For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச யானைகள் நாள்!

04:55 AM Aug 12, 2024 IST | admin
சர்வதேச யானைகள் நாள்
Advertisement

யானைகளில் இருந்து மருவிய விநாயகரை நாம் வணங்குவது போல் அல்லாமல், யானைகளின் உருவச் சிலைகளையே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் காணி பழங்குடியினர் வணங்குவதை பார்த்திருக்கலாம். இந்த உலகத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்க யானையின் பங்கு இன்றியமையாதது. ஆனால் உலகில் வாழ்ந்த 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து தற்போது உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இச்சூழலில் யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? யானைகள் அழிந்தால் என்னவாகும்? என்பது குறித்து விழிப்புணர் ஏற்படுத்த வருடா வருடம் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதாவது வில்லியம் சாட்னர் என்பவர் தனியார் வளர்க்கும் யானையை காட்டிற்குள் மீண்டும் கொண்டு விடுவது குறித்த கதை அம்சத்தைக் கருவாக வைத்து Return To The Forest (வனத்திற்குள் திரும்பு) என்ற ஆங்கில குறும்படத்தை எடுத்தார். இந்த படம் 2012 ஆகஸ்ட் 12 இல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பெரும்பான்மையான உயிரினங்களை நம் முன்னோர்கள் கடவுளோடு தொடர்புபடுத்தியே வாழ்ந்துள்ளனர். சிங்கம், புலி, பாம்பு , யானைகள் மற்றும் தல விருட்சங்கள் வழிபாட்டுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இன்றைய நவீன கால மரபணு பாதுகாப்பு மையங்களாகப் பார்க்கப்படும் புனித தோப்புகளும் இதில் அடக்கம்.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவற்றுக்கு இருக்கும் முக்கியத் துவத்தை உணர்ந்துதான் முன்னோர்களை இவற்றை கடவுளர்களாக வணங்கினார்களா அல்லது இது தற்செயல் நிகழ்வா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வுலகம் தழைத்து செழித்து வாழ இந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மட்டும் உறுதி.சில பழங்குடியின மக்கள் இப்போதும் சில விலங்கினங்களை வணங்குவதை பார்த்திருக்கூடும். யானைகளில் இருந்து மருவிய விநாயகரை நாம் வணங்குவது போல் அல்லாமல், யானைகளின் உருவச் சிலைகளையே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் காணி பழங்குடியினர் வணங்குவதையும் நாம் பார்த்திருக்கலாம். இந்த உலகத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்க யானையின் பங்கு இன்றியமையாதது.

Advertisement

யானை அழகான குணாதிசயம் கொண்டது. அதனை தேவையில்லாமல் தொந்தரவு செய்பவர்களை மட்டுமே தாக்கும். ஒரு எழில்மிகு, வளமான காடுகளை உருவாக்குவதில் யானைகள் பெரிய அளவில் செயலாற்றுகின்றன.நாம் பார்க்கும் அடர்ந்த காடுகள், யானைகள் போன்ற விலங்கினங்கள் இல்லாமல் உருவாகி இருக்க முடியாது. இதைப் புரிந்துகொள்ள யானையின் இயல்புகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ``வாழ்வதற்காக உண்; உண்பதற்காகவே வாழாதே” என்பது நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் கொண்டாடும் யானைகளின் வாழ்வே உணவைச் சுற்றித்தான் சுழல்கிறது. ஆம், யானைகள் பெரிய சாப்பாட்டு ராமன்கள்!யானைகள் பொதுவாக ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் பத்தொன்பது மணி நேரம் உணவு உண்பதற்காகச் செலவிடும். உணவு தேடலுக்காக வனங்களில் அலைந்து திரியும். யானைகளுக்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமார் இருநூறு கிலோ உணவு தேவைப்படும். அதற்காக நாற்பதிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் வனங்களில் நடக்கும். யானைகள் அடர்ந்த காடுகளுக்குள் நடந்து போகும்போது, மரக்கிளைகளை உடைத்து நடைபாதையை உருவாக்கும். அந்தப் பாதையைச் சிறிய விலங்கினங்கள் தங்களுக்கான நடைபாதையாகப் பயன்படுத்திக்கொள்ளும். அதோடு, வனத்துறை பணியாளர்கள் கூட, யானைத் தடத்தையே தங்களின் நடைபாதையாகப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம்.

உணவு தேடிச் செல்லும் யானைகள், மரத்தின் கிளைகளை உடைத்து உணவாக்கிக்கொள்ளும். கோடைக்காலங்களில் புற்கள் உள்ளிட்ட சிறிய தாவரங்கள் காய்ந்து போகும்போது, சிறிய விலங்குகள் உணவுத் தேவையில் தவிப்பதுண்டு. அந்த சமயங்களில் சிறிய விலங்குகளை உணவு தட்டுப்பாட்டில் இருந்து பாதுகாப்பது யானைகளே. அவை உணவுக்காக உடைத்த கிளைகளின் இலைகளே சிறிய விலங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. மேலும் யானைகள் உண்ட பழங்களின் விதைகள் வயிற்றில் தங்கி, சாணம் வழியாக வெளியே வரும் போது அவை அதிக வீரியம் மிக்க விதைகளாக மாறி அதிகளவில் முளைக்கின்றன. இவை குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்கள் பரவலாக வளர காரணமாகிறது. வனங்களுக்கு உரமாகவும் பூச்சிகள், வண்டுகளுக்கு உணவாகவும் சாணம் மாறி விடுகிறது. இந்த அடிப்படையில் ஒரு யானை தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை உருவாக்குகின்றன. இவ்வளவு பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில் இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு அளப்பரியது. யானைகள் தனக்கு மட்டுமின்றி மற்ற வன விலங்குகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்து, பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. யானைகள் இருக்கும் வனப்பகுதி வளமாக இருக்கும்.அதனால்தான் யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் விலங்குகள், மனிதர்கள் வாழவே முடியாது என்கிறார்கள்.உணவு, நீர் தவிர அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ கனிமச் சத்துகள் அவசியம். சில உயிரினங்களுக்கு மண்ணில் இருந்து அவை கிடைக்கும். பெரும்பான்மையான விலங்கினங்களுக்கு வனங்களில் இருக்கும் பாறைகள் மூலமாக கனிமச் சத்துகள் கிடைக்கும். யானைகள் தந்தத்தால் பாறைகளை உடைத்து அதில் உள்ள கனிமச் சத்துகளை வெளிக்கொண்டு வரும்போது அனைத்து விலங்கினங்களுக்கும் பயன்படும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு வனங்களில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதற்குக் காரணியாக அமைந்திருப்பதால் யானைகள், பல்லுயிர் ஆதார விலங்கினமாக விளங்குகின்றன.

மிகவும் புத்திசாலித்தனமான விலங்கினங்களில் ஒன்றான யானைகள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவை. உதாரணமாக, கூட்டத்தில் ஒரு யானை இறந்தால், அந்தச் சடலத்தின் அருகிலேயே இரண்டு மூன்று நாள்கள் கூட்டத்தின் அனைத்து யானைகளும் இருந்து துக்கம் அனுசரிக்கும். தன்னுடைய இயல்பான வாழ்க்கைக்கு ஒரு பெரிய நிலப்பரப்பு தேவைப்படுவதால் அந்த நிலத்தை மனிதர்களைப் போல் தனக்கானதாக மட்டும் கொள்ளாமல், அந்த நிலப்பரப்பில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் பயனுள்ள வாழ்வை யானைகள் வழங்குகின்றன. மேலும் மோப்ப, ஞாபக சக்தி அதிகம்: மற்ற விலங்குகளை விட யானைகளுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம். உதாரணமாக, ஒரு மனிதன் அதற்கு அன்பு செலுத்தினாலோ அல்லது துன்பு றுத்தினாலோ அந்த நபரை சுமார் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் கூட அதற்கு ஞாபகம் இருக்கும். யானைகளுக்கு மோப்ப சக்தியும் அதிகம். சுமார் 2 கி.மீ தொலைவு வரை மோப்பம் செய்து வைத்துக் கொள்ளும்.

இன்றைய சூழலில் ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று யானைகளை இரண்டு பிரிவாக வகைபடுத்தியுள்ளனர். ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் வசிக்கின்றன. 7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும் கொண்டவையாகும். பிரமாண்டத்திற்கு யானைகள் ஓர் உதாரணம். அப்படி காட்டிலிருந்த யானைகளை மனிதன் பிடித்து வந்து பழக்கினான். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டிப் போர் அடித்த சோழநாடு" என்ற சொற்றொடர் முற்காலத்தில் விவசாயத்திற்கு யானைகள் எவ்வாறு பயன்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பண்டையத் தமிழ் மன்னர்களின் நான்குவகை படைகளில், குஞ்சரப் படை எனப்படும் யானைப்படை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

கி.பி. 1225-ல் சீன புவியியலாளர் சா யூ-குவா சோழ நாட்டைப் பற்றியும் சோழர்ப் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"சோழநாடு மேற்கிந்திய நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. சோழ அரசிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்துகிறார்கள். சோழர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படைதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.போரிடுவதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்ட யானைகள், ஆலயங்களில் தெய்வ காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தந்தத்திற்காக யானைகளைக் கொல்வது அதிகரித்த காரணத்தால் 1872-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு, யானைகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. அதன்பிறகு சர்க்கஸ், ஆலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றில் மட்டுமே யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. சர்க்கஸ்கள் தங்கள் செல்வாக்கை இழந்த பிறகு, ஆலயங்களிலுள்ள யானைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து வருகிறது.

யானைகளின் வழித்தடம் விளைநிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சாலைகளாகவும், பிற கட்டடங்களாகவும் மாறிவிட்டன. யானைகள் தனது வலசைப் பாதையில் வருவதைத்தான் யானைகள் ஊருக்குள் வந்துவிடுகின்றன, விளைநிலங்களில் புகுந்துவிட்டன என்று தற்போது கூறப்படுகிறது. யானைகள் இருந்தால்தான் மனிதர்களுக்கு அத்தியாவசியமான நீரும், தூய்மையான காற்றும் தரும் காடுகள் வளம் பெரும். நாடு செழிக்க வேண்டும் என்றால் காடுகள் செழிக்க வேண்டும், காடுகள் செழிக்க வேண்டும் என்றால் அதில் யானைகள் வாழ வேண்டும்'

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement