வேர்ல்ட் வேட்டி டே! - இந்நாள் யார் பிறந்த தினத்தையொட்டி கொண்டாடபடுகிறது தெரியுமோ?
வேட்டி... இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது. வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள். கடல் தாண்டியும் வேட்டி அணியும் கலாசாரம் இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது. நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது. இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகுதான் இன்றைய இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. கொஞ்சம் விரிவாகச் சொல்லப்போனால், தெருவெல்லாம் வேட்டிகளே தென்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆண்கள் உடை என்றால் அது வேட்டிதான். பான்ட், டிரவுசர் போன்றவற்றை அன்று இந்தியர்கள் அறிந்ததே இல்லை. ஆங்கிலேயே ஆட்சிக்குப் பின் நிலை தலைகீழானது. தலைக்கு வெளியே குடுமி போய் கிராப் வந்தது. தலைக்கு உள்ளேயும் ஆங்கிலக் கலாசாரச் சிந்தனைகள் நிறைய விதைக்கப்பட்டன. இடுப்பிலிருந்த வேட்டி தானாய் நழுவி, அங்கே பேன்ட் இயல்பாய் இடம்பெறத் தொடங்கிவிட்டது.
ஒருகாலத்தில் வேட்டிகளால் மட்டுமே நிறைந்திருந்த இந்தியாவிலும் அதன் ஒரு பகுதியான நம் தமிழகத்திலும் இன்று வேட்டி அணிபவர்கள் எண்ணிக்கை சொற்பமே. தமிழக அரசியல்வாதிகள் பலர் வேட்டி அணிகிறார்கள் என்பதால் (அந்த ஒருவகையில் மட்டும்!) அவர்களைப் பாராட்டலாம்.
முன்பெல்லாம் மூலகச்சம், பஞ்ச கச்சம் எனப் பெரிய வேட்டியை விதம்விதமாய்க் கட்டிக் கொள்வதுண்டு. டபிள் வேட்டி என சாதாரண வேட்டியைப் போலவே இரண்டு மடங்கு அளவில் நீளமுடைய வேட்டிகள், இன்றும் கடைகளில் வாங்கக் கிடைக்கின்றன.
சில பிரிவினரில் திருமணமான ஆண்கள் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இரு மடங்கு நீளமுள்ள வேட்டியைப் பஞ்சகச்சமாய்க் கட்டும் மரபு இருந்தது. திருமணம் ஆகாத ஆண்களுக்கு வேட்டியை அப்படிக் கட்டும் உரிமை கிடையாது!
இடுப்பைச் சுற்றி ஒரே ஒரு சுற்றாக எளிமையாய்க் கட்டப்படுவதற்குத் தட்டுச்சுற்று என்று பெயர். பெரும்பாலானோர் தட்டுச்சுற்று கட்டுபவர்கள் தான்.
திருமணம் போன்ற மங்கல தினங்களிலும், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களிலும் ஆண்கள் பட்டு வேட்டி கட்டினார்கள். சாதாரண நாளில் ஒருவர் பட்டு வேட்டி கட்டிக் கொண்டு தெருவில் நடந்துபோனாலே அன்று அவர் தொடர்பான ஏதோ மங்கல விசேஷம் என்று பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
கேரளத்தில் பெண்களும் வேட்டி அணிவதுண்டு. இடுப்பில் வேட்டி அணிந்து, மேலே மாராப்பாக இன்னொரு வேட்டியைப் போர்த்திக் கொண்டு எளிய உடையணியும் பெண்களை கேரளத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
நாம் அணியும் உடை என்பது பெரும்பாலும் வசதியைப் பொறுத்தே புதுப் புது வடிவங்களை எடுக்கிறது என்பது உண்மைதான் . அந்த வகையில் பேன்ட் தான் வசதி என்று பலர் கருதுகிறார்கள். பேன்ட்டில் இல்லாத ஒரு வசதி வேட்டியில் உண்டு. பேன்ட்டை மடித்துக் கட்ட முடியாது! மழைக்காலங்களில் வேட்டி அணிபவர்கள் இயல்பாக அதை மடித்துக் கட்டிக்கொண்டு மழைநீரைக் கடக்க முடியும். பான்ட்டில் உள்ளது போலவே இப்போது பாக்கெட் வைத்த வேட்டிகளும் வரத் தொடங்கியுள்ளன.
இன்று மகப்பேறின்மை பல குடும்பங்களில் ஒரு பிரச்னையாக உள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை பான்ட் போன்ற இறுகிய உடை இதற்கான காரணங்களில் ஒன்று என்ற கருத்தும் நிலவுகிறது. வேட்டி சுகாதாரமானது. காற்றோட்டமானது. வெயில் காலத்திற்கு மிக ஏற்றது. ஆனால் நாம் பகுத்தறிவே இல்லாமல் அல்லவா செயல்படுகிறோம்? இந்த வெய்யில் நாட்டில் பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் ஷூ போட்டு அனுப்புகிறோமே?
மேலும் வேட்டி அணியத் தயங்குபவர்கள் சொல்லும் ஒரு சாக்கு, வேட்டி இடுப்பிலிருந்து நழுவிவிடுமோ என்ற அச்சம். அணிந்து பழகிவிட்டால் நழுவாது. அல்லாமலும் அப்படி உணர்பவர்கள், `உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே` உதவ, பெல்ட் அணியலாம்!
முன்பெல்லாம் ஐந்து நட்சத்திர அந்தஸ்து உடைய பெரிய உணவகங்களில் வேட்டி அணிந்தவர்கள் உள்ளே வரக் கூடாது என்ற விதி இருந்தது. நம் பாரம்பரிய இந்திய உடைக்கு இப்படியொரு நிலை! ம.பொ.சி.யை ஓர் ஐந்து நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேச அழைத்தார்கள். அவர் அழைக்கப்பட்ட பேச்சாளர். வேட்டியைத் தவிர வேறேதும் உடுத்தாதவர். அந்த உணவகம் அவருக்காக விதியைத் தளர்த்தியது. அவர் தம்முடன் தமது ரசிகர்கள் சிலரையும் வேட்டி கட்டியவர்களாக அழைத்துச் சென்றார். உணவகம் வேறு வழியின்றி வாய்மூடி மெளனம் காத்தது. பிறகு வேட்டி கட்டியவர்களை உள்ளே அனுமதிக்காத உணவகங்கள் குறித்துப் பத்திரிகைகளில் விவாதங்களும் எழுந்தன. இப்போதும், சில உணவகங்களிலும் சில கிளப்புகளிலும் வேட்டி வரவேற்கத் தக்க உடையாகக் கருதப்படுவதில்லை. வேட்டி தினம் கொண்டாடும்போது இந்த நிலையையும் மாற்றுவது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.
இச்சூழலில் ஒரு சாதாரண கிராமத்து விவசாயி பிறந்த தினம் தான் இந்த வேட்டி தினமாக கொண்டாடப்படுகிறது என்றால் உங்களுக்கு பலருக்கு வியப்பாக இருக்கும். ஆம்.. தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பாப்பான்குளம் எனும் சிற்றுரில் ஒரு விவசாய குடும்பத்தில் 1920 ஜனவரி 6ல் பிறந்தவர் ஏகாம்பரநாதன் "அம்பர் இராட்டை" (Ambar Charkha) எனப்படும் மரத்தாலான மேம்படுத்தப்பட்ட ஒரு நூற்புக்கதிர் இயந்திரத்தை கண்டுபிடித்து நெசவுத் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தியவர் இந்த ஏகாம்பரநாதன்.
முன்னதாக இப்படியான அம்பர் ராட்டை என்ற கருவியை உருவாக்குபவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தரப்படும் என்று காந்தியடிகள் அப்போது அறிவித்திருந்தார். ஆனால் ஒரு தமிழர் இந்த பரிசை பெற்றுக் கொள்வதா? நெவர் என்று கங்கணம் கட்டிக் கொண்ட சில வடக்கன்ஸ் களால் அவருக்கு கடைசிவரை அந்த ஒரு லட்ச ரூபாய் கிடைக்காமலே போய்விட்டது என்பது தனி சோக கதை)
"புணமாலை ஏகாம்பரநாதன்" என பரவலாக அறியப்படும் இவர், சமூக பணிக்காக 1958 ல் பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழர் ஆவார்.
இவரது பிறந்த தினம் தான் (ஜன.6) வேட்டி தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பெரிய பங்கு உண்டு. அவர் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த போது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், ‛ரோமானியர்களுக்கு ஆடை அனுப்பிய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். அந்த ஆடையை பெருமைபடுத்தும் விதமாக, தமிழ் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாக கொண்டாட வேண்டும்,’’ என்று அந்த கடிதத்தில் சகாயம் தெரிவித்திருந்தார். எந்த நாளை இதற்காக தேர்வு செய்யலாம் என்றபோது ஏகாம்பரநாதன் குறித்து ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சகாயத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து அவர் பிறந்த தினமான ஜனவரி 6 ஐ வேட்டி தினமாக அறிவித்தார் அவர்.
அதை ஏற்று பலரும், வேட்டி தினத்தை கொண்டாடத் தொடங்கினர். இந்த முன்னெடுப்பு, யுனெஸ்கோ கவனத்திற்குச் சென்றது. அவர்களுக்கு அதை அங்கீகரித்து, ஜனவரி 6 ல் சர்வதேச வேட்டி தினம் என்பதை முறைப்படி அங்கீகரித்தனர் என்ற வரலாறு முக்கியம்.
தேவா