உலக மனிதநேய தினம்!
இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப்பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலும், இவர்களைப் பாதுகாக்க பாடுபட்ட சேவையாளர்களை நினைவு கூரும் வகையிலும் மனிதநேய நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ, �`உலக மனித நேய தினமாக�' அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது. 2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதலாவது உலக மனிதநேய தினம் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டது.
இந்த மனித நேயச் சிந்தனை தமிழனுக்குப் புதிதல்ல. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எல்லா ஊர்களும் நமதே! எல்லோரும் நமது உறவினர்களே! என்று சங்ககாலப் புலவன் கணியன் பூங்குன்றனின் கூற்று உயர்ந்து ஓங்கி ஒலிக்கிறது. "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன - மத - தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது
ஒரு மனிதன் அறிவாளியாக இருக்கலாம். ஆளுமை உடையவனாக இருக்கலாம். அதிகாரம் படைத்தவனாக இருக்கலாம். எல்லாம் இருந்தும் அவனிடம் மனித நேயம் இல்லாவிட்டால் தான் நினைத்த எதையும் அவனால் சாதிக்க இயலாது. மனித நேயத்தின் மூலமே இறைவனை காண முடியும். பல ஆயிரம் ஆண்டுகளாக மனித நேய மாண்புடன் வாழ்ந்த புனிதர்கள் நிறைந்த பூமி நமது பூமி. உயர்வான ஒழுக்கம், உன்னதமான பண்பாடு, அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனித நேயம்,ஆன்ம நேயம், அத்தனை நற்பண்புகளோடும் உலகம் வியக்கும் வாழ்க்கை வாழ்ந்து மனித குலம் செழிக்க வழிகாட்டினார்கள் நம் முன்னோர்கள்.ஈ, எறும்பு, புழு, பூச்சி, வண்டு, பறவை, விலங்குகள் கூட துன்பப்படக் கூடாது என்ற எண்ணம் அவர்களது மனதில் மேலோங்கி இருந்தது.சங்க காலத்து கடையெழு வள்ளல்கள் தங்களது கொடைமடைச் செயல்களால், மனித நேயத்தின் சிகரங்களாக புகழப்பட்டார்கள்.குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தனது போர்வையைக் கொடுத்தான் பேகன். வாடிய முல்லைக்கொடி படர தனது தேரினை ஈந்தான் பாரி. வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் காரி. ஒளி மிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் ஆய்.. நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தனது புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் அதியமான். பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி.பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி.
ஆனால் வாட்ஸ் அப்பில் கூட்டு குடும்பம் நடத்தும் இன்றைய மனிதனின் மனித நேயத்தின் நிலை என்ன. மனிதனை மனிதன் மதிப்பதுமில்லை. அரவணைப்பதுமில்லை. மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதுமில்லை. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகுபாடு மறந்து, விருப்பு வெறுப்பற்று, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற மனித நேய சிந்தனையோடு பவனிக்கும் மனிதர்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
உலக வரலாற்றில் மனித இனம் பல தடைகளைத் தாண்டி முன்னேறி வருகிறது. ஆரம்ப காலத்தில் இயற்கை சீற்றங்களான கடல் கொந்தளிப்பு, பூகம்பம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொண்டு மனித இனம் வளர்ந்தது. அடுத்து காட்டு வாழ்க்கையில் கொடிய விலங்குகளான புலி, கரடி, சிங்கம் போன்றவற்றின் தாக்குதல்களைச் சமாளித்து வாழ்ந்தான்.மனிதன் குடும்பமாக மாற்றியதும் நாடு நகரங்கள் உருவாகின. அப்போது மனிதர்களிலேயே சிலர் மிருகங்களாக மாறி, மற்ற இனத்தினரை நிறம், மொழி, தேசம், மதம் போன்ற வேறுபாட்டை காட்டி தாக்கினார்கள். படுகொலை நடத்தி வருகிறார்கள். ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வு. அந்த உணர்வை இன்றைய தினத்தில் நம்முள் நுழைத்து நாமும் மனித நேயர்களாக மாற உறுதிமொழி எடுப்போம்.