உலக சைக்கிள் தினம்!
உள்ளங்கை போனில் அடங்கி விட்ட செல்போன், தொழில்நுட்பம் வளர்ச்சி எல்லாம் அடைவதற்குமுன் சைக்கிள்தான் மனிதனுக்கு உற்ற தோழனாக இருந்தது மிதி வண்டி என்றழைக்கப்ப்பட்ட சைக்கிள். ஆனால் பின்னாளில் வந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட புதிய வாகனங்களின் வரவு சைக்கிள் பயன்பாட்டை மட்டுமல்ல, மனிதனின் ஆரோக்கியத்தையும் அழித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இப்போது உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும்விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3-ந் தேதியை உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடுமாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு நூற்றாண்டுகளாக மனிதர்களின் பயன்பாட்டில் உள்ள இந்த மிதிவண்டிகளின் தனித்துவம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை இந்த நாள் அங்கீகரிக்கிறது. இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில், மிதிவண்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதலால் ஏற்படும் சில அற்புதமான உண்மைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஆதிகாலத்தில் வாழ்ந்த மூத்த குடிமக்கள் உணவுக்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நாடோடியாக நடை பயணம் மேற்கொண்டார்கள் என சொல்வதுண்டு. மனித நாகரிகம் மெல்ல வளர்ந்த பிறகு அந்த நடைப்பயணம் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளுக்காகவும் மாறியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வரும் மக்கள் ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளுக்கு எதிராக பயணிக்கின்றனர். இப்படி மனிதர்களின் பயணத்தை துரிதப்படுத்த பல வாகனங்கள் வந்திருந்தாலும் சைக்கிள்களுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையவில்லை. அதிலும் சைக்கிள் மீது உலக மக்கள் கொண்டுள்ள மோகம் கொரோனா முதல் அலைக்கு பிறகு அதிகரித்த வண்ணம் உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழலை காக்கும் நோக்கிலும், சிலர் நிதி சிக்கலை சமாளிப்பதற்காகவும் மிதிவண்டியை மிதித்தபடி நம் ஊர்களின் சாலைகளில் பயணிக்கின்றனர்.
ஆம்.. அனைத்து உடற்பயிற்சிகளையும்விட சைக்கிள் ஓட்டுவது பேரானந்தத்தைத் தரும். வாழ்க்கையில் எத்தனைவிதமான அழுத்தம் இருந்தாலும், அதிலிருந்து விடுபட இது உதவும். முடிவுகள் எடுக்கமுடியாமல் குழப்பான மனநிலையில் இருப்பவர்கள், தெளிவான மனநிலையை அடைய சைக்கிள் பயிற்சி நிச்சயம் உதவும். நம்மைப் பற்றி நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளவும் சைக்கிள் பயணம் உதவும். சைக்கிள் ஓட்டுவதை வெறும் பயிற்சியாக மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமாக அணுகும்போது நமது வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறும். அதாவது சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு வகையான ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். இதனுடன், பல ஆய்வுகள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனநலம் மேம்படும் என்று காட்டுகின்றன. எனவே சைக்கிலிங்க் செய்தால் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
உடல் எடை அதிகரித்து தொப்பையுடன் இருப்பவர்கள், வாரத்துக்கு மூன்று நாள்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டினால் தொப்பை குறையும். அதிலும் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சைக்கிலிங்க் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். உண்மையில், இதுவரை பல ஆய்வுகளின் முடிவில், இது கலோரிகளை கரைப்பதில் உதவும் என்பதைக் காட்டுகின்றன. சுமார் 6 மாதங்கள் சைக்கிள் ஓட்டினால், 12% எடையைக் குறைக்கலாம்.
கால், இடுப்பு எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். `தொடர்ந்து சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவர்களுக்கு முதுகு வலி வராது' என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தில் உட்கார்ந்தநிலையில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் முதுகு வலி ஏற்படாமலிருக்க சைக்கிள் பயணம் மேற்கொள்ளலாம். ஏற்கெனவே முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சைக்கிள் பயிற்சி செய்யலாம்.
சைக்கிள் ஓட்டும்போது வியர்வை அதிக அளவில் வெளியேறுவதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி முகமும், உடலும் பொலிவு பெறும்.
சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரக்க சைக்கிள் பயிற்சி உதவும். அது மட்டுமின்றி சைக்கிள் தொடர்ந்து ஓட்டினால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம். உண்மையில், ஒரு ஆராய்ச்சியின் படி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டால் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் கணிசமாகக் குறைக்கும்.
உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபெற்று சைக்கிள் பயிற்சியில் ஈடுபடலாம்.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்- சைக்கிள் ஓட்டுதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். உண்மையில், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.
சைக்கிள் ஓட்டுவதால் பெண்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாதவிடாய்ப் பிரச்னை உள்ளவர்கள் சைக்கிள் ஓட்டுவது நல்லது. அடி வயிற்றில் சேரும் கொழுப்பை குறைக்கும். கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.
சைக்கிள் ஓட்டுவதால் உடலில் உள்ள மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும்.
நிலவளம் ரெங்கராஜன்