பெண்களை அதிகமாக தாக்கும் பட்டாம்பூச்சி வடிவ ‘லூபஸ்’ நோய்!
உலக லூபஸ் தினம் (ஊதா தினம்) அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை தலைவர் டாக்டர் பி.பாலாஜி கூறியதாவது:–
இந்த ஆண்டின் கரு ‘லூபஸைக் அறிய செய்யுங்கள்’ என்பதாகும். இதன் மூலம் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்நோயினால் ஏற்படும் உளவியல், சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
உலக லூபஸ் கூட்டமைப்பு, உலகெங்கிலும் உள்ள லூபஸ் குழுக்களை ஒன்றிணைத்து அதன் தாக்கத்தின் மீது கவனத்தை ஈர்க்கவும் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மே 10ந் தேதி உலக லூபஸ் தினமாக நினைவு கூறப்படுகிறது. இந்தியாவில் 1 லட்சம் மக்கள் தொகையில் 14 முதல் 60 பேர் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது 9:1 என்ற விகிதத்தில் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெரும்பாலும் மரபணு மற்றும் சுற்றுச்சூழல் தூண்டுதல்களே காரணமாகும்.
ஊதா நிற தடிப்பு
லூபஸ் என்பது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோயாகும். இது இருதயம், சிறுநீரகம், நுரையீரல், ரத்தம், மூட்டுகள் மற்றும் தோல் உட்பட உடலின் எந்தப் பகுதிகளிலும் வீக்கத்தை ஏற்படுத்தும். தோலில், லூபஸ் கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவத்தில் சிவந்தி/ஊதா நிற தடிப்பு போல் தோன்றும். இது ஆரம்பகால நோயைக் கண்டறிவதற்கம், சிகிச்சையை ஆரம்ப காலத்தில் தொடங்கவும் உதவுகிறது. இந்நோய், பொதுவாக நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மட்டுமல்லாமல் ஆரோக்கியமான திசுக்களையும் தாக்குகிறது.
பெண்களுக்கு அதிக வாய்ப்பு
யாவருக்கும் நூபஸ் உருவாகலாம் என்றாலும், இது பொதுவாக 15 வயது முதல் 44 வயதுக்குள் கண்டறியப்படுகிறது. மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 90% பெண்கள், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அதிக உற்பத்தி காரணமாக இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் நோய்எதிர்ப்பு அமைப்பு மண்டலத்தையே மாற்றியமைப்பதாக அறியப்படுகின்றன. அவை சைட்டோகைன் உற்பத்தியை பாதிக்கிக்னிறன. மற்றும் இந்நோய் உருவாக்கத்தில் பங்கு வகிக்கின்றன.
அறிகுறி என்ன?
இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் தெரிவிக்கும் பொதுவான அறிகுறிகள் சோர்வு, மூட்டுகளில் வலி, தசை வலி, மற்றும் சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் தடிப்புகள். ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அறிகுறிகளைத் தணிக்க ஆரம்பகால சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் நோயை பொதுவாக நன்கு கட்டுப்படுத்த முடியும். இது உறுப்பு சேதத்தை மேலும் குறைக்கிறது.
தற்போது 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக லூபஸ் தினத்தை விழிப்புணர்வை ஏற்படுத்த நோயாளிகளுக்கு சூரிய ஒளியினால் ஏற்படும் தடிப்புகளைத் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன என்று முதல்வர் டாக்டர் பி.பாலாஜி கூறினார்.
சிகிச்சையில் உள்ள 2 நோயாளிகள், நோயைப் பற்றிய அனுபவங்களையும் மற்றும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை எவ்வாறு அவர்களின் வாழ்க்தைத் தரத்தை மேம்படுத்தியது என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.