உலகத் தேங்காய் நாள்!
வரலாறு அறிய முடியா பழமை கொண்டது தேங்காய். தெற்கு பசிபிக் பகுதியான நியூ கினியாவில் இருந்து, கடலில் மிதந்து வந்த தேங்காய்களே இந்திய பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை பகுதிகளில் தென்னை பரவ காரணம் என்று விஞ்ஞானிகள் யூகித்திருக்கிறார்கள்கள். தேங்காய்க்கு ‘கோகோநட்’ என்ற பெயரைச் சூட்டியவர் வாஸ்கோடகாமா.உலகம் சுற்றிய அவர் தேங்காய்களை இங்கிலாந்திற்கு அறிமுகம் செய்தார். அவர் அதற்கு ‘கோகோ’ என்று பெயர் வழங்கியிருந்தார். அந்த ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு ‘மூடிய முகம்’ என்று பொருள். அது பருப்பு வகையுடையதாக விளங்கியதால் பிற்காலத்தில் ‘நட்’ என்ற பிற்சேர்க்கையும் இணைந்து கோகோநட் என்று வழங்கப்பட்டது.
இயற்கை பானமான இளநீர் தொடங்கி, தென்னையின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். “பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு, தென்னையைப் பெற்றால் இளநீரு” என்ற நம் முன்னோர் வாக்கு தென்னையின் பயன்பாட்டு குணத்திற்கு சான்று. தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை.தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். அந்த வகையில் பூமியில் விழும் மழை நீரை உறிஞ்சி எடுத்து, அதனுடன் தன் தனித்துவமான சுவையை கொஞ்சம் கலந்து, உள்ளே தண்ணீர் அதனுடன் வழுக்கை என, தன்னை சமைத்து இளநீர் என்ற வரபிரசாதத்தை தரும் தென்னை இயற்கை கொடுத்த வரம். ஏழைகளின் குளிர்பானம், நோயாளிகளின் அருமருந்து, சோர்வுற்ற நேரத்தில் ஆற்றல் ஊட்டி உள்ளிட்ட பல கோணங்களில் பலன் தரும் தேங்காயை கொண்டாடவே ஆண்டுதோறும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.. உலக தேங்காய் தினம் முதன்முறையாக 2009 இல் கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் தேங்காய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தேங்காயின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் நடுப்பகுதியிலுள்ள மூன்றாவது கண் நமது ஞானத்தைத் திறக்கும் கண்ணாகவும் அமைந்துள்ளதால் தேங்காய் கலச வழிபாட்டில் முதன்மையாக உள்ளது.பிரார்த்தனைகள் நிறைவேறக் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுவது வழக்கம். சிலர் விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைத்து வழிபடுவதும் வழக்கம். விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்குப் பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களைக் கொண்ட தேங்காயைச் சிவன் படைத்தார் என்கிறது புராணக்கதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேறப் பக்தர்கள் விநாயகருக்குச் சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.
தேங்காய் என்பது மும்மலத்தைக் குறிக்கிறது. தேங்காய் நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை அடிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும். தேங்காய்,இதயத்திற்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. மூன்றாம் கண்ணானது ஞானக் கண் என்பதைக்குறிக்கும். வெண்மை,சத்துவகுணத்தைக் குறிக்கிறது. சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், நமது ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, அந்த சமயத்தில் தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது என்பதுதான் தேங்காய் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
யாகங்களில் மிகவும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் தேங்காய் முதன்மையானது. பூர்ணாஹுதி என்று சொல்லப்படும் யாக நிறைவின் போது தேங்காயைப் பயன்படுத்திச் செய்யப்படும் பூஜையானது நிறைவுபெறுகிறது. வேள்விகள் யாகங்கள் முதலியவற்றில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் யாகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இறுதியாக யாக முடிவில், ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி, அக்னியில் சமர்ப்பிக்கின்றனர். இந்த பூர்ணாஹுதியின்ன் போது இளநீரோ, தேங்காயோ பயன்படுத்தப்படுவதில்லை. கொப்பரைத் தேங்காயே பயன்படுத்தப்படுகிறது. கொப்பரைத்தேங்காயின் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண ஆகுதி” ஆகிற முழுத்தகுதியைப் பெறுகிறது என்பது ஐதீகம்.
ஆசியா முழுவதும் தென்னை பரவலாக இருந்தாலும், இலங்கை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகம் ஆந்திரா மற்றும் கேரளாவில் 90 சதவீதம் சாகுபடியாகிறது. தேங்காயின் அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் மனிதனுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கு இணையான ஊட்டச்சத்து தேங்காயில் உள்ளது. அறுபது ஆண்டுகள் வாழும், தென்னை ஐந்து ஆண்டுகளில் மகசூல் தரக்கூடியது. இந்தியாவின் மொத்த தேங்காய் விளைச்சலில் 40 சதவீதம் பொள்ளாச்சியில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காயில் இருந்து மட்டும் எண்ணெய், மருத்துவம், உணவு, சோப், அழகு சாதனப் பொருள் போன்றவை தயாரிக்கப்படுகிறது..
தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்:
🥥தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.
🥥சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.
🥥முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
🥥வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.
🥥தேங்காயில் உள்ள மாங்கனீசு எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது..மேலும், இது கார்போஹைட்ரேட், புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்திற்கும் அவசியம்.
🥥உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குறிப்பாக, மலச்சிக்ககல், வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் போன்றவற்றை குணப்படுத்தும்.
🥥தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. எனவே இது உங்கள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.
🥥.தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
🥥இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.
நிலவளம் ரெங்கராஜன்