தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக குறைப்பிரசவ தினமின்று!

05:44 AM Nov 17, 2024 IST | admin
Advertisement

லக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் குறைமாத குழந்தை பிறப்பில் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் வரை இறக்கிறார்கள். உயிர்தப்பும் பிற குழந்தைகளும் கூட, வாழ்நாள் முழுவதும் குறைபாடுகளுடன் வாழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்று WHO தெரிவிக்கிறது.சமீபகாலத்தில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலானவர்களுக்கு குறைப்பிரசவம் என்றால் என்ன? அதை எப்படி கையாளுவது? இது நடக்காமல் தடுப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. இதையெல்லாம் வலியுறுத்த, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி குறைப்பிரசவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குறைப்பிரசவ  தினம் என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisement

அதாவது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. இது உலகளவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளில் 10 பேரில் ஒரு குழந்தைக்குச் சமமாகும். உலகளாவிய ரீதியில் 15 மில்லியன் குழந்தைகள் மிக விரைவில் குறை பிரசவத்தில் பிறக்கின்றன என்பதையும், நம்பகமான நேர போக்கு தரவுகளைக் கொண்ட பெரும்பாலான நாடுகளின் குறைப்பிரசவ விகிதங்கள் அதிகரித்து வருவதையும் நாடு அளவிலான மதிப்பீடுகள் காட்டுகின்றன. இதை கவனத்தில் கொண்டு 008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பெற்றோர் அமைப்புகள் நவம்பர் 17 அன்று குறைப்பிரசவம் தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளாக உருவாக்கப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போது உலகளாவிய வருடாந்திர தினமாகவும் அனுசரிப்பட்டு வருகிறது.

Advertisement

குறைமாதப் பிரசவம் என்றால் என்ன?

'முழுமையான கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள். 34 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்களை குறைமாதப் பிரசவம் (pre term delivery ) என்கிறோம். இதிலும், 34 வாரங்கள் முடிந்ததும் (late pre term) பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரச்னைகள் இருக்கும் என்றாலும் ஆபத்து குறைவு. ஆனால், 28 முதல் 34 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பிரச்னைகள் அதிகம்'.

என்ன காரணங்கள்?

'குறைமாதப் பிரசவத்துக்கு தாயே காரணமாக இருக்கலாம். சில சமயம் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையும் காரணமாகலாம்.

உடல் எடை: தாயின் உடல் எடை 40 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 45 கிலோவுக்கு மேல் இருப்பது நல்லது. இல்லாவிடில், குறைமாதப் பிரசவங்கள் நேரக்கூடும்.

வயது: 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மிகவும் சிறிய வயதில், திருமணத்தைத் தவிர்க்க வேண்டும். டீன் ஏஜில் திருமணம் செய்பவர்களுக்கு, குறைமாதப் பிரசவமாக வாய்ப்புகள் அதிகம்.

தாயின் உடல் ஆரோக்கியம்: கர்ப்பம் அடையும் பெண்களின் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். நம் நாட்டில் அதிக அளவில் பெண்கள் ரத்த சோகையுடன் காணப்படுகிறார்கள். ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி ஆகிய சத்துக்களும் குறைவாகவே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு நிறைமாதப் பிரசவம் ஏற்படுவது இல்லை.

சமூக நிலை: நம் நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகம். ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவை உண்பதாலும், கட்டட வேலை போன்ற கடுமையான உடல் உழைப்பினாலும், ஒழுங்காக மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் விடுவதாலும் அவர்கள் குறைப் பிரசவங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

மருத்துவக் காரணங்கள்:

கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் (PIH - Pregnancy Induced Hypertension), கர்ப்பகால சர்க்கரை நோய் (GDM - Gestation Diabetes Mellitus), சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று மற்றும் சில வைரஸ் தொற்று போன்றவை குறைமாதப் பிரசவத்துக்குக் காரணங்கள்.

இந்தக் காரணங்களால் தாயின் உடல்நிலை பலவீனமாகும்போது, குழந்தைக்குச் செல்லும் ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் போன்றவை குறையும்.உளவியல் காரணங்கள்: ஸ்ட்ரெஸ், அதிகப் பதற்றம், அழுத்தம் கொடுக்கும் பணிச்சுமை போன்றவையும் குறைமாதப் பிரசவங்களுக்குக் காரணங்கள். மரபியல்ரீதியான காரணங்கள்: குடும்பத்தில் யாருக்கேனும் இதுபோன்ற குறைப் பிரசவம் நிகழ்ந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கும் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.

குறைப்பிரசவக் குழந்தைகள்... பிரச்னைகள் என்னென்ன?

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் பிரச்னை இருக்கும். அவர்களுக்குச் சீரான சுவாசம் இருக்காது. அவர்களின் ரத்தக்குழாய்கள் மிகவும் மெல்லியதாகயிருக்கும். காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு மூளையில், நுரையீரலில் இருக்கும் ரத்தக்குழாய்களால் சரிவர ரெஸ்பாண்ட் செய்ய முடியாது. காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடு களுக்கு ஏற்ப சுவாசத்தைத் தகவமைத்துக்கொள்ள, மூளை - நுரையீரல் ரத்தக்குழாய்க்கு இடையேயான தகவல் பரிமாற்றம் சரியாக இருக்காது. நுரையீரல் திசுக்களுக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளீடு கிடைக்காது. இதை ‘ஹைப்பாக்சியா’ (Hypoxia) என்பார்கள். குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையான வளர்ச்சியடைந்திருக்காது என்பதால், அவர்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மேலும், அதன் வளர்ச்சி தடைபெறாமல் நிகழ தாயின் கருவறையில் குழந்தைக்குக் கிடைக்கக்கூடிய அம்சங்கள், நவீன மருத்துவச் சிகிச்சை மூலமாக அந்தக் குழந்தைக்குக் கிடைக்கச்செய்யப்படும். தவிர, இக்குழந்தைகளுக்குத் தொற்றுப் பிரச்னை மற்றும் குடல், செரிமான உறுப்புகளில் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால் அவர்கள் இன்குபேட்டரில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

குறைப்பிரசவங்களை எப்படி தவிர்ப்பது?

கர்ப்பிணிகள்,

- மிக ஆரோக்கிய வாழ்வும் உணவு முறை கொண்டிருப்பது மிகவும் அவசியம்

- தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

- முன் கூட்டியே குழந்தை பிறப்பு அனுபவம் இருந்தால் அடுத்த குழந்தை பிறப்பின் போது ஏதேனும் ஆபத்து காரணிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

- மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

- மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கத்திற்கு வழக்கமானவர் என்றால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பல்வேறு சவால்களை சந்தித்துதான் பூமிக்கு வருகிறது. அப்படி பிறந்த பிறகும் வாழ்நாளில் அவர்களுக்கு ஏற்படும் சவால்கள் இன்னும் அதிகமாகிறது என்பதே மருத்துவ அறிக்கைகள் தெறிவிக்கின்றனர்.

தெற்கு ஆசியா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவில்தான் பெரும்பாலும் குறைப்பிரசவ பிரசவங்கள் நடக்கின்றன. மிக மிக குறைப்பிரசவத்தில் அதாவது 28 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழும் எண்ணிக்கை என்பது அவர்கள் வாழும் நிலப்பரப்பினை அடிப்படையாக கொண்டதாக அமைகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.

ஸ்ரீவித்யா

Tags :
Prematuritypreterm birthraise awarenessWorld Prematurity DayWPDஉலக குறைப்பிரசவ தினம்குறைப்பிரசவம்
Advertisement
Next Article