For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச சிங்கம் தினம்!

06:32 AM Aug 10, 2024 IST | admin
சர்வதேச சிங்கம் தினம்
Advertisement

காட்டின் ராஜா என்றழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை வன அழிப்பு, வேட்டை உள்ளிட்ட காரணங்களால் வெகுவாக குறைந்து வருகிறது. அவற்றை பாதுகாக்கும் நோக்குடனும், சிங்கங்களால் வனத்தின் உயிர் சங்கிலி எப்படி இயங்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் ஆகஸ்டு 10ம் தேதி உலக சிங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகில், 15 நாடுகள், சிங்கத்தை தேசிய விலங்காக பெருமை கொண்டாடுகின்றன. வனவிலங்குகளில் அச்சமூட்டக்கூடிய ஒரு படைப்பாக விளங்குகிற சிங்கத்திற்கு மரியாதையை செலுத்தும் இந்த நிகழ்வினை, 'பிக் கேட் ரெஸ்க்யூ' என்னும் அமைப்பு உருவாக்கியது.இந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் மக்கள் ஒன்று கூடி தங்களால் இயன்ற வகையில் சிங்கத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature’s) சிங்கத்தை அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக பட்டியலிட்டுள்ளது.

Advertisement

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது. பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

Advertisement

உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன. சிங்கங்களை பொறுத்த வரை, மனிதர்களோடு அதற்கு உள்ள தொடர்பு என்பது, 32 ஆயிரம் வருடங்களாகத் தொடர்கிறது. பிரான்சின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, அர்டேக் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 'பேலியோலித்திக்' கால மனிதனின் குகை ஒவியங்களில் கூட சிங்கங்கள் பற்றிய ஓவியங்கள் காணப்படுகின்றன. வரலாற்று ரீதியாக சிங்கங்கள், யூரேசியா, வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின் வட மேற்கு பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பபடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.

ஆனாலும் அரசர் காலத் தில் சிங்கங்கள் பெரிய அழிவை சந்தித்திருந்தாலும், அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிர்களை காப் பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங் களையும் பெறலாம்

சிங்கங்கள் குறித்த சின்னச் சின்ன சேதிகள்  🦁

🦁இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் சிங்கங்கள் 200 கிலோ எடை வரை வளரும், இதன் ஒரு நேர உணவு 400 பவுண்டு இறைச்சி, வேட்டையின்போது 1000 கிலோ எடையை கூட தூக்கிக்கொண்டு ஓடும். சிங்கங்கள் தனியாகவே இரை தேடும். பெரும்பாலான சிங்கங்கள் 22 கி.மீ. சுற்றளவிற்குள்ளே தங்கள் குடும்பத்துடன் வசிக்கும். சில சிங்கங்கள் நாடோடிபோல திரியும்.

🦁சிங்கக் கூட்டத்தின் தலைவனாக இருப்பதற்குப் பெயர் பிரைடு (Pride). கூட்டத்திலிருக்கிற ஆண் சிங்கமே பிட்டாக இருக்கும். அதைச் சார்ந்தே மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். பிரைடாக இருக்கிற சிங்கம் எப்போது எங்கே செல்லும், மீண்டும் எப்போது குடும்பத்தைத் தேடிவரும் என்பதெல்லாம் அதன் மன நிலையைப் பொறுத்தது. அதற்கு சீப் என்கிற அடைமொழியும் உண்டு.

🦁சிங்கங்கள் சிறந்த பார்வை திறன் கொண்டவையாக இருக்கின்றன. சிங்கங்களின் பார்வை திறன் என்பது மனிதர்களின் பார்வை திறனை விட ஆறு மடங்கு அதிகம்.

🦁பொதுவாக மணிக்கு 4 கி.மீ. தூரம் நடக்கும். சிங்கங்கள் ஓட ஆரம்பித்தால் மணிக்கு 56 கி.மீ. வேகத்தில் ஓடும். இரையை தேட வேட்டைக்கு செல்லும்போது அது
7 முறை முயன்றால் அதில் ஒரு முறை மட்டுமே வெல்லுமாம்.

🦁இதன் கர்ஜிக்கும் ஓசையின் அளவு எவ்வளவு தெரியுமா? 114 டெசிபல்கள், இதன் கர்ஜனை காட்டில் 8 கி.மீ.க்கு அப்பால்கூட கேட்குமாம். அதனுடைய எல்லைக்குப் பாதுகாப்புக்காக `சார்ஜ்' எடுத்திருக்கிறேன் என அங்கிருக்கிற எல்லா விலங்குகளுக்கும் கர்ஜனை மூலம் செய்தியைச் சொல்லும். ஒருவேளை உத்தரவின்றி வேறு யாராவது உள்ளே நுழைந்திருந்தால் உடனே கிளம்பிவிட வேண்டியதுதான்.

🦁பொதுவாக பெண் சிங்கங்கள்தான் இரையை தேட வேட்டைக்குச் செல்லும். ஆனால், கொண்டுவரும் இரையை முதலில் ருசி பார்த்து சொல்வது ஆண் சிங்கங்கள்தான். அதன் பிறகுதான் பெண் சிங்கங்கள் சாப்பிடும் கடைசியாக குட்டிகள் இரையை சாப்பிடும். மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் சிங்கங்கள் வேட்டைக்கு செல்லும்.

🦁சிங்கங்களுக்கு அதிகளவு வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் சராசரியாக ஒரு நாளுக்கு 16-20 மணி நேரம் உறக்கம் கொள்ளும். வியர்வை அதிகம் வெளிவராத குளிர்ச்சியான இரவு நேரங்களில் தங்களது வேட்டையை நடத்தும்.

🦁சிங்கங்களின் மேனியின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதனைக் கொண்டு அவற்றின் வயதை கணக்கிடலாம். மேனி, முடியின் நிறம் கருமையாக மாறும் போது அவை முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன என்பது அர்த்தம்.

🦁சிங்கங்களின் குதிகால்கள் தரையை தொடுவதில்லை. எனவேதான் அவை எந்தவொரு சத்தமும் இல்லாமல் நடந்து இரையை வேட்டையாடுகிறது. பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் சிங்கங்கள் வலிமை, கம்பிரம், மூர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் போர் தெய்வங்களாக கருதப்பட்டன.

🦁சிங்கத்திற்கு இருக்கிற ஒரே எதிரி கழுதைப்புலி கூட்டம்தான். ஒரு கழுதைப்புலி கூட்டத்தில் 15-லிருந்து 20 கழுதைப்புலிகள் வரை இருக்கும். சிங்கத்திற்கும் கழுதைப்புலிகளுக்குமான சண்டைகள் பெரும்பாலும் உணவு விஷயத்தில்தான் தொடங்கும். சிங்கம் போராடித் துரத்தி வேட்டையாடுகிற உணவை, கழுதைப்புலிகள் சிரமமேயன்றி எளிதாக உணவாக்கிக்கொள்ளும். இங்கிருந்துதான் இரண்டு விலங்குகளுக்கும் இனப்பிரச்னையே ஆரம்பிக்கிறது. கூட்டமாக இருக்கிற கழுதைப்புலிகள் சிங்கத்தின் உணவைக் கூட்டமாகச் சென்று உணவாக்கிக் கொள்ளும். பெண் சிங்கங்களிடமிருந்து எளிதாக உணவைப் பிடுங்கி விடுகிற கழுதைப்புலிகள் ஆண் சிங்கத்திடம் வாலாட்ட முடியாது. பிரைடு வருகிறதென்றால் மற்ற சிங்கங்களே ஒதுங்கி நிற்கும்பொழுது, கழுதைப்புலிகள் தலைதெறிக்க ஓடிவிடும். கழுதைப் புலிகளின் சர்வைவல் அதன் சூழ்ச்சியில் இருக்கிறது. சிங்கத்தின் சர்வைவல் அதனுடைய வீரத்தில் இருக்கிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement