For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்!

07:14 AM Jun 12, 2024 IST | admin
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்
Advertisement

குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகத்தான வாழ்க்கை நிலை. துள்ளிக் குதிக்கவும், உலகைப் பார்த்து வியக்கவும், ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும், அனைவரும் முயலும் அரிய பருவமே குழந்தைப் பருவம். குழந்தைகளை மிகப் பெரிய பேறு என்று கருதியதால்தான் வள்ளுவர் மழலைகளுக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார். மழலைகளின் குரல்கள் யாழையும், குழலையும் மிஞ்சுவன என்றுப் பாராட்டினார். குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் களிக்கவேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளிலிருந்துப் பிரித்தெடுத்து, பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றம்; அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடும் பாதகம். ஆனாலும் இன்றுவரை நடந்துக் கொண்டிருக்கும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்கத்தில் ஐ.நா., சார்பில் ஆண்டு தோறும் ஜூன் 12ல் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

நம் நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று குழந்தைத் தொழிலாளர் முறை. "குழந்தைத் தொழிலாளர்" என்ற சொற்றொடர், மனரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, தார்மீக ரீதியாக குழந்தைகளுக்கு கிடைக்கும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. ஒரு பள்ளி செல்ல வேண்டிய வயதுடைய குழந்தை பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் எந்தவொரு வேலையும், குழந்தைத் தொழிலாக கருதப்படும் என்பதையும் இந்த சொற்றொடர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 18 வயது ஆகாத இளைஞர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது சட்டப்படி இந்தியாவில் தண்டனைக்குரியது. ஆனாலும் நம் நாட்டில் மட்டுமின்றி அதிகரித்துக் கொண்டே போகும் குழந்தை தொழிலாளர்கள் இந்த உலகின் மிகப்பெரிய சோகம்

Advertisement

முதன் முதலில், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டம் 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் நிகழ்ந்தது. 1833-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் குழந்தைகளை தொழிலாளர்களாக வேலை செய்வதை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுவந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த பிரச்சனை உலகளாவிய கவனத்தை பெற்றது. 1919ல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் அமைப்பு (ILO) குழந்தை தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான முறைமைகளை உருவாக்கியது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு குழந்தைத் தொழிலாளர்களை "குழந்தைப் பருவத்தை இழந்த குழந்தைகள்” என்று குறிப்பிடுகிறது. அவர்களின் ஆற்றல் மற்றும் சுய கௌரவத்தை இழந்து, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்" என்று இதை வரையறுக்கிறது.

குழந்தைகள் செய்யும் அனைத்து வேலைகளும் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் வராது. அதாவது குழந்தையின் நேர்மறையான வளர்ச்சிக்கு பங்களித்து அவர்களை சமூகத்தில் ஒரு சிறப்பான குடிமகனாக மாற்றுவதற்கான திறன்களையும் அனுபவத்தையும் வழங்கும் செயல்பாடுகள் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற கட்டத்துக்குள் அடங்காது. அப்படியாயின் யார் குழந்தை தொழிலாளர் என்றால், ஒரு குழந்தையின் உள, உடல் வளர்ச்சியை பாதிக்கும், அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும், அவர்கள் சுதந்திரத்தை சூறையாடும் இயற்கைக்கு முரணான எந்த வேலையும் குழந்தைகளை தொழிலாளர்களாக்குறது. இதன் மூலம் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை அவர்கள் இழக்கிறார்கள். அதனால் அவர்களின் பள்ளிப்படிப்பு தடைப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்களின் உச்சகட்ட கொடூரம் அவர்களை பெற்றோரிடம் இருந்தும் குடும்பங்களிடம் இருந்தும் பிரித்து, அவர்கள் ஆற்றலுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேலைப் பளுவை திணித்து, அவர்களை பெரு நகரங்களில் சிறு விலைகளுக்கு போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம், தீவிரவாதம் போன்ற பல சமூக விரோத செயல்களுக்காக விற்கப்படுவதும் ஆகும்.

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உலக அளவில் 5-17 வயதுக்குட்பட்ட சுமார் 160 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக இருந்தநிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் 8.4 மில்லியன் அதிகரித்துள்ளது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் விவசாயத் துறையில் தான் 70% வரை அதிகமாக உள்ளது. அதிக அளவிலான எண்ணிக்கை என்பது ஆசியா மற்றும் பசிபிக், அப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகளில் தான்.

குழந்தை தொழிலாளர்கள் இரண்டு வகையில் உருவாகுகிறார்கள். வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக பெற்றோர், பாதுகாவலர்கள் தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, அல்லது ஏஜென்ட்டுகளிடம் குறைந்த விலைக்கு விற்பது ஒரு வகை. இரண்டாவது வகை குழந்தை கடத்தல். உலகின் இருண்ட அறைக்குள் பணம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்ட குழந்தை கடத்தலில் மில்லியன் கணக்கான குழந்தைகள் குழந்தை தொழிலாளராக விற்கப்படுகிறார்கள்.

இன்று வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு துயரமாக இது தொடர்ந்து கொண்டிருப்பதற்கு, அரசாங்கங்கள் இலவச மற்றும் அனைவராலும் அணுகக்கூடிய கல்வியை வழங்க தவறியமை, சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகள் முறையாகக் கடைபிடிக்காமை, குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படாமை, மக்களின் அலட்சியப் போக்கு என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

திரையில் நிழல் உலக ஹீரோக்கள் இவ்வாறான ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கும் போது உணர்ச்சிவசப்பட்டு கை தட்டும் மக்கள், படம் முடிந்து வெளியே வந்து சுண்டல் விற்கும் சிறுவனிடம் பேரம் பேசி சுண்டல் வாங்கி செல்கிறார்கள். எத்தனை பேர் அந்தச் சிறுவன் ஏன் பாடசாலை போகாமல் இப்படி வேலை செய்கிறான் என்று தேடி, தீர்வு காண்கிறார்கள்? வீதியில் போகும்போது யாசகம் கேட்கும் குழந்தைகளை புறக்கணித்து செல்கிறோமே தவிர அவர்களுக்கான மறுக்கப்படும் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எவருமே நினைப்பதில்லையே? இந்த அலட்சியப் போக்கால் ஒரு சமூகமாகவும் நாம் நம் குழந்தைகளை பாதுகாக்க தவறி விடுகிறோம்.

எனவே இனிமேலாவது தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் ஏதேனும் பகுதிகளில் பணிபுரிவதைக் கண்டறிந்தால், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிப்போம்

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement