உலக காகித பை தினமின்று!
பிளாஸ்டிக்கின் பாதிப்பு நிலம், நீர், மலை என எதையும் விட்டு வைக்கவில்லை. இதை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்காத பாலித்தீன் பைகளுக்கு பதிலாக, விரைவிலேயே மக்கி விடும் காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடைபிடிக்கப்படுகிறது. காகித பைகளின் நன்மைகள் மற்றும் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் .
காகிதப் பை பயன்படுத்துவதன் நன்மைகள்...!
இவை எளிதில் மட்கும் தன்மை கொண்டவை, 100% மறுசுழற்சி செய்யக்கூடியவை. பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடுகையில் , காகிதப் பைகள் உயிரினங்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. பைகள் மட்கும் தன்மை கொண்டதால், உயிர் உரம் தயாரிக்க உதவுகிறது.
காகிதப் பைகளின் தீமைகள்...
காகிதத்தை உருவாக்க மரங்களை வெட்ட வேண்டி இருக்கும். பால் போன்ற திரவப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாது. உறைய வைக்கும் உணவை காகிதப் பைகளில் எடுத்துச் செல்ல முடியாது. கனமான உணவு மற்றும் மளிகைப் பொருள்களை எடுத்துச் செல்வது கடினம்.
காகிதப்பைகளின் வரலாறு
1852-ம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பிரான்சிஸ் வோல் முதன்முதலில் காகிதப் பை இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 1971-ல் மார்கரெட் இ நைட் தட்டையான கீழ் காகிதப் பைகளை உருவாக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார். இவர் `மாளிகைப் பையின் தாய்' என்று அழைக்கப்பட்டார். ஏனெனில், இது முன்பு இருந்ததைவிட அதிகமானவற்றை எடுத்துச் செல்லும் அளவுக்குத் தயாரிக்கப்பட்டது. பொருள்களை எளிதாக சேமித்து வைக்க மடிப்பு பக்கங்களைக் கொண்ட சதுர கீழ் காதிதப் பைகளை ( SOS Style Paper Bag) 1883-ம் ஆண்டில் சார்லஸ் ஸ்டில்வெல் கண்டுபிடித்தார். இந்தப் பைகள் மருந்தகங்கள், உணவு சேவை, மளிகைக் கடைகள் மற்றும் பல வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
1912-ல் மினசோட்டாவின் செயிண்ட் பால் நகரில் உள்ள மளிகைக் கடைகளில் மக்கள் தங்களுடைய மளிகைப் பொருள்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ஏற்ற வகையில், காகிதப் பைகளில் துளைகளை இட்டு அதற்கு காப்புரிமை பெற்றனர். பின்னர் அதற்கு டியூபனர் ஷாப்பிங் பேக் ( Deubener’s Shopping Bag ) என்று பெயரிட்டனர். இருப்பினும் இந்தக் காகிதப் பைகள் பிளாஸ்டிக் பைகளால் மாற்றப்பட்டன.
2015-ம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய காகித ஷாப்பிங் பை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்தனர்.
அடிசினல் ரிப்போர்ட்
நாம் எவ்வளவு காகித பைகளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு மரங்கள் நடுவதும் முக்கியமானது. நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதும் அதுதான். வீட்டில் இடவசதி இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு மரம் என்றாவது நட்டு வளர்க்கலாம். அது இல்லாதவர்கள் பொது இடத்தில் நட்டு வளர்க்கலாமே! அப்படியும் இல்லை என்றால் குறைந்தபட்சம் வீட்டில் குழந்தை பிறந்தால், திருமணம் ஆனால், முதியவர்கள் இயற்கையை எய்தும்போது என்று நிகழ்வுகளின் போதாவது இதை செய்தால், சிறு துளி பெருவெள்ளமாய் பெருகுமே. !
நிலவளம் ரெங்கராஜன்