உலக மூங்கில் தினம்
பச்சைத் தங்கம் என்றும் ஆக்சிஜன் உருளை என்றுமழைக்கப்படும் மூங்கில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஏன் மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது? மூங்கில் மரத்தின் சிறப்பு என்ன, அதனை ஏன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர் என்பது குறித்து உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படும் சூழலில் தெரிந்து கொள்வோமா?
மூங்கிலின் பயனைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது மூங்கில்.
மூங்கில் குளிர்ச்சி நிறைந்த மரம், அதனை வளர்ப்பதால் சுற்றுப்புறம் முழுவதும் குளிர்ச்சி நிறைந்தே இருக்கும். கோடை காலங்களில் மூங்கில் வீட்டைச் சுற்றி இருந்தால் குளிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்பது அதன் இயல்பு. மூங்கிலினால் செய்யப்படும் நாற்காலியை பயன்படுத்தினால் உடல் சூட்டை அது தணித்துவிடும். எவ்வளவு நேரம் அதில் அமர்ந்திருந்தாலும் உடலுக்குச் சூட்டை ஏற்படுத்தாது.தற்போது பல அலுவலகங்களில் பயன்படுத்தும் குஷன் சேரைக் காட்டிலும் பன்மடங்கு நன்மை தரக்கூடியது மூங்கிலால் ஆன நாற்காலிகள்.
மூங்கில் விதையின் மூலம் கிடைக்கக்கூடிய மூங்கில் அரிசியில் ஊட்டச்சத்து அதிகமுள்ளது. பெரும்பாலும் இந்த அரிசியை பழங்குடியினரே அதிகம் உட்கொள்வர். ஆனால் தற்போது பல கடைகளில் மூங்கில் அரிசி கிடைப்பதால் பலரும் அதனை விரும்பி சாப்பிடுகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்த நோய் உள்ளவர்களை மூங்கில் அரிசியை உண்ணுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த அரிசி 60 வயதான மரத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும். மரம் நட்டு 60 ஆண்டுக்குப் பிறகு விதை வைக்கும். அந்த விதைகள் மூலமே அரிசி கிடைக்கிறது. இந்த அரிசி நெல் பயிரை போலவே இருக்கும், சாப்பிடுவதற்கு நெல் அரிசியை விட ருசியாக இருப்பதாகவும் தெரியவருகிறது.
புல் வகையைச் சேர்ந்தது மூங்கில். புல் வகைகளில் அதிக உயரமாக வளர்வது மூங்கில் மட்டுமே. மூங்கிலின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அந்த உயரத்தை சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடும். இது, மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் மரமாகவும் இருக்கிறது.
இதனால் மூங்கில் சார்ந்த பல தொழில்கள் உருவாகியுள்ளன. சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகவும் மூங்கில் பயன்படுகிறது. WBC-யின் முக்கிய குறிக்கோள், மூங்கிலை வைத்துப் பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான்.
.
மூங்கில் மரத்திற்கு தண்ணீர் விட வேண்டிய அவசியமில்லை. கோடை காலத்தில் தானாகவே வளர்ந்துவிடும். மழை காலங்களில் மழை பெய்யாவிட்டால் மட்டுமே மூங்கிலுக்கு தண்ணீர் தேவைப்படும். ஒரு மரம் வளர மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு மூங்கில் வருமானத்தை ஈட்டித் தரும். இந்த மரம் ஒன்றோடு ஒன்றோடு சேர்ந்து புதர் போலவே வளரும். மூங்கில் மரத்தின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை வாழும்.
மூங்கில் மரத்தின் இலைகள் ஆடு, மாடுகளுக்கு உணவாகும். மரத்தில் இருந்து கீழே விழும் இலைகள் பூமிக்கு உரமாகிறது. மூங்கில் மரக்கூழ், பேப்பர் தயாரிக்க உதவுகிறது. மூங்கிலில் உள்ள வேர்ப் பகுதியில் கிடைக்கும் கிழங்கு காட்டுப் பன்றிகளுக்கு உணவாகிறது.
முன்னரே சொன்னது போல் மூங்கில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை அதாவது 35 சதவீதம் எடுத்துக் கொள்ளக்கூடியது. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
தற்போது அதிகபடியான இடங்களில் சவுக்கு பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றுப்பயிராக மக்கள் மூங்கிலை பயிரிடவேண்டும். மூங்கிலினால் கிடைக்கும் எந்தப் பொருட்களும் தீங்கானவையோ, சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவையோ அல்ல. ஆகவே வீடுகள் தோறும் நாம் பச்சைத் தங்கத்தை வளர்க்கலாம்..!
நிலவளம் ரெங்கராஜன்