தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

🦉இன்னிக்கு உலக கொசு தினம்🦟

05:54 AM Aug 20, 2024 IST | admin
Advertisement

சைஸ்-சிலே தக்கனூண்டு இருக்கும் கொசு, மனுஷங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இந்த உயிரினத்திற்கு ஒரு பல் கூட கிடையாது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மனிதர்கள் மரணிக்க இந்த ஒரே உயிரினம் காரணமாக இருக்கிறது. பல் கூட இல்லாத அப்படி எந்த உயிரினம் இவ்வளவு கொடிய உயிர்க்கொல்லியாக இருக்கிறது? அதற்கான பதில் தினசரி கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தெரியும்.ஆம், அந்தக் கொடிய உயிர்க்கொல்லி உயிரினம் கொசுதான்.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவானது 20 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கிறது. அத்துடன், 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனால் உயிரிழக்கின்றனர். மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் கொசுக்களாலேயே ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னவென்றால், மலேரியா கொசு இரவில் கடிக்கும். எனவே கொசு வலைகள் கொசுக்கடியிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஆனால், டெங்கு கொசு பட்டப்பகலில் நாம் விழித்திருக்கும்போதே கடிக்கும் . இந்நிலையில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். 'அனாபெலஸ்' பெண் கொசுக்கள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது அப்படீங்கறதை டாக்டர் ரொனால்டு ரோஸ். 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே 'உலக கொசு தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. மலேரியா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.கொசுக்களில் மூன்று ஆயிரம் வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் 'அனாபெலஸ்', டெங்குவை உருவாக்கும் 'ஏடிஸ்', யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் 'குளக்ஸ்' ஆகிய மூன்றும் தான் கொடியவை.

Advertisement

யார் இவர்?

ரொனால்டு ரோஸ், 1857ல் உத்தரகண்டின் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார்.படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 - - 1899 வரை ஈடுபட்டார். 1897ல் மலேரியாவுக்கான காரணத்தை கண்டுபிடித்தார். இதற்காக 1902ல் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர்.

என்ன பாதிப்பு?

'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை அழிக்கிறது. சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.

எப்படி தடுப்பது?

* பொதுவாக கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* டயர்கள், தகரங்கள், பலகைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.

* தண்ணீர் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காய வைக்க வேண்டும்.

* தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

அடிசினல் ரிப்போர்ட்:

கொசு என்ற பெயர் வந்தது எப்படி?

🦟கொசு என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் கொசுகு என்ற ஒரு பெயரும் அதற்கு உண்டு. இதற்கு சிறியது என்று அர்த்தம் என்கிறார்கள். அதாவது “நாம் கொசுறு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோமே அதுபோன்றுதான் இதுவும். இவை அனைத்துமே சிறியது என்பதைத்தான் குறிக்கிறது. மசகம் என்றொரு பெயரும் கொசுவுக்கு உண்டு. கொசு கருமை நிறத்தில் இருப்பதை வைத்து இந்தப் பெயர் வந்திருக்கலாம்” என்கிறார்கள். ஆங்கிலத்தில் கொசுவை குறிக்கும் சொல் ஸ்பானிய வார்த்தையாகும். மொஸ்கிட்டோ என்றால் ஸ்பானிய மொழியில் சிறிய பூச்சி என்று அர்த்தம்.

🦟பார்ப்பதற்கு சிறியதாகத் தெரியும் கொசுவின் பின்புலம் பலமானது. 400 முதல் 450 மில்லியன் ஆண்டுகளாக அவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. தற்போது வரை 3000 முதல் 3500 வகையான கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்கூட புனேவில் புதிய கொசு வகை (Culex katezari)கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 200 வகைகள் மட்டுமே மனிதர்களின் ரத்தத்தை குடிக்கின்றன.

கொசு உங்கள் உடலில் இருந்து சராசரியாக ஏழரை மில்லிகிராம் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இதைக் கேட்கும்போது சதாரணமாக இருக்கலாம்.

🦟ஆனால், கொசுவின் எடையே 2.5 முதல் 3 மில்லி கிராம்தான் இருக்கும். தனது எடையைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித ரத்தத்தை அது உறிஞ்சிக் கொள்கிறது.

🦟கொசு சிறியதாக இருப்பதால் வேகமாகப் பறக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஈ போன்றவற்றுடன் ஒப்பிடும்போது கொசுவின் பறக்கும் வேகம் என்பது மிகவும் குறைவு. ஒரு மணிநேரம் பறந்தால்கூட அதிகபட்சம் 1 மைல் தூரம்தான் கொசுவால் பறக்க முடியும்.

🦟கொசுவால் வேகமாகப் பறக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், தனது இறக்கையை அது அசைக்கும் வேகம் அபாரமானது. ஒரு நிமிடத்துக்கு 200 முதல் 300 தடவை வரை அது தனது இறக்கையை அடித்துக் கொள்ளும். இதனால், கொசு காது அருகே வரும்போது 'ரிங்...'என்ற சத்தம் கேட்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
20 Augustfemale anopheline mosquitoesmalariaMosquitoSir Ronald RossWorld Mosquito Dayஉலக கொசு நாள்கொசு
Advertisement
Next Article