ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்!
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று கடைபிடிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் செல்லப்படுபவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் குறிக்கப்படுகிறது. கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் போன்ற துன்பகரமான வேலைகளுக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட சுரண்டுவது ஆள் கடத்தல் ஒரு குற்றம் என்பதை மற்றவர்களுக்குக் கற்பிக்க உதவுகிறது. இந்த நாள் மனித கடத்தலின் தீமைகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.
ஆட்கடத்தல் குறித்து கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில தரவுகளை ஐநா வெளியிட்டது. இதன்படி உலக அளவில் கடத்தப்படும் மனிதர்களில் 46% பெண்கள்தான் உள்ளனர். மேலும் 20% ஆண்களும், 15% சிறுவர்களும், 19% சிறுமிகளும் உள்ளனர். அதாவது ஓராண்டில் மட்டும் சுமார் 100 பேர் கடத்தப்படுகிறார்கள் எனில் அதில் 46 பேர் பெண்கள்தான். வளர்ந்து வரும் மனித சமூகத்தை இந்த ஆட்கடத்தல் கும்பல்கள் எப்படி பின்னோக்கி மீண்டும் நகர்த்துகிறது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் ஓர் எடுத்துக்காட்டு.
இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விசயம் என்னவெனில் இவ்வாறு கடத்தப்படும் பெண்களில் 77% பேர் பாலியல் சுரண்டலுக்காகவே திட்டமிட்டு கடத்தப்படுகின்றனர். அதேபோல சிறுமிகளை பொறுத்த வரையில் 72% சிறுமிகள் பாலியல் தேவைகளுக்காகவும், 21% சிறுமிகள் குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றவும் கடத்தப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் மற்றும் சிறார்கள் கடத்தல்களின் முக்கிய நோக்கம் அடிமைத் தொழிலாளியாக மாற்றுவதற்காகத்தான் என்பது ஐநாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இவர்களை கொண்டு குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிச்சை எடுக்க வைப்பது, திருமணம் செய்து வைப்பது, அவர்களது உள்ளுறுப்புக்களை திருடுவது என பல செயல்களை கடத்தல்காரர்கள் செய்கின்றனர்.
அந்த வகையில் மனிதர்களைக் கடத்துதல், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இருப்பது பெருங்கொடுமை. பணத்துக்காக, குழந்தைக்காக, பழிவாங்க, பலிகொடுக்கக் குழந்தைகள் கடத்தப்படுவதைப் பற்றி அடிக்கடி படிக்கிறோம். ஏழைகள், மொழி தெரியாதவர்கள், கல்வியறி வற்றவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்ற சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள், இயற்கைப் பேரிடர், போர், வன்முறை மற்றும் தொழில் சார்ந்து புலம்பெயர்கிறவர்கள், வீதியில் தங்குகிறவர்கள், உடல் நலமும் மனநலமும் குன்றியவர்களே ஆட்களைக் கடத்துகிறவர்களின் இலக்கு.
ஆட்களைக் கடத்துகிறவர்கள் பலவகை. தனி ஒருவரே திட்டமிட்டுக் கடத்துவது, இருவர் மூவர் சேர்ந்து ஒருவரைக் கடத்திவிட்டுப் பிரிந்துவிடுவது, அமைப்பாகச் சேர்ந்து வலைப்பின்னலுடன் செயல்படுவது. இவர்கள் அனைவருமே அறிவியல் வளர்ச்சியின் உதவியுடன் மிக எளிதாகவும் விரைவாகவும் கடத்தலைச் செய்துமுடிக்கிறார்கள். மனிதக் கடத்தல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதும் கடத்தல்காரர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.கடத்தல் என்றாலே, குழந்தைகள் கடத்தப்படுவதை மட்டுமே பலரும் நினைக்கிறோம். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு 2019-ல் இந்திய அளவில் 2,260 பேரும், தமிழக அளவில் 16 பேரும் மட்டுமே கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இன்னும் கூடுதலாக, பிச்சை எடுக்க, உறுப்புகள் திருட, வன்முறைகளில் ஈடுபடுத்த, மதுக்கூடங்களில் ஆட, மற்றும் பாலியல் தொழிலுக்காக என்றெல்லாம் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, வெளியூரிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அழைத்து வந்து விவசாயம், சமையல், சுரங்கம், தொழிற்சாலை, துணிக்கடை, கட்டிடத் தொழில், வீட்டு வேலைகள் போன்றவற்றில் குறைந்த கூலிக்குப் பல மணி நேரம் வேலைசெய்யக் கட்டாயப்படுத்துவதும், சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பதும், கட்டாயத் திருமணம் செய்வதும் ஆட்கடத்தல்தான். அதனால்தான், ஆட்கடத்தலை நவீன அடிமை முறை என்கிறார்கள்.
மனிதக் கடத்தல் (Human Trafficking) அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அது குறித்தப் புரிதல் இல்லை. ஆங்கிலத்திலுள்ள, Kidnapping / child-lifting, Abduction, trafficking and smuggling போன்றப் பல்வேறு வார்த்தைகளுக்கும், தமிழில் “கடத்தல்” என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சட்டத்தின் பார்வையில் இவையனைத்தும் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தத் தெளிவு இருந்தால் மட்டுமே, மனிதக் கடத்தலைத் (human Trafficking) தடுக்கவும், கடத்தலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவவும் முடியும்.
மனித கடத்தல் குறித்து சில தவறான கருத்துக்களும், புரிதல்களும் காணப்படுகிறது. ஆகவே உண்மை நிலவரம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கடத்துபவர்கள் அவர்களுக்குத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கடத்துகிறார்கள்: உண்மையில் பெற்றோர், உறவினர்கள், காதல் / வாழ்க்கைத்துணை போன்றோர் கடத்தலுக்கு உடந்தையாக அல்லது கடத்துபவர்களாக இருக்கிறார்கள். காதல் என்ற பெயரில் இளம்பெண்களை வசப்படுத்தி திருமணம் செய்துகொள்கிறேன் என்று அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டது, மீட்கப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல், பெற்றோர் / உறவினர்கள் கடத்துவதற்கு உதவியாக இருக்கிறார்கள்.
தொழிலாளர்களைக் கடத்துதல் என்பது வளரும் நாடுகளில் மட்டுமே பிரச்சினையாக உள்ளது: உண்மையில் வளர்ந்த நாடுகளிலும் வேலைக்காக கடத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் பெரும்பாலும், பாலியல் கடத்தலை விட குறைந்த அளவிலேயே கண்டறியப்படுகிறது. வேலைக்காக கடத்தப்படுவது பெரும்பாலும் புலம் பெயர்தல் (Migration) என்ற பெயரில் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.
கடத்தப்படும் நபர்கள் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள் அல்லது அந்த சூழலை விட்டு வெளியேற முடியாமல் பூட்டப்பட்டு இருப்பார்கள்: உண்மையில் சில நேரங்களில் இது போல் நடக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், சூழல் காரணமாக வேறு வழியின்றி அவர்கள் விருப்பத்துடன் இருக்கிறார்கள். வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்பு கருதி வெளியே சொல்லத் தயங்குவார்கள். பல நேரங்களில் அவர்கள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற புரிதலே அவர்களுக்கு இருக்காது.
கடத்தப்பட்ட நபர் சுய ஒப்புதலின் அடிப்படையில் நன்றாகத் தெரிந்தே ஒரு சூழலில் இருக்க சம்மதிப்பது கடத்தல் ஆகாது: இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 இன் படி கடத்தப்படுபவர்களின் சம்மதம் ஒரு பொருட்டாகாது. சுரண்டும் நோக்கில் செய்யப்படும் செயல்பாடுகள் அனைத்தும் குற்றமே. மேலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் தொழிலில் அவர்கள் சம்மதத்துடன் ஈடுபடுத்தினால் சட்டப்படி குற்றம்.
மனிதக் கடத்தல் என்பது சட்டவிரோதமான தொழில்களில் மட்டுமே நிகழ்கிறது: உணவகங்கள் கட்டுமானத் தொழில்கள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல தொழில்களில் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. மனித கடத்தல் என்பது ஒரு நபரை மாநில, மாவட்ட அல்லது தேசிய எல்லைகள் தாண்டி அழைத்துச் செல்வதைக் குறிக்கும். உண்மையில் மனித கடத்தல் என்பதும், smuggling என்பதும் வெவ்வேறு செயல்கள். ஒரு ஊரின் எல்லையில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை ஒரே ஊருக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடைபெறலாம்.
பெண்கள் மட்டும் பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்: உண்மையில் ஆண் குழந்தைகளும், ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் இவர்கள் அடையாளம் காணப்படுவதில்லை. அப்படியே கண்டறியப்பட்டாலும் புகார்களாக பதியப்படுவதில்லை. LGBTQ சிறுவர்களும் இளைஞர்களும் கடத்தல் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களாகவே இருக்கிறார்கள். கடத்தல் என்பது பொதுவாக அல்லது எப்பொழுதும் ஒரு வன்முறை குற்றமாக இருக்கிறது: உண்மையில் பெரும்பாலான மனித கடத்தல்காரர்கள் சுரண்டும் எண்ணத்துடன் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுதல், மோசடி மற்றும் அச்சுறுத்தல் போன்ற உளவியல் ரீதியான வழிகளை கையாளுகின்றனர். தந்திரமாக பேசி அவர்களின் சம்மதத்துடன் அழைத்துச் செல்கிறார்கள்.எல்லாக் கடத்தல்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நடத்தப்படுகிறது: பாலியல் தொழில் தவிர வேறு வேலைகளுக்காகவும், பிச்சை எடுக்க, உடல் உறுப்புகளை மாற்ற, வாடகைத்தாய், விளையாட்டுகளில் ஈடுபடுதல், போதைப்பொருள் கடத்த, எனப் பல காரணங்களுக்காக கடத்தப்படுகிறார்கள்.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டு மனிதர்களை சக மனிதர்கள் கடத்துவதற்கு எதிரான நாம் ஒரு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம். இந்த தடுப்பு பணியில் ஈடுபடுவோர்களுக்கு உறுதுணையாக நிற்போம்.
நிலவளம் ரெங்கராஜன்