For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம்

05:33 AM Nov 14, 2024 IST | admin
உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம்
Advertisement

ண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும், இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

சர்க்கரை நோய் என்பது உடலின் ஏதோ ஒரு பகுதியை மட்டும் பாதிப்பது கிடையாது. பல்வேறு வகையான நோய்களுக்கான வாசலாக அது இருக்கிறது. மேலும், ஒருவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டால், அவரது பரம்பரையே சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. அதனால்தான் மொத்த மருத்துவ உலகமும் சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது..!அந்த வகையில் தற்கால மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோய், நீரிழிவு நோய். இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Advertisement

பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து. எனவே, நாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்கமுடியும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது. அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இன்றைய தலைமுறையில், வயது வித்தியாசம், இன பேதம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் இளம்வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதாகப் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவுக் கலாசாரம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவைதான் இளம்நோயாளிகளின் அதிகரிப்புக்குக் காரணம். மனஅழுத்தம் மற்றும் மாற்று உணவு முறைகளால், மென்பொருள் பொறியியலாளர்களிடையே நீரிழிவு நோய் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இளைஞர்களுக்கு நீரிழிவு நோயானது, ஊட்டச்சத்து குறைந்த நொறுக்குத்தீனி, மது அருந்துவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. காசநோய், டெங்கு, மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் பல தீவிரத் திட்டங்கள் இருந்தாலும், நீரிழிவு போன்ற பரவாத நோய்களுக்கு மிகச்சில திட்டங்களே உள்ளன. இத்திட்டங்களை இன்னும் விரிவுபடுத்தி கிராமப்புற மக்களிடம் நீரிழிவு நோய் ஆய்வுகள், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது அவசியமாகும்.

சர்க்கரை நோயாளிகள் முதலில் முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று வாழ்க்கை முறையிலும், உணவு முறைகளிலும் சில மாற்றங்களை மேற்கொள்வதுதான். அதில் முதலில் உடலில் இனிப்பைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது அதிக நன்மையைக் கொடுக்கும். டீ, காபி போன்ற பானங்களில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தற்போது பலர் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, சுகர் ஃப்ரீ, தேன், வெல்லம் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை அனைத்துமே நேரிடையாகவும், மறைமுகமாகவும் நம்முடைய உடலுக்கு இனிப்பைக் கொடுக்கக் கூடியது, சர்க்கரை நோயாளிகளுக்குத் தீமையை விளைவிக்கக்கூடியது. டீ, காபி என எதுவாக இருந்தாலும் ஒரு நாளில் 200 மில்லிக்கு மேல் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அடுத்தது கார்ஃப் (Carbs) உணவுகள் எனச் சொல்லப்படும் மாவுச் சத்துள்ள உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து உள்ளது என்றால் வெறும் அரிசி மட்டுமல்ல, இட்லி, தோசை சப்பாத்தியும் கூட . அதனால் அவற்றின் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது நல்லது.

காய்கறிகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் மண்ணுக்கடியில் விளையாத காய்கறியாக இருத்தல் அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். மிக மிக முக்கியமான விஷயம் 1 மணி நேரமாவது கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். மூன்று வேளை சாப்பாட்டைத் தவிர்த்து, இடையில் பசிக்கின்ற நேரத்தில் கொய்யாக்காய், வெள்ளரிக்காய், தேங்காய் சில் போன்றவற்றை ஸ்னாக்ஸ் போன்று எடுத்துக் கொள்ளலாம். பிஸ்கட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றின் கூடவே மிக முக்கியமானது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லது. நாமாக மற்ற சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவு நேரத்தில் இனிப்பான பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விட வேண்டும். மிக முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை எப்போதுமே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை உடலுக்கு இனிப்பு சக்தியைக் கொடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில் உடலின் சர்க்கரையின் அளவு குறைப்பதற்கு அதிக பட்ச வாய்ப்புள்ளது.

இதே வழிமுறைகளைச் சர்க்கரை நோய் அல்லாதவர்களும் பின்பற்றும் பட்சத்தில் நீரிழிவு நோயில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். இது மட்டுமில்லாமல் மது, புகைப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். தங்களுடைய உயரத்திற்கு ஏற்ற எடையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், சரியான தூக்கம் மிக அவசியம். வாழ்க்கை முறையில் இதுபோன்ற மாற்றங்களை மேற்கொண்டு, உணவில் சில விஷயங்களைத் தவிர்த்தாலே நீரிழிவு நோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் .

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement