உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்! தமிழக வீரர் குகேஷ்!
உலக செஸ் சாம்பியன் போட்டி சிங்கப்பூர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனாக உள்ள சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.
நம் நாட்டைப் பொறுத்தவரை செஸ் போட்டி என்று குறிப்பிட்டாலே தமிழ்நாடுதான் நினைவுக்கு வரும். ஏனென்றால் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் அந்தளவுக்கு பல சாதனைகளை புரிந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 85 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதே போல் 23 பெண் கிராண்ட் மாஸ்டர்களில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் உள்ளனர். அதிலும் தற்போது ஆக்டிவாக உள்ள முதல் 10 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பெண்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பதே செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றுகிறது.
அதாவது சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றிபெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் அடுத்த சுற்றில் டிங் லிரென் வெற்று பெற்று குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 13-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.இந்நிலையில் நேற்று இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினர். இந்த சுற்று பெரும்பாலும் டிராவை நோக்கி செல்வது போன்றே தெரிந்தது. ஆனால் 58-வது நகர்த்தலின் போது குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதன்மூலம் 7.5 - 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக சாம்பியன் பட்டம் வென்ற 18-வது வீரர் குகேஷ். இதனால் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் குகேஷின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'உலக செஸ் சாம்பியன்ஷிப்பை குகேஷ் மகிழ்ச்சி அளிக்கிறது. 15 நிமிடங்களுக்கு முன் கூட போட்டியில் வெல்வாரா என சந்தேகம் இருந்தது. ஆனால் இறுதியில் அவர் வென்றது மகிழ்ச்சி அளித்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த டிங் லிரென் ரூ.10.13 கோடியை பெற்றார். குகேஷுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அடிசினல் ரிப்போர்ட்
கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக இளம் விரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார். பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை குவித்த அவர், மார்ச் 2018-இல் 34 வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான புள்ளிகளை பெற்றார்.
12 வயது ஏழு மாதங்கள் 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். அதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். செஸ் ஒலிம்பியாடில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2700-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், செஸ் உலகில் இளம் வயதில் 2700 புள்ளிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குகேஸ் பெற்றார். அதோடு, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனயை, 2022ல் குகேஷ் படைத்தார். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார்.