For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்!

12:31 PM Jan 07, 2024 IST | admin
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்
Advertisement

மிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம், வேளாண்மை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன. பெருந்தொழில்களுக்கு மட்டுமல்லாமல், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் தனி அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

Advertisement

அதை அடுத்துஇப்போது தொடங்கிய மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருந்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Advertisement

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். விழாவில் அவர் பேசிய போது, `''மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதாரத்தை உயர்த்தக் கடுமையாக சவால்களை எதிர்கொண்டோம்.பிரதமரின் இதயத்தில் தமிழகத்துக்கெனத் தனி இடம் இருக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் என்று இலக்கு வைத்து செயல்படும் தமிழ்நாட்டு முதல்வருக்கு வாழ்த்துகள். அவ்வாறு நடந்தால், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி தேவை. தமிழக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்தியாவில் தமிழகத்தின் பங்கைப் பறைசாற்றும் வகையிலும் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா திட்ட இயக்குநரான நிஹர் ஷாஜிக்கு என்னுடைய வாழ்த்துகள். அவருக்கு எல்லோரும் எழுந்து நின்று பாராட்டுவோம்''. என்றார்

விழாவில் வரவேற்று பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாட்டிலேயே 2 வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறினார். மேலும், எலக்ட்ரானிக் வாகனங்கள் தயாரிப்பு, ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்வது போல, முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலீடு மழையாக பெய்யும் என நம்புகிறேன். பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவது வழக்கம்.  ஆனால் அனைத்து வெளிநாடுகளும் இங்கு வந்துள்ளதால் கோட் சூட் அணிந்துள்ளேன். அனைத்து வகை தொழில்களிலும் முன்னேறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு பல்வேறு விதங்களில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர்.  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், சிறந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நாடுகள் தமிழ்நாடு அரசுடன் பங்குதாரர்களாக இணைந்துள்ளனர்” என தெரிவித்தார்.

மாநாட்டு விழா மேடையில், மத்திய அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பாராம்பரிய அடையாளமாக காளையும், வீரரும் கொண்ட சிலை வடிவ பரிசு விருந்தினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஹுண்டாய் நிறுவனம் தமிழத்துடன் 6 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் உன் சோ கிம் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.அப்போது, 'வணக்கம்' என தமிழில் பேசிய அவர், ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் தயாரிப்பதற்கான ஆலையை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கும், ஹூண்டாய் நிறுவனத்திற்கும் நீண்ட கால தொழில் உறவு உள்ளதாகவும் உன் சோ கிம் தெரிவித்தார்.

Tags :
Advertisement