🦉உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு தினமின்று🥰
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் உலகெங்கிலும் காணப்பட்டும் அத்தகைய குடும்பங்களின் கவலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும். ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும்.
வரலாறு
2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பெற்றோர் அமைப்புகள் நவம்பர் 17 அன்று குறைப்பிரசவம் தினத்திற்கான முதல் சர்வதேச விழிப்புணர்வு நாளாக உருவாக்கப்பட்டது. இது 2011 ஆம் ஆண்டு முதல் உலக குறைப்பிரசவ தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போது உலகளாவிய வருடாந்திர தினமாகவும் அனுசரிப்பட்டு வருகிறது. குறைப்பிரசவ தினம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெற்றோர் குழுக்கள், குடும்பங்கள், சுகாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பங்குதார அமைப்புகள் போன்றவை செயல்படுகின்றன. ஊடக பிரச்சாரங்கள், உள்ளூர் நிகழ்வுகள், பிராந்திய, தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட பிற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை உண்டாக்கியது. 2013 ஆம் ஆண்டில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.
பண்டைய காலத்தில் நம் முன்னோர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்றுகூட குறைப்பிரசவமாக இருக்காது. அப்படியே குறைமாதத்தில் பிறந்தால் அந்தக் குழந்தை பெரும்பாலும் இறந்துபோகும். நம் குடும்பங்களில் தாத்தா, பாட்டி காலத்தில் இப்படியான ஒரு நிகழ்வு நிச்சயமாக நடந்திருக்கும். குறைமாதத்தில் பிறந்த குழந்தை பிழைத்திருந்தாலும் சரியான பராமரிப்பு அளிக்காத காரணத்தால், மூளைவளர்ச்சி குன்றியோ ஊனமாகவோ இருந்திருக்கும். ஆனால், அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிப்போனது. காரணம், அதிவேக முன்னேற்றம் அடைந்திட்ட சிசு நல மருத்துவம்தான்.உண்மையைச் சொல்லபோனால், தற்போது பிறக்கும் குழந்தைகளில் 10 சதவிகிதம் குறைப்பிரசவம். ஆனால் 10 சதவிகித குறைப் பிரசவக் குழந்தைகளில் 9 சதவிகிதம் குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும்.
குறைமாத பிரசவம் என்பது முழுமையான கர்ப்ப காலத்திலிருந்து முன்கூட்டியே பிரசவிக்கும் பிரசவம் ஆகும். பொதுவாக பிரசவ காலம் என்பது 40 வாரங்கள். இதில் 40 வாரங்களுக்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவக் குழந்தைகளாக கருதப்படுவர். 37 வாரங்களுக்கு முன்பு நடக்கும் பிரசவங்கள் குறைமாத பிரசவங்கள் ஆகும்.மேலும், 33 வாரங்களுக்கு உட்பட்டு பிறக்கும் குழந்தைளுக்கு எடை குறைவு காரணமாக உள் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.
எனவே, இவர்களை தீவிரமாக கண்கானிக்க வேண்டியது அவசியம். சிசுவை சுற்றியுள்ள பனிக்குடம் வெடிப்பது, முந்தைய குறை பிரசவ நிகழ்வு, தாயின் சீரற்ற உணவு பழக்கம், உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல், மரபணு குறைபாடுகள் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். மேலும், போலிக் அமிலம், வைட்டமின் பி மற்றும் சி குறைவு, ரத்தசோகை, தைராய்டு பிரச்னை, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் குறைப்பிரசவத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு தாயின் பங்களிப்பு மிகப்பெரும் காரணியாகும். தாய் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்து, உறக்கம் வரை சீராக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் தாயின் உடல் எடை 40 கிலோவிற்கு குறையாமல் இருப்பது நல்லது.
தலைப் பிரசவமே குறைப்பிரசவமாக இருந்தால் அடுத்ததாக பிறக்கும் குழந்தையும் குறைப்பிரசவமாக அமைய வாய்ப்பு உள்ளது. தாய்மை அடைந்த பெண் உண்ணும் உணவில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்குமாறும், கர்ப்பகால சர்க்கரை தாக்காதவாறும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், குறைப்பிரசவத்திற்கு ஹார்மோன் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ஹார்மோனின் சமநிலையில் மாறுபாடு ஏற்படும்பொழுது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தவறாமல் தானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், உலர் பழங்கள், கேரட், பீட்ருட், கீரை, பால் சார்ந்த உணவுகள், மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் வாயிலாக பால் சுரப்பு நார்மலா இருக்கும். குறைப்பிரசவக் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு சில நேரங்களில் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. அதாவது உலகளவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளில் 10 பேரில் ஒரு குழந்தைக்குச் சமமாகும். உலகளாவிய ரீதியில் 15 மில்லியன் குழந்தைகள் மிக விரைவில் குறை பிரசவத்தில் பிறக்கின்றன என்பதையும், நம்பகமான நேர போக்கு தரவுகளைக் கொண்ட பெரும்பாலான நாடுகளின் குறைப்பிரசவ விகிதங்கள் அதிகரித்து வருவதையும் நாடு அளவிலான மதிப்பீடுகள் காட்டுகின்றன.
குறைப்பிரசவத்திற்கான காரணங்கள்…
கருவுறுவதற்கு முன்பே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மிகச் சிறிய வயதிலேயே அதாவது 19 வயதுக்கு முன்பே அல்லது மிகத் தாமதமாக 35 வயதுக்குப்பின் கருவுறும் பெண்களுக்கும் இது சாத்தியம்.அதற்கு அடுத்ததாக, கர்ப்பகாலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோய் முக்கிய காரணியாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பகால சர்க்கரை நோய் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்துவிட்டால், குழந்தையின் எடை அதிகமாகி, முன்கூட்டியே குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில், இந்தப் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் முன்கூட்டியே திறந்துவிடும்.கர்ப்ப காலத்தில் வரக்கூடிய ரத்த அழுத்த நோயும் ஒரு காரணமாகிறது. தாயின் ரத்த அழுத்தம் அதிகமானால் குழந்தையை முன்கூட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. பிரசவ நாளுக்கு 1 வாரத்திலிருந்து 2 வாரத்திற்கு முன்பு மன; அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு 20 சதவீதம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தற்போது பணியிடங்களில் சவாலான வேலைகளை பெண்கள் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் வாக்குவாதம், தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டி சூழல் என பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். வீட்டிலும் பல பிரச்னைகள். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அடுத்து உடற்பயிற்சியற்ற வாழ்க்கை, ஆரோக்கியமில்லாத உணவுமுறை, தேவையற்ற பயணங்கள், சுற்றுச்சூழல், தூக்கமின்மை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் இவையெல்லாமும் கூட குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன.
குறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?
கருவுறுவதற்கு முன்பே எடையை சரி வர பராமரிப்பது, அம்மை தடுப்பூசி, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்த் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, நெகடிவ் ரத்த வகை உள்ளவர்கள் அதற்கான ஊசி போட்டுக் கொள்வது மற்றும் கர்ப்பகால நீரிழிவு வாய்ப்பு இருக்கிறதா என சோதனை செய்து கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளே பெரும்பாலும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன என்பதால் கருவுற்ற பெண்கள் சரியான உணவு, யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. முடிந்தவரை காற்று மாசு நிறைந்த இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். குறைப்பிரசவம் திடீரென்று வருவதில்லை.இது ஒரு வாழ்வியல் நோய் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மனதை அமைதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை
நிலவளம் ரெங்கராஜன்