For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வேர்ல்ட் எமோஜி டே!

07:16 AM Jul 17, 2024 IST | admin
வேர்ல்ட் எமோஜி டே
Advertisement

மோஜி, இன்று உலகப் பன்முக மொழியாகிவிட்டது. உலக அளவில் நாள் ஒன்றுக்குச் சுமார் 600 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என எமோஜிபீடியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து எமோஜி மொழிப் பயன்பாட்டை அறிந்துகொள்ள முடியும். எல்லைகளைக் கடந்து ஒரு புதிய உலகத்தை திறன்பேசி உருவாக்கிவிட்டது. அதன் தேசிய மொழி எமோஜி. ஒரே வார்த்தையில் சொல்வதானால் இமோஜிக்கள் இல்லாத வாழ்க்கையை இன்று யாராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையினர் தங்கள் உணர்வு களை வார்த்தைகளில் தெரிவிப்பதைவிட இமோஜிக்களில் தெரிவிக்கவே விரும்புகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எனச் சமூக ஊடகங்களில் எந்தச் செய்தியும் இமோஜிக்கள் இல்லாமல் பகிரப்படுவதில்லை. இந்த இமோஜி கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் விதமாக ‘உலக இமோஜி நாள்’ ஜூலை 17 அன்று கொண்டாடப்படுகிறது.

Advertisement

உள்ளத்தில் உள்ளதைச் சொல்வதற்குத்தான் மொழி. இதற்குத்தான் நாட்டுக்கு நாடு எத்தனை மொழிகள், வட்டார வழக்குகள்? ஆனால், உணர்வுகளைப் பரிமாற முகபாவம் போதாதா? முகபாவத்திலிருந்து ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறது நம் புதுக்காலம். அதுதான் எமோஜி. ஸ்மார்ட் போன், சமூக ஊடகங்கள் ஆகியவற்றுக்கான புது மொழி இது.எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு சில எமோஜிக்களை பரிமாறாமல் யாருக்கிடையேயும் எந்த உரையாடலும் நடப்பதில்லை. அதிகளவில் சொற்களைப் பயன்படுத்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த எளிதான வழி எமோஜிக்கள்தான். சமூக வலைத்தளங்கள் தற்போது உலகின் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மொழிகளை மாற்றி சேவைகளை வழங்குகின்றன. ஆனால் உலகின் எந்த மொழிக்கும், நாட்டிற்கும் பொதுவாக பயன்படுத்தப்படுவது எமோஜிக்கள்தான்.

Advertisement

இந்த மொழியை முதன்முதலாக ஜப்பானைச் சேர்ந்த ஷிகேடகா குரிதா 1999இல் வடிவமைத்தார். டொகோமோ நிறுவனத்தின் தொடக்கக் காலக் கைபேசியில் குறுஞ்செய்திப் பரிமாற்றம் அதிக அளவில் இருந்தது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகச் செய்திகளைத் தட்டச்சுவதற்குப் பதிலாக அதற்கு இணையாகப் படங்களை அனுப்பலாம் என அந்த நிறுவனம் தீர்மானித்தது.குரிதா அதற்கான படங்களை உருவாக்கத் தொடங்கினார். வானிலை, வேலை, போக்குவரத்து என வெளி விஷயங்களைத் தெரிவிப்பதற்கான குறியீட்டுச் சித்திரங்களை அவர் வடிவமைத்தார். அதுபோல் காதல், பிரிவு, அரவணைப்பு, ஆதரவு, நம்பிக்கை என மனதை வெளிப்படுத்தும் சித்திரங்களையும் அவர் உருவாக்கினார்.

இவர் உருவாக்கிய 176 பிக்டோகிராம் சித்திரங்கள், நவீன ஓவியத்துக்கு இணையாகக் கொண்டாடப்பட்டன. அதன் அசல் வடிவம் நியூயார்க் நவீன ஓவிய அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதே அதற்குச் சாட்சி. ஒவ்வோர் ஆண்டும் புதிய எமோஜிகள் காலத்துக்குத் தகுந்தாற்போல் கூடுதலாகச் சேர்த்து அந்த மொழியை வலுப்படுத்தும் வேலையில் எமோஜிபீடியா அமைப்பு ஈடுபட்டுவருகிறது. எமோஜிபீடியாவின் முதன்மை ஆசிரியர் கீத் ப்ரோணி. இவர்கள் எமோஜிக்களை உருவாக்கி திறன்பேசி, சமூக ஊடகங்களுக்குக் கையளிக்கிறார்கள்.

ஜப்பானிய மொழியிலிருந்து வந்த வார்த்தை எமோஜி. எ என்றால் வரைபடம் என்றும், மோஜி என்றால் கேரக்டர் என்றும் அர்த்தமாகும்.

முகத்திற்கு நேர் நடக்கும் உரையாடலில் ஒருவரின் கையசைவுகளும் பாடி லாங்குவேஜும் அவரின் குரல் தொணியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்தும் பேசுபவரின் எண்ண ஓட்டத்தை அறிய மிகவும் உதவும். ஆனால், ஆன்லைன் உரையாடல்களில் ஒருவரின் எண்ண அலைகளை கணிப்பது சிரமம். சில நேரங்களில் ஒருவர் சொல்லும் விஷயம் முற்றிலும் தவறுதலாக புரியக் கூடிய சூழ்நிலைகளும் உள்ளது.

இது போன்ற சிக்கல்களை ஆன்லைன் உரையாடல்களில் தவிர்க்க பெரிதும் உதவுவது இந்த எமோஜிக்கள். ஒரு செய்தியின் முடிவில் சேர்க்கப்படும் சரியான இமோஜி அந்தச் செய்தியின் பொருளையும் அதற்கு நாம் அளிக்க இருக்கும் விளக்கத்தையும் நிர்ணயிக்கும் திறம் கொண்டது. நேரில் நாம் ஒரு சிரித்த முகத்தைப் பார்க்கும்போது நமது மூளைக்குள் சில பகுதிகள் புத்துணர்ச்சி பெற்று நம்மையும் சிரிக்க செய்யும். அதேபோல் சிரிக்கும் எமோஜிக்களும் நம் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

நாம் ஆன்லைன் பேச்சுவழக்கில் எமோஜிக்களை உபயோகப்படுத்துவது ஒரு நெருங்கிய தோழமை உறவையும், முற்போக்கு சிந்தனை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இந்த இமோஜிக்கு ஆரம்பமாக விளங்கியது ":-)" என்ற குறியீடுதான். பின்னர் மக்கள் lol, ROFL, omg என்று வார்த்தைகளை சுருக்கி பேச ஆரம்பித்தார்கள். இவ்வாறு சுருக்கி வரையப்பட்ட இந்த வார்த்தைகள் இப்போது எமோஜிக்களாக வெளிவந்தது.

முதன் முதலாக இன்ஸ்டாகிராம் செயலி தான் எமோஜிக்களை ஹேஷ்டேக் மூலம் உபயோகம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் எந்தெந்த  எமோஜிக்களை எந்தெந்த தருணங்களில் உபயோகப்படுத்துகிறார்கள் என்று கணக்கிட முடியும்.

1. சிரித்து சிரித்து ஆனந்த கண்ணீர் வருவதை போல உள்ள எமோஜியில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகும்.

2. இரண்டு ஹார்ட் போன்ற கண்களைக் கொண்ட, அழகு என்பதை உணர்த்தும்  எமோஜி இரண்டாம் இடத்தை பிடிக்கிறது.

3. ஹார்ட் எமோஜி மூன்றாவதாக பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

4. தம்ப்ஸ் அப் எமோஜி ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

5. அழுகை முகம் கொண்ட எமோஜி 11 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

எமோஜிக்கள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டதால் நாம் அதனை உபயோகிக்கும் முன்னர் எந்த இமோஜிக்கள் எதனை குறிக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

இன்றைக்கு நீங்கள் எந்த இமோஜி-யை அதிகம் உபயோகித்துள்ளீர்கள் என்று உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா?.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement