தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலக குடும்ப மருத்துவர் தினம்

08:09 AM May 19, 2024 IST | admin
Advertisement

ண்டு தோறும் மே 19 ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேசம் அளவில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப மருத்துவர் அமைப்பு – WONCA) 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிவித்தது. குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போதும், அவர்களால் முடியாத பட்சத்திலும் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பார். எனவே குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

இன்றைய சூழலில் பெரும்பாலானோர் ஒவ்வொரு ஆரோக்கிய குறைபாட்டுடன் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். வயதானவர்களுக்குதான் நோய் வரும் என்பதெல்லாம் மாறிவிட்டது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தீவிரமான நோய் தாக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதிலும் இன்று 70-80% பேர் நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இவை அல்லாமல் வயதுக்கேற்ப இதயம் தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்றவற்றையும் கொண்டிருக்கலாம். இவர்கள் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியவர்களே.நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் என்ன மாத்திரைகள் எடுக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பலரும் மருத்துவரை அணுகும் போது என்ன மாத்திரை எடுக்கிறீர்கள் என்று கேட்டால் மாத்திரையை தேடுவார்கள். இவர்கள் முதலில் என்ன மாத்திரை எடுக்கிறோம். என்ன அளவில் எடுக்கிறோம். எவ்வளவு காலம் எடுக்கிறோம் என்பதை தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதை இவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூட அறிந்து வைத்திருக்க வேண்டும்.

Advertisement

அந்தக் கால திரைப்படங்களில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். உடல்நிலை சரியில்லாதவரை ஒரு மருத்துவர் வீடு தேடிவந்து பரிசோதித்து, ஊசி போட்டுவிட்டுப் போவார். அது எல்லாம் பொது மருத்துவர்கள் அதிகம் இருந்த காலம் அது. வீட்டுக்கு ஒரு மருத்துவர் இருப்பார். நாம் அவரை ‘ஃபேமிலி டாக்டர்’ என்போம். அவருக்கு அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் உடல்நிலை பற்றியும் முழுமையாகத் தெரிந்திருந்தது. அதனால், அவர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு எது அலர்ஜி, என்ன பிரச்னை என முன் உணர்ந்து சிகிச்சை தர முடிந்தது. இன்று நிலைமை அப்படி இல்லை. மருத்துவ விஞ்ஞானம் வளர வளர எங்கும் துறைசார்ந்த சிறப்பு மருத்துவர்கள். ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு மருத்துவர். மக்களும் கண்கள் சிறிது சிவந்திருந்தால்கூட நேராக கண் மருத்துவரைப் பார்க்கச் செல்கின்றனர். லேசான தலைவலி என்றால்கூட நரம்பியல் மருத்துவரை நோக்கிப் படை எடுகின்றனர். எக்ஸ்ரே, ஸ்கேன் என்று பர்ஸைப் பழுக்கவைத்துவிட்டு “உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இது சாதாரணப் பிரச்னைதான்” என்று மருத்துவர் சொன்னதும், “காசுக்குப் பிடிச்ச கேடு... நமக்கு நேரம் சரி இல்லை” எனப் புலம்பித் திரும்புகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் இன்றும் பொது மருத்துவரின் சேவைதான் பிரதானமானது. அவர்கள் அந்த அமைப்பை இன்னும்கூட கறாராகப் பேணிவருகிறார்கள். அதாவது, ஒருவர் என்ன பிரச்னை என்றாலும், தன்னுடைய மருத்துவரைச் சந்தித்துதான் முதலில் ஆலோசனை பெற வேண்டும். அவர் பரிந்துரைத்தால்தான் சிறப்பு மருத்துவரைச் சந்திக்க முடியும். ‘ப்ரைமரி ஒபினியன்’ என்னவென்று தெரிந்தகொண்ட பிறகு ‘ஸ்பெஷாலிட்டி ஒபினியன்’ என்னவென்று நாடுவதுதான் நல்லது. இது குறித்த விழிப்புஉணர்வு மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்மிடம் சுத்தமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போது இதய நோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர், மூட்டு மருத்துவர், நீரிழிவு நோய் நிபுணர், இரைப்பை சிறுகுடல் நிபுணர், முதுமை நோய் மருத்துவர் இன்னபிற சிறப்பு மருத்துவர்கள் எனப் பெருகிவிட்ட நிலையில் குடும்ப மருத்துவர்கள் அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகிறார்கள். சரி, இப்படிப் பல நிபுணர்கள் இருக்கும் நிலையில், நாம் சிகிச்சை பெறுவதற்கு யாரைத் தேர்ந்தெடுப்பது?

குடும்ப மருத்துவருக்கும் சிறப்பு மருத்துவருக்கும் அப்படி என்ன வித்தியாசம்?

🩺 குடும்ப மருத்துவர்கள் (family doctors/family physicians) அல்லது பொதுநல மருத்துவர்கள் (general practitioners) என்று அழைக்கப்படுபவர்கள் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள். சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருக்கலாம்.

🩺 இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள்.

🩺 இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் கூடுதல் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.

🩺 எல்லா நோய்களுக்கும் சிறப்பு மருத்துவம் தேவை இல்லை. சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.

🩺 ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக ஒரே பொதுநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருவதால், நாளடைவில் இரு தரப்பினரிடைய வலுவான ஓர் உறவு ஏற்படுகிறது; மருத்துவர் மேல் நம்பிக்கையும் உண்டாகிறது. இந்த பரஸ்பர உறவு மருத்துவ சிகிச்சையில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

🩺 பொதுநல மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல, தானாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஒரு பொதுநல மருத்துவரை சில முறை பார்த்து பரிச்சயம் செய்துகொண்ட பின்னரே, அவர் தனக்கு ஏற்புடையவர் தானா என்பது தெரியவரும்.

🩺 சிறப்பு மருத்துவர்கள் தாம் சாந்த துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே, பொதுநல மருத்துவர் ஒருவரின் ஆலோனையின் பேரிலேயே இவர்களை நாடுவது நல்லது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் சிறப்பு மருத்துவர்களிடம் செல்ல பொதுநல மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் அவசியம்.

🩺 தனியார் சிறப்பு மருத்துவர்கள் வாங்கும் கட்டணம், தனியார் பொதுநல மருத்துவர்களைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

🩺 சிறப்பு மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை அதிகமாக செய்யச் சொல்லுவது உண்டு; சில நேரம் ‘ஒரு ஸ்கேன் செய்துப் பார்க்கலாமா?’ என்று தானாக அவரைக் கேட்கும் நோயாளிகளும் உண்டு!

🩺 நோயின் அறிகுறிகள் தோன்றும்போது முதலில் பொதுநல மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதுவே சிறந்தது. அவரது ஆலோசனையைப் பெற்று, சிறப்பு மருத்துவர் ஒருவரை நாடலாம். காலமும் செலவும் மிஞ்சும்.

🩺 மருத்துவ உலகில், பொதுநல மருத்துவர்கள் வழங்குவது முதல் நிலை மருத்துவப் பராமரிப்பு என்றும், சிறப்பு மருத்துவர்கள் வழங்குவது இரண்டாம் நிலை மருத்துவ பராமரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

🩺 பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்குவற்கு முதல் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதுதான் சிறந்தது என்பதே எல்லா நாடுகளும் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருந்துவருகிறது. மத்திய அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை (2017) இதையே வலியுறுத்துகிறது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Family physiciansgeneral practitionersHealthcareprimary careWFDDWorldFamilyDoctorDay
Advertisement
Next Article