சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!
புகையிலை குறித்தும் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை பற்றியும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 31 புகையிலை எதிர்ப்பு நாளாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்புவரை 60 லட்சமாக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்த 80 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தொற்றில்லா நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களில் காரணமாக இறப்போர் 53 சதவீதமாக உள்ளது. அதேபோல ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. இவையெல்லாம் புகையிலை பயன்பாடுகளால் ஏற்படும் மரணங்கள். ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயத்தினர் புகையை உயிரைக் கொல்லும் பகையாக கருதி விட்டுவிட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.
புற்றுநோய்க்கு முதல் காரணமாகவும் மரணத்துக்கு முக்கியக் காரணமாகவும் விளங்கும் 'நிகோடியானா டபாக்கம்' (Nicotiana tabacum) தோன்றிய இடம் அமெரிக்கா. மிளகு, தக்காளி, சுண்டக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்த புகையிலையின் வரலாறு, கி.மு 6,000 ஆண்டிலிருந்து தொடங்குகிறது. காய்ந்த புகையிலையின் புகை, தங்களது வேண்டுதல்களைக் கடவுளிடம் நேரடியாக எடுத்துச் செல்லும் என்று பெரிதும் நம்பிய அமெரிக்கப் பழங்குடியினர், தங்களது நிலங்களில் செழித்து வளர்ந்த அதன் இலைகளை கடவுளுக்குப் படைத்ததோடு, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். கடவுள் தங்களுக்கு அனுப்பிய பரிசான இதை, 1492-ம் ஆண்டு கப்பலேறி வந்த கிறிஸ்டோபர் கொலம்பஸிடம் அமெரிக்க பழங்குடியினர் பரிசாகத் தர, அங்கிருந்து புகையிலையின் உலகப் பயணம் தொடங்கியது.
15, 16 -ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் சிறந்த வலி நிவாரணியாகவும், விஷ முறிவு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட புகையிலை மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக் குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு உள்மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, தோல் அழற்சி ஆகியவற்றில் மேற்பூச்சாகவும் உபயோகித்திருக்கிறார்கள். குணப்படுத்த முடியாத ஒற்றைத் தலைவலி (Trigeminal Neuralgia) மற்றும் புற்றுநோய்களால் உண்டாகும் வலிக்கு நிவாரணியாகவும் விளங்கிய புகையிலை, அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.
பச்சைப் புகையிலையை கரீபியன் மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, புகையிலை சுருட்டு வடிவம் பெற்று, பிறகு சிகரெட் என்ற ஆறாம் விரல் தோன்றவும் வழிவகுத்தது. கைகளால் சுருட்டப்படும் கியூபா நாட்டின் சிகார் மற்றும் துருக்கிய சிகார் உலகப் புகழ்பெற்றன. தனக்கு மிகவும் பிரியமான கியூபன் சிகாரை, தனது இறுதி நாள் வரை சேகுவேரா புகைத்தாராம். உலகப்போரின்போது, `படைவீரர்களின் புகை' என்ற தனி அடையாளத்தைப் பெற்ற சிகரெட், பிற்காலத்தில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு உலக வணிகத்தில் முதல்நிலையை எட்டியது.
புகையிலையில் அப்படி என்னதான் உள்ளது?
நிகோடின், நிகோடினிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற தாவரச்சத்துகளும், வைட்டமின்கள் சி, ஈ மற்றும் செலினியம், கரோட்டின் ஆகியனவும் நிறைந்துள்ளன. இவற்றுள் சக்திவாய்ந்த தாவர எண்ணெய்யான நிகோடின், உட்கொண்ட எட்டு முதல் பத்து விநாடிக்குள் மூளையைச் சென்றடைந்து, அங்குள்ள டோபமைன்களை ஊக்கப்படுத்தும். அதனால், தற்காலிகமாக உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாவதுடன் போதையையும் ஏற்படுத்தும். ஆனால், புகையிலையைப் புகைக்கும்போது, அதிலுள்ள நிகோடின், கோ-நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு போன்ற தாதுக்களாக உருமாறி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். புகையிலையைப் பதப்படுத்த, ஒரு சிகரெட்டில் 4,000-க்கும் மேலான ரசாயனப் பொருள்களும் நூற்றுக்கணக்கான நச்சுப்பொருள்களும் சேர்க்கப்படுவதால் இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்றவை ஏற்படலாம். இவை, அனைத்துக்கும் மேலாக உடல் உறுப்புகளில் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.
'ஆக்டிவ் ஸ்மோக்கிங்', 'பாசிவ் ஸ்மோக்கிங்', 'தேர்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்' எனப் புகைப்பழக்கம், நான்கு விநாடிக்கு ஒரு மரணத்தை நிகழ்த்துகிறது. வருடத்தில் எட்டு மில்லியன் மக்களை, உலகெங்கும் பலி எடுக்கும் இந்தப் புகையிலை, அவர்களில் பெண்கள், குழந்தைகள் என ஒரு மில்லியன் பேரை புகைக்காமலே மரணிக்க வைக்கிறது. ஆக, காய்ந்த புகையிலைச் செடிகளின் இலைகள், மனிதக் குலத்தை சருகுகளாக்கிவிடுகின்றன.
புகையிலையை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று புற்றுநோய் அல்லாத பிற நோய்கள் மற்றொன்று புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய்கள். புற்றுநோய் அல்லாத பிற நோய்கள் எனும்போது, இருதய பிரச்னைகள், ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக், ரத்தக்குழாய் அடைப்பு போன்றவை ஏற்படுகிறது. புற்றுநோய் என்று எடுத்துக்கொள்ளும்போது, நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், வயிறு புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது. இவை நேரடியாக புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் புற்றுநோயாகும். புகையிலை பழக்கமுள்ள பெண்களைப் பொருத்தவரை, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.
ஒருவர் தனது வாழ்நாளில் 100 சிகரெட்டுக்கு மேல் பிடித்திருந்தாலே அவருக்கு புற்றுநோய் வர வாய்ப்புண்டு. அதிலும், செயின் ஸ்மோக்கர்ஸ் சிலர், ஒருநாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் கூட பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் மிக மிக அதிகமாக இருக்கும். இவர்களுக்குத்தான் பெரும்பாலும், நுரையீரல் புற்றுநோய் அதிகளவில் ஏற்படுகிறது. இதைத்தவிர, இரண்டாவது கை, மூன்றாவது கை புகையினாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, இரண்டாவது கை புகை என்பது, புகையிலையை நேரடியாக பயன்படுத்தவில்லை என்றாலும், புகைப்பவர்களின் அருகில் இருப்பதும், அந்தப் புகையை சுவாசிப்பதனாலும் ஏற்படுகிறது. மூன்றாவது கை புகை என்பது, ஒருவர் புகைபிடித்துவிட்டு சென்ற அறையில், மற்றவர் தங்கியிருப்பதனால், ஏற்படும் பாதிப்பாகும்.
இதை எல்லாம் அறிந்தும் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை உலகில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே வருத்தமளிக்கும் சேதி.. இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.இந்தியாவில் என்ன நிலைமை? இந்தியாவில் வயதுவந்தோரில் (Adult) 34.6 சதவீதம் பேர் புகை பழக்கம் உள்ளவர்கள் என்கிறது புள்ளிவிவரம். மொத்த எண்ணிக்கையில் 47.3 சதவீதம் பேர் ஆண்கள்; 20.7 சதவீதம் பேர் பெண்கள். 1998-ம் ஆண்டில் இந்தியாவில் புகை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.9 கோடிப் பேர். 2016-ம் ஆண்டில் இது 10.8 கோடியாக அதிகரித்தது. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கைக்கு அருகே இந்தியா வந்துவிட்டது.
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்?
புகை பிடித்தல், பான், குட்கா, புகையிலை பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபடலாம். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். அது ஒவ்வொருவரின் மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து வேகமாக நிகழும்.
புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம். இதை 33 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. ஒருவர் தனது சுகத்துக்காக புகைப்பது என்பது, அவர் தன்னை அழித்துக் கொள்வதோடு, தன்னை சார்ந்தவர்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதும் புகைப்பது மற்றும் புகையிலை சார்ந்த பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட தற்போது, மாத்திரைகள், கவுன்சிலிங் மையங்கள் என நிறைய இருக்கின்றன. அங்கு சென்று அவர்களின் உதவியுடன் இந்தப் பழக்கத்திலிருந்து வெளிவரலாம் என்பதையுமே நினைவூட்டும் நாளின்று
நிலவளம் ரெங்கராஜன்