கல்லீரலைக் காப்போம்;ஹெப்படைட்டிஸ் டே!
சர்வதேச அளவில் 32 கோடியே 50 லட்சம் பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 13 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆண்டுதோறும் 70,000 பேருக்கும் மேல் இறந்து போகிறார்கள். இந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பது `ஹெபடைட்டிஸ்’ எனப்படும் கொடிய வைரஸ். இந்தத் தொற்றை ஏற்படுத்த மூல காரணம் இதுதான் என்றாலும், நம் நாட்டில் அதிகமாகியிருக்கும் மதுப்பழக்கம் கல்லீரல் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாகியிருக்கிறது. ஹெபடைட்டிஸில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகையான வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பி-யும் சி-யும்தான் மிக ஆபத்தானவை. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் (Baruch Samuel Blumberg) பிறந்த தினத்தைத்தான், `உலக கல்லீரல் அழற்சி தின’மாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கிறோம். உலகளவில் பல கோடி பேர் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்று. அதன் காரணமாகத்தான் இந்த தினத்தில், உலகளவில் ஏராளமான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், முகாம்கள் நடத்தப்படுகின்றன.
எயிட்ஸ் நோய்தான் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோய் என்று அதிகம் கவனம் பெற்றுள்ள நிலையில், உண்மையில் எயிட்ஸ் நோயின் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகமாக, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 இலட்சம் பேர் கல்லீரல் அழற்சி நோய் பாதிப்பால் மரணமடைகின்றனர்.. னேலும் இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி, சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
கடுமையான வகை
மருத்துவத்தில் கல்லீரல் அழற்சியைக் கடுமையான வகை, நீடித்த கடுமையான வகை என்று இரண்டு பிரிவாக அழைக்கிறார்கள். கடுமையான வகை கல்லீரல் அழற்சி என்று கண்டறியப்பட்டால் கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். மஞ்சள் காமாலை நோய்கூட கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்போதே வருகிறது. காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகைப்பிடிக்க வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, கண்கள், தோல் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி ஆகியவை இதற்கு அறிகுறிகள்.
நீடித்த கடுமையான வகை
நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெப்படைட்டிஸ் இருப்பதே தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதைப் பொறுத்து, இந்த வகையில் நோயின் தீவிரம் வெளியே தெரியும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக் கசிவு, முகப்பரு, அளவுக்கு அதிகமாக மாதவிடாய் நீள்வது, சிறுநீரக அழற்சி, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்சினையும் ஏற்படலாம்.
மதுப்பழக்கம், போதைப்பழக்கம், தேவையற்ற மருந்துகள் உட்கொள்பவர்கள், பாஸ்ட்புட் உணவுகள், எண்ணைய் உணவுகள், சுத்தமற்ற தண்ணீர் ஆகியவை காரணமாக கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. சமீப காலங்களில் இந்தியாவில் அதிகரிக்கும் மதுப்பழக்கம் காரணமாக அதிகளவில் கல்லீரல் செயலிழப்பு மரணங்கள் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, அதில் பெரும்பாலானவை இளம்வயது மரணங்கள் என்பது வேதனை தரும் செய்தி.
கல்லீரல் அழற்சி நோயை தவிர்ப்பது எப்படி?
ஹெபடைட்டிஸ் சி வைரஸ் தாக்காமலிருக்க தேவையற்ற ஊசிமருந்துகளைத் தவிர்ப்பதுடன் மதுப்பழக்கம், போதைமருந்து, துரித உணவுகள், மசாலா, எண்ணெய் உணவுகள் உள்ளிட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இரவில் அதிக நேரம் கண்விழிப்பவர்கள், தூக்கம் சரிவர இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே முறையாக தூங்குவதும் கல்லீரல் நோயை குணமாக்கும்.
நிலவளம் ரெங்கராஜன்