தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

உலகக் கலை நாள்!

07:05 AM Apr 15, 2024 IST | admin
xr:d:DAFcBA2EZZg:166,j:45170714291,t:23041406
Advertisement

லைஞர்களுக்கு முடிவு என்பது இருந்தாலும் கலைகளுக்கு முடிவு என்பதே கிடையாது. காலம் கடந்தும் கலை வாழ்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கலைக்கென இன்று உலகக் கலை நாள் கொண்டாடப்பட்டது வருகிறது. உணர்ச்சி மற்றும் மன ஓட்டங்களை எளிதில் கடத்தும் கருவிதான் கலை. அதுவும் இத்தாலிய கலைஞரான லியொனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் படைப்பாற்றல், புதுமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை வளர்க்கும் கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவுடன் உத்தியோகபூர்வ கூட்டாண்மையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வதேச கலை சங்கம் (IAA) இந்த நாளை அறிவித்தது ...!

Advertisement

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியொனோர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.

Advertisement

1452 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15இல் பிறந்த லியொனார்டோ டா வின்சி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஆவார். கட்டிடக்கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக, மோனா லிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவராகவும் விளங்கியதாக அறியப்படுகிறார். உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் இவரது பங்களிப்பு உண்டு. தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்டார்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார். மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார். ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். டாவின்சிக்கு குதிரைச் சவாரி மிகவும் பிடித்த விளையாட்டு.

கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார். மிலன் நகரத்தில் ஆட்சி செய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டாவின்சி. ஸ்பார்ஸா கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். ஆல்பஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்க சென்றார் டாவின்சி. மலையின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ட காட்சிகளை வரைந்தார். அந்த ஓவியம் மதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அதை ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் அதிக விலை கொடுத்து வாங்கி தன் அரண்மனையில் காட்சிக்கு வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஏசுநாதர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியான ‘கடைசி இரவு விருந்து’ எனும் நிகழ்ச்சியை கன்னிமாடத்தின் சுவரில் வரைந்தார். சுவரின் உறுதியற்ற தன்மையின் காரணமாக அந்த ஓவியம் பழுதடைந்தது.டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார். கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.மிலன் நகர் மீது ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது ஸ்பார்ஸாவையும் அவரது ஆட்களையும் நகரத்தை விட்டு விரட்டினார்கள். டாவின்சியும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

வெனிஸ் மற்றும் ரோம் நகரில் சில காலம் தங்கி இருந்தார். மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால் டாவின்சியும் திரும்பினார். டாவின்சிக்கு சம்பளமாகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்தான் ஸ்பார்ஸா. இதனால் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் டாவின்சி.தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும். பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்.

ஆக ஓவியம் , சிற்பங்கள், கவிதை, நடனம், புகைப்படம் எடுத்தல், திரைப்படம், நடனம், நாடகம், எழுத்து போன்ற பல்வேறு ஊடகங்களின் மூலம் படைப்பாற்றல் மற்றும் கற்பனை மூலம் கருத்துக்கள், புத்திசாலித்தனம், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக கலை வரையறுக்கப்படுவதாலும், ஒருவரால் விளக்க முடியாததை மொழியின் மூலம் வெளிப்படுத்துவதாலும், கனவு காண்பது, இயற்கையில் அவதானிப்பது, மனிதனின் பல்வேறு செயல்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வழியே கலை என்பதை தன் வாழ்க்கை மூலம் வெளிப்படுத்திய டாவின்சியின் நினைவாக இக் கலை நாளை கொண்டாடுவது சரிதானே? .

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
ArtArt DaycreativeIAA national committeesinternational celebrationLeonardo da Vinci.World Art Day
Advertisement
Next Article