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் பருப்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பருப்பு வகைகளின் புவியியல்:
இந்தியா பல்வேறு காலநிலை மற்றும் விவசாய நடைமுறைகளைக் கொண்ட ஒரு மாறுபட்ட நாடாகும். இதற்கு பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பருப்பு வகைகள் பெரிதும் பங்களிக்கின்றன. துவரம் பருப்பு, பச்சை பருப்பு, சிவப்பு பருப்பு, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு போன்றவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் தரம் மற்றும் சுவைக்காக அறியப்படுகின்றன. உதாரணத்திற்கு, துவரம் பருப்பு மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் அதிகமாக பயிரிடப்படுகிறது. அதே போல உளுத்தம் பருப்பு, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் முக்கியப் பயிராகும். இப்படி எல்லா வகையான பருப்பு வகைகளும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளிலேயே அதிகம் பயிரிடப்படுகிறது.
பருப்புகளின் ஆரோக்கிய நன்மைகள்:
பருப்பு வகைகளை ஊட்டச்சத்தின் வாழ்விடம் என்றே கூறலாம். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இவை தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். இதனால் பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன. பருப்புகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவி, குடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, இவற்றில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், இவற்றை நாம் கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உணவில் பருப்பு வகைகளை சேர்ப்பது மூலமாக ஆரோக்கியத்தில் பல நேர்மறை விளைவுகள் ஏற்படுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாகப் பார்க்கப்படுகிறது. பருப்புகள் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், ரத்த அழுத்தத்தை பராமரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து எடை மேலாண்மைக்கு உதவுவதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பருப்பு வகைகளை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
நிலவளம் ரெங்கராஜன்