வேர்ல்ட் பேமஸ் சயன்ஸ் மேகசின் நேச்சர்!
நேச்சர் (Nature) என்பது 1869 ஆம் ஆண்டு இதே நவம்பர் 4 ஆம் நாள் தொடங்கி இன்றும் தொடர்ந்து ஆங்கில மொழியில் வெளி வந்து கொண்டிருக்கும் உண்மையான உயர்தரமான ஓர் அறிவியல் ஆய்விதழ். நேச்சர் பத்திரிகையில் கட்டுரைகளை வெளி வருவது இன்றளவும் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. 3,00,000க்கும் அதிகமான மூத்த விஞ்ஞானிகள் மற்றும் செயற்குழுவினர்கள் நேச்சர் பத்திரிகையைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வருகின்றனர், மேலும் அப்பத்திரிகை 6,00,000க்கும் அதிகமான மொத்த வாசகர்களைக் கொண்டுள்ளது.
இதில் வெளியாகும் ஒவ்வொரு செய்திகள் மற்றும் கட்டுரைகள் அனைத்தும் பதிப்பாசிரியர்களால் டீப் டிஸ்கஷனுக்கு உட்படுத்தப்படுகின்றன, அதைத் தொடர்ந்து அக்கட்டுரை வெளியிடுவதற்கு முன்பாக உயர் மதிப்பாய்வு (பதிப்பாசிரியர்களால் தேரந்தெடுக்கப்படும் ஆராய்சியில் ஈடுபடாத மற்ற விஞ்ஞானிகள் ஒரு துறையில் அனுபவமுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதுடன், அக்கட்டுரைகளைப் படித்து கருத்துக்களை அளிக்கின்றனர்) செய்யப்படுகிறது.அது மட்டுமின்றி இந் நேச்சர் பத்திரிகையால் மதிப்பாய்வு செய்யும் கட்டுரைகள் குறித்து விவாதம் எழும்போது, அப்பத்திரிகை அவ்விவாதத்தை நிறைவு செய்யும் வகையில் ஆழ்ந்த விளக்கங்களை அளிக்கின்றது என்பது ஸ்பெஷல் நேச்சர்.
சாம்பிளுக்கு இந்த நேச்சர் இதழில் வெளியான ஒரு ரிப்போர்ட் இதோ :
சர்வதேச அறிவியல் இதழான ‘நேச்சர்’ நடத்திய ஆய்வில் பூமியில் 30 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆஹா, இவ்வளவு மரங்கள் இருக்கின்றனவா என்று மகிழ்வதற்கு முன் ஒரு நிமிடம். மனிதர்களால் வருடம்தோறும் அழிக்கப்படும் மரங்களின் எண்ணிக்கை மட்டும் 1,500 கோடி என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் அந்த ஆய்வு சேர்த்தே சொல்கிறது.யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி தாமஸ் க்ரோதர் தலைமையில் 31 உலக விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வு இது. பூமியில் உள்ள 46 சதவீத மரங்கள் அழிந்ததற்கு மனித நாகரிக வளர்ச்சியே காரணம் என்கிறது இந்த ஆய்வு. வேங்கைப் புலிகள், யானைகள், கானமயில்கள் அருகிப்போவது குறித்து நாம் கவலைப்படுவதுபோலவே, மரங்கள் அருகிவருவது குறித்துப் போதிய அக்கறை வெளிப்படாததை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர் வனப்பரப்பை ஆண்டுதோறும் இழந்துவருகிறோம். பூமிக்கு உயிரளித்துவரும் மண்ணையும், மண்ணை வளப்படுத்தும் மரங்களையும் ஒருசேர இழந்துவருவது தொடர்பான மிகப் பெரிய அபாய எச்சரிக்கையை இந்த ஆய்வு உலகுக்குச் சொல்லியுள்ளது.
பிரம்மாண்டமான ஆய்வு
உலகம் முழுக்க இருக்கும் மரங்களின் எண்ணிக்கை தொடர்பான இந்த ஆய்வு துல்லியமாகவும் புதிய முறைகளைக் கொண்டும் நடத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்களுடன், நிலப் பகுதிகளின் இயல்புக்கேற்ப வகை பிரிக்கப்பட்டும், நிலப் பகுதியில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட 4 லட்சத்து 29 ஆயிரத்து 775 ஆய்வுகளுடன் ஒப்பிடப்பட்டும் புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் மரங்களை வெட்டி அடுப்பெரிக்கவும், எரிபொருளாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன் ஆடைகள், கட்டிடக் கட்டுமானத்துக்கும் மரங்கள் பெருமளவு பயன்பட்டுள்ளன. ஆனால், மரங்களின் இந்த நேரடி பயன்பாடுகளைவிட, அவை தரும் மறைமுகப் பயன்பாடுகள் பெரும் மதிப்புமிக்கவை.
மரங்களின் உலகம்
ஒரு தனிமரம் என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகிறது என்றுதான் நினைக்கிறோம். ஆனால், ஒவ்வொரு தனிமரமும் ஒவ்வொரு உலகம். இலைகள், கிளைகள், வேர்கள் எனத் தன்னுடைய ஒவ்வொரு பாகத்தின் மூலமாகவும், எத்தனையோ சின்னஞ்சிறு உயிரினங்களுக்கு வாழ்வதற்கு இடமளித்து, உயிர் வளர்த்து உலகம் வளர்க்கின்றன தாவரங்கள். பூமியின் மேற்பரப்பான சுற்றுச்சூழலையும் வேர்ப்பகுதியான நிலப்பரப்பையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, மரங்களே அடிப்படையாக உள்ளன.மரங்கள் உறுதியுடன் மண்ணைப் பிடித்து வைத்திருக்கும்போது, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு நேர்வதில்லை. நதிகள், நீரோடைகளின் போக்கை மரங்களே ஒழுங்குபடுத்துகின்றன. மடிந்த பின்னர், மரக்கழிவுகள் இயற்கையான தடுப்பை உருவாக்கி, குளங்களுக்கும் ஏரிகளுக்கும் உருவம் கொடுக்கின்றன.
இயற்கை ஈரப்பதமூட்டி
நிலப்பகுதியில் நீரின் போக்கில் தாக்கம் செலுத்தும் மரங்கள், ஆவியாதல் மூலம் காற்றின் மீதும் தாக்கம் செலுத்திவருகின்றன. பெரும்பாலான தாவரங்கள், வேர்கள் வழியாகத் தண்ணீரை உறிஞ்சி, தண்டுகள் மற்றும் கிளைகள் வழியாக இலைகளில் உள்ள நுண்துளைகளுக்கு அனுப்புகின்றன. இந்த நுண்துளைகள்தான் கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக்கொண்டு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளியைச் சேர்த்துச் சமைத்து, தாவரங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்கின்றன. உலகின் முதல் மற்றும் சுயசார்பு உணவுத் தயாரிப்பாளர்கள் தாவரங்கள்தான்.ஒளிச்சேர்க்கையின்போது மிகவும் குறைவான நீரே உட்கொள்ளப்பட்டு, மிச்ச நீர் ஆவியாக வெளியிடப்படுகிறது. இதனால் மரங்கள், இயற்கையான ஈரப்பதமூட்டிகளாக மாறுகின்றன. மண்ணில் உள்ள நீரை மேலே உயர்த்தி, மேகங்களாக மாற மரங்களும் உதவிப்புரிகின்றன. மழைக்காடுகளில் அதிக மழை பொழிவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
அற்புத அமேசான்
பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 3,200 கோடி டன் கார்பன் டைஆக்சைடை மனிதர்கள் வெளியிடுகின்றனர். காற்றில் அதிகரிக்கும் கார்பன் டைஆக்சைடின் அடர்த்தியால் ஒளிச்சேர்க்கையின் வேகம் மேம்பட்டுத் தாவரங்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். இதனால் மரங்களில் கூடுதல் கார்பன் டைஆக்சைடு சேரும்.அமேசான் மழைக்காடுகளில் மட்டும் ஆண்டுதோறும் 200 கோடி டன் கார்பன் டைஆக்சைடு சேர்கிறது. அமேசான் மரங்களின் இலைகள், கிளைகள், தண்டுகள் மற்றும் வேர்களில் 10,000 கோடி மெட்ரிக் டன் கார்பன் சேர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் அமேசான் இப்படித்தான் பங்காற்றிவருகிறது.
உலகளாவிய இழப்பு
அதேநேரம், கார்பன் டைஆக்சைடு அதிகரிப்பது நிச்சயமாக நன்மையல்ல. அதிவேகமாக வளரும் மரங்கள், சீக்கிரமாகவே தளர்ந்து மரணித்தும் விடுகின்றன. வறட்சி போன்ற அதீதப் பருவநிலை நிகழ்வுகளால் மரங்களின் இழப்பு விகிதம் கூடும் என்று நேச்சர் இதழின் ஆய்வு தெரிவிக்கிறது. புவியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, அமேசான் மழைக்காட்டின் பரப்பும் குறைந்துபோகலாம்.உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கார்பன் டைஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலமே, காடுகளை அழிக்கக் காத்திருக்கும் கார்பன் வெடிகுண்டைச் செயலிழக்க வைக்க முடியும்.
உயிர்கள் எஞ்சுமா?
அமேசானில் மட்டுமல்ல, உலகின் அனைத்துக் காடுகளிலும் உள்ள மரங்களைக் காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவும், நமது புரிதலை மேம்படுத்தவும் நேச்சரின் புதிய ஆய்வு வழிகாட்டுகிறது.உலக நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு தப்படியும், கோடிக்கணக்கான மரங்களை நசுக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். வளர்ச்சியின் பெயரால் இயற்கையின் மீது மனிதர்கள் செலுத்திய மிக மோசமான தாக்கத்தின் பயனாக ஏற்பட்ட பேரழிவையும், இனிமேலாவது விழித்துக்கொண்டால்தான் பூமியில் உள்ள உயிர்கள் எஞ்சியிருக்கும் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வு ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது
நிலவளம் ரெங்கராஜன்