உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் & உலக புத்தக நாள் இன்று!
இன்றைய செய்தியையும், தகவலையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு வரலாறாக வழங்குபவை புத்தகங்கள்தான். காலப்பெட்டகமான புத்தகங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டியது நம் கடமை. `துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். புத்தகங்கள் வரலாற்றை அறிய உதவுவதுடன், சில நூல்கள் வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளன. அறிவுசார் சொத்துகளான புத்தகங்களைப் பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும்.
இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் அழகழகான வடிவமைப்புகளைச் செய்து புத்தகங்களைச் சீக்கிரமாக அச்சிட்டுவிடுகிறார்கள். இந்த வசதிகள் எல்லாம் வராத காலத்தில் புத்தகம் என்பது எந்த வடிவில் இருந்தது தெரியுமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புத்தகங்களைக் கையால்தான் எழுதி வந்தார்கள். அப்போது காகிதம் கிடையாது. ஓலைச் சுவடி போன்ற சில பொருட்களின் மீது எழுதினார்கள். கையால் எழுதப்படும் புத்தகத்தை இன்னொரு பிரதி எடுக்க வேண்டுமானால், அந்தப் புத்தகத்தைப் பார்த்துத் திரும்பவும் எழுதுவார்கள்.அதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகிவிடும். ஆனால், அச்சடிக்கும் முறை வந்த பிறகு இந்தச் சிக்கல் இல்லாமல் போனது.
அச்சடிக்கும் முறை சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 868-ம் ஆண்டில் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள். மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாகச் செதுக்கி, எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மையைத் தடவி அவற்றைத் தாளைக் கொண்டு அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகளை அச்சிட முடிந்தது. ஆனால், ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு பலகை தேவைப்பட்டது.மேலும் அதிக நேரமும் ஆனது. 1041-ம் ஆண்டில் பீஷெங் என்பவர் அதை இன்னும் எளிதாக்கினார். இந்த முறையை அடிப்படையாக வைத்து ஜெர்மனியைச் சேர்ந்த யோகான்னஸ் கூட்டன்பர்க் 1436-ம் ஆண்டில் அச்சு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இது நகரும்படியான அச்சாக இருந்தது. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சை உருவாக்கி அவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார் இவர். இது நவீன அச்சடிக்கும் இயந்திரமாக இருந்தது. தொடக்கத்தில் மரப்பலகையை இதற்குப் பயன்படுத்தினார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கூட்டன்பர்க் கண்டுபிடித்தார். இப்போது உலகெங்கும் பல கோடிப் புத்தகங்களைப் புதுமையான தொழில்நுட்பங்களோடு அச்சடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்புகள்தான் மூலகாரணம்.
இப்பேர்பட்ட புத்தகம் அதிகம் படித்த காலகட்டத்தில் நமக்கு மனநிலையும் சரி, உடல் நிலையும் சரி மிகச் சரியாக இருந்தது. ஆனால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் என்று கைவிட்டோமோ அன்றே நம் மனநிலையும் கெட்டுவிட்டது, உடல் நிலையும் கெட்டுவிட்டது. வாசிக்கும் பழக்கத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது. ஆனால், அது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. கேட்டால் நேரமில்லை என்று சொல்வார்கள். செல்போனில் பல மணி நேரம் செலவழிக்கும் நாம், வாசிப்புக்காக ஒரு மணி நேரம் கூட செலவழிப்பதில்லை என்பது வேதனையான விஷயம். செல்போனுக்காக நாம் செலவிடும் நேரம் விரயம்தான். ஆனால், புத்தகம் படிக்க நாம் செலவிடும் நேரம் நமக்கு நன்மைதான்.
வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது. நம்மை ஏமாற்றாத, சிறந்த நண்பன் புத்தகம்தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; துணிவான முடிவுகள் எடுக்க புத்தகம் துணை புரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி காணும். புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடி உள்ளார்கள்; வரலாற்றை மாற்றி எழுதி உள்ளார்கள்!
புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும். மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும்போது நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப்போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கத் தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனம் ஆகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப் போல, அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்! புத்தகங்கள் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர்கள் வாசிப்பதை உயிர் என்று மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்கள். புத்தகங்கள் நல்ல பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சி அளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்!
மேலும் தமிழில் பதிப்புரிமை என்று அழைக்கப்படும் சொல் பரவலாக அனைவராலும் குறிப்பாக பதிப்புத்துறையை சார்ந்தவர்களால் அதிகம் உச்சரிக்கபடும் சொல்லாக இருக்கிறது. பெரும்பாலும் copyright தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அவ்வப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அரங்கிலும் நடந்த வண்ணமாகவே இருந்தாலும்கூட இது தொடர்பான புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக, பெரும்பான்மையானோர் பதிப்புரிமையை அறிவுதுறை சார்ந்த ஒன்றிற்கு வழங்கப்படும் சட்ட ரீதியிலான பாதுகாப்பாக மட்டுமே கருதுகின்றனர். உண்மையில் பதிப்புரிமையின் சிறப்பையும் தேவையையும் இவ்வளவு சாதாரணமாக எண்ணிவிடுவது நமது படைப்பின் தரத்தை நாமே சந்தேகிப்பதற்கு ஒப்பானதாகும்.
பதிப்புரிமை எனப்படுவது படைப்பாளர் சட்ட ரீதியாக தன் படைப்பின் பயன்பாட்டை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான உரிமையாகும் (exclusive rights). பதிப்புரிமை எவ்வகையிலும் படைப்பாளருக்கோ அல்லது படைப்புக்கோ பாதுகாப்பு தருவதில்லை. ஒருவருடைய படைப்பு மற்றவர்களால் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் நிலையில் பதிப்புரிமை சட்டத்தின்கீழ் படைப்பாளர் தன்னிடமுள்ள பதிப்புரிமையைக் கொண்டு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் தன் படைப்பை பிறர் பயன்படுத்த தடை விதிக்கவும் உதவுகிறது.
இனி புத்தகங்கள் பற்றி சில பிரபலமான மேற்கோள்கள் உங்களுக்கு வாசிப்பு பழக்கத்தை தூண்டலாம்:
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது… எது நூலகத்துக்கு அருகில் உள்ளது - அம்பேத்கர்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் - மகாத்மா காந்தி
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகாநந்தர்
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவேன் - சார்லி சாப்லின்
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்றால் அது நூலகத்தின் இருப்பிடம் மட்டுமே - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா
புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பன் யாரும் இல்லை - எர்னஸ்ட் ஹெமிங்வே
நல்ல நண்பர்கள், நல்ல புத்தகம் மற்றும் நல்ல தூக்கம், இதுதான் சிறந்த வாழ்க்கை - மார்க் டிவெயின்
உங்களது கால்கள் நகராமலேயே உங்களை பயனிக்க வைக்கும். புத்தகங்களை பற்றி சிறந்த விஷயமே அதுதான் - ஜும்பா லஹிரி, தி நேம்சேக் நாவலின் எழுத்தாளர்
இந்த உலகத்தை ஒழுக்கமற்றது என்று அழைக்கும் புத்தகங்கள்தான் உலகத்தின் அசலான வடிவத்தை நம்மிடையே காட்டுகிறது - ஆஸ்கர் ஓயில்ட், தி பிக்சர் ஆப் கோரியன் கிரே நாவல் எழுத்தாளர்
நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம், இதுவரை எழுதப்படாமல் இருந்தால் நீங்கள்தான் அதை எழுதுபவராக இருக்க வேண்டும் - டேனி மொரிசன்
சிறந்த நூலகம் என்னிடம் இல்லாவிட்டால் பரிதாபமான நபராக உணர்வேன் - ஜேன் ஆஸ்டன், பிரைட் மற்றும் பிரிஜுடைஸ் புத்தகத்தின் எழுத்தாளர்