உலகப் பெருங்கடல்கள் நாள்!
உலகப் பெருங்கடல் தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 8-ந் தேதி கடைப்பிடிக்க வேண்டும் என்று, 1992-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு பல நாடுகளில் இந்த தினம், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அது முதல் ஆண்டு தோறும் ஜூன் 8-ந் தேதி 'உலகப் பெருங்கடல் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடல் பாதுகாப்பு, அதன் சூழலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உலகின் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகளில் ஈடுபடுவதே இந்த நாளின் நோக்கம். பூமியின் பெரும்பகுதி உயிரினத்தை கொண்டிருக்கும் பெருங்கடல்கள் பருவநிலை முதல், மழை , பிராணவாயு என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினாலும் மாசுபடுதல் மற்றும் அதிக மீன்பிடி காரணமாக அவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இது நம் காலத்தின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக இருக்கிறது. இத்தனைக்கும் பெருங்கடல்கள் பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை உலக மக்களுக்கு உணவு மற்றும் புரதத்தின் உயர் ஆதாரமாகவும் உள்ளன.இது உலகின் பொருளாதாரத்திற்கும், கடல் சார்ந்த தொழிலில் வாழும் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், நீர் மாசுபாடு மற்றும் மக்களின் அறியாமையால், கடல்கள் உள்வாங்கி வருகின்றன. மேலும் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.எனவே, சமுத்திரங்களைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது ஆகும்.
விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானது. கடல் , நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி. கடல் இல்லையென்றால், நமக்கு அழகிய நீலவண்ணத்தில் வானம் தெரியாது; புவியில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும் நிலத்துக்கு மழைநீரும் கிடைக்காது. பருவநிலையைக் கட்டுப்படுத்துவதிலும் கடலுக்கு இருக்கும் பங்கு மகத்தானது. கடலின் வளங்கள் நம் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கின்றன. இந்தப் பூமியில் நமது இருப்புக்குக் கடல்களின் உயிர்ப்பும் செழிப்பும் இன்றியமையாதவை. கண்டங்களைக் கடல்களே ஒருங்கிணைக்கின்றன. கடல் மார்க்கமாக நடைபெறும் வணிகமும், போக்குவரத்துமே நம் உலகின் பொருளாதாரத்துக்கு நிலைத்தன்மையை அளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்களின் உணவுத் தேவையை அவை பூர்த்திசெய்கின்றன; மருந்துகளின் மூலப்பொருட்களை வழங்குகின்றன.
இந்நிலையில் 1980இல் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் புவி வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன, அதன் காரணமாகக் கடல் நீரோட்டங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என உலகுக்கு எடுத்துரைத்தார். இதை முதல் முதலாக என்ரிக் கூறியபோது, அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நம்பவில்லை என்று கூடச் சொல்லலாம். அதே சமயம் 1990களில் அமெரிக்கக் கண்டம் முழுவதும் வெப்ப மாற்றத்தால் கடல்பாசி, கிரில்ஸ், இறால்கள், பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல் வளங்கள் பாதிக்கப்பட்டன. இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால் அட்லாண்டிக், பசிபிக் கடல்களின் கரையோரப் பகுதிகளில் அதிக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டன. இதன் விளைவாக ஆசிய, அமெரிக்கக் கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் பெரிதும் பரவத் தொடங்கின. இதன் பின்னர் விழித்துக்கொண்ட உலகம், என்ரிக் ஜொர்மிலோ தெரிவித்த கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் உலக நாடுகளிடையே ஏற்பட்டது.
1992, ஜூன் 8 அன்று பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பூமி உச்சி மாநாட்டில் உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்படுவதற்கான கோரிக்கையை கனடா முன்வைத்தது. அதன் பின்னர் அது அதிகாரப்பூர்வமற்ற வகையில் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. 2008இல் இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில், விஞ்ஞானிகள், செயல்பாடுகள் மற்றும் பிரபலங்கள் ஒன்று கூடி, கடல்களைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் சிறந்ததை உருவாக்க நாம் செய்ய வேண்டிய மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன
நாம் எங்கு வாழ்ந்தாலும் கடலுக்கும் நமக்கும், நமது வாழ்க்கை முறைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நமது சின்னஞ்சிறு செயல்பாடுகள்கூட கடலின் நலனுக்கு கேடுகள் விளைவிக் கின்றன. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கடல் மற்றும் அதன் உயிரினங்களுடன் பல வகைகளில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்நாளில் கடல் மாசுபாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தேவையற்ற விமான, கார் பயணங்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா வகையான சக்திப் பயன்பாட்டையும் குறைக்கலாம். லிப்ட் வேண்டாம் என்று சொல்லி படியேறலாம். இவற்றின் மூலம் கரியமில வாயு காற்று மண்டலத்தில் கலப்பதைக் குறைத்து, கடல்களின் அழிவை மட்டுப்படுத்தலாம். பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்வதின் மூலமும், அவை கடலை அடைவதைக் குறைக்கலாம். பொருள் வாங்க கடைக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம். கடல் பிரயாணத்தின் போது கப்பலிலிருந்து எதையாவது துாக்கி எறியவேண்டாம். கடற்கரை மகிழ்ச்சி தரும் இடம். எனவே அதனைப் பாதுகாப்பது நம் கடமை. கடற்கரையை விட்டு வெளியேறும் பொழுது இருந்த இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வோம்.
நிலவளம் ரெங்கராஜன்