For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக பத்திரிகை சுதந்திர தினம்!

07:08 AM May 03, 2024 IST | admin
உலக பத்திரிகை சுதந்திர தினம்
xr:d:DAFh0o34cuw:11,j:46348209781,t:23050304
Advertisement

டந்த 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் கொலம்பியப் பத்திரிகையாளரான கிலெர்மோ கானோ இசாசா அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மே 3-ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாள் முன்னெடுக்கப்படுகிறது. இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

Advertisement

மனித உரிமைகளில் பத்திரிகை சுதந்திரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பின்பும் நாட்டு நடப்பு பற்றிய செய்திகளை பொது மக்கள் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக பத்திரிகை பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் ஜனநாயகத்தில் 4 முக்கியத் தூண்களில் பத்திரிகையும் ஒன்று. குறிப்பாக சுதந்திரம் பெற்ற பிறகு பத்திரிகையின் மூலம் பல்வேறு செய்திகள் பொது மக்களுக்கு தெரியும் போது அவர்கள் விழிப்புணர்வு பெற்று பயனடைகிறார்கள். மேலும் பத்திரிகையின் மூலம் கடந்த கால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள், பண்டைய வரலாறு, கல்வி, அறிவியல், கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல் போன்ற பலவற்றைப் பற்றிய செய்திகளும், படங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைகிறது.

Advertisement

மேலும் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரவர் சார்ந்த மொழிகளில் எங்கிருந்தாலும் அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளக் கூடிய நவீன வசதியும் இன்றைய கால கட்டத்தில் உள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு அளவிடற்கரியது. உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகிறது என்பது பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தனிச்சிறப்பு. மிக முக்கியமாக பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பம். அதனை நிலைநாட்டும் வகையில் பத்திரிகைத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே பத்திரிகையின் தரம் உயர்ந்து கொண்டே போக வேண்டும்.

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மூலம் உள்நாட்டு செய்திகளையும், உலகச் செய்திகளையும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் படித்தும், பார்த்தும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு நல்ல சூழல் உள்ளதால் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் சிறப்பான பங்கு பாராட்டுக்குரியது. இதற்காக பாடுபடும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவனர்கள் ஆகிய அனைவரும் பெருமைக்குரியவர்கள். சுதந்திரமாக பத்திரிகைகள் வெளிவருவதற்கு பத்திரிகையாளர்களும், நிருபர்களும் சுதந்திரமாக செயல்படும்போது எந்தவிதமான குறுக்கீடுகளும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு சமுதாயமும், அரசும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பத்திரிகையும், ஊடகமும் நியாயமாக, அநீதிக்கு இடம் கொடுக்காமல், வெளிப்படையாக, நடுநிலையோடு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு அதன் மூலம் சமுதாயம் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெற வேண்டும்.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டே ஊடக சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பத்திரிக்கைகளுக்கு வரம்புகளை விதிப்பதை, இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு, ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிகையைக் தொடர்ச்சியாகக் கண்டித்ததுடன், அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

1799 ஆம் ஆண்டு வெல்லெஸ்லி, பத்திரிக்கைகளுக்கான புதிய சட்ட திட்டங்களை கொண்ட சென்சார்ஷிப் சட்டத்தை உருவாக்கினார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

♦ பத்திரிகையின் ஆசிரியர், உரிமையாளர் ஆகிய இருவரைப் பற்றிய விவரங்கள், முகவரி ஆகிய விவரங்களை அரசின் செயலாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

♦ பத்திரிகையை அச்சிடுபவரின் பெயரை, அச்சகத்தின் விவரத்தை பத்திரிகையில் வெளியிடுவது கட்டாயம்.

♦ ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிகை வெளியிடப்படக்கூடாது.

♦ அரசின் செயலாளர் அல்லது அரசின் பிரதிநிதி ஒருவரால் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பத்திரிகை வெளியிடப்பட வேண்டும்.

♦ இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

முதல் இரு நிபந்தனைகள் இப்போதும் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தர்மம் தொடர, வளர, சிறக்க என் மனம் நிறைந்த பத்திரிகை சுதந்திர தின நல்வாழ்த்துக்களை பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறோம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement