பெண்கள் சமத்துவ நாள்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 26-ஆம் தேதி பெண்கள் சமத்துவ நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாள் இதுதான் என்பதால் இந்த நாளை நினைவு கூறும் விதமாக ஆகஸ்டு 26-ஆம் தேதி உலக சமத்துவ நாள் என்றுக் கொண்டாடப் பட்டு வருகிறது இந்தியாவிலும் பெண்கள் சமத்துவ நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் பெண்கள் இந்த நாளை போற்றிக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஓட்டுப் போடுவதில் மட்டும் பெண்களுக்கான சமத்துவம் இல்லை என்பதும் சமூகநீதி பிரச்சினைகளிலிருந்து வில்க்கு போன்றவைகளும் கிடைக்க வேண்டுமென்றும் ஒரு தாயாக மனைவியாக மகளாக நம் வாழ்வின் பெரும்பகுதியை வழி நடத்தும் பெண்களுக்கான நாளை போற்றி உணர வேண்டும் என்பதற்காகவே இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உலக அளவில் சமூகம், பொருளாதாரம், அரசியல் என பல்வேறு தளங்களிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும் ஆண் - பெண் சமநிலையில் பின்னடைவையே சந்தித்துவருகிறோம்.ஆண் மைய சமூகத்தில் பெண்ணியம், பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளே பலரால் எரிச்சலுடன் பார்க்கப்பட்டுவருகின்றன. பெண்ணியச் சிந்தனையோடு களப்பணியாற்றும் பெண்களுக்கு இங்கே எந்தவொரு வரவேற்பும் ஆதரவும் இருப்பதில்லை. பெண்களே பெண்ணியத்துக்கு எதிராகச் செயல்படுகிற அவலமும் இங்கே அரங்கேறுகிறது. பெண்களின் வழியாக வெளிப்படுத்தப்படுகிற ஆணாதிக்கத்தை இங்கே பலரும் உணரத் தவறிவிடுகிறார்கள்.
ஆண் குழந்தையைப் போற்றி வளர்ப்பதிலும் பெண் குழந் தையைத் தூற்றி அடக்குவதிலும் தொடங்குகிறது இந்தப் பாலினப் பாகுபாடு. ‘அவன் ஆம்பிளை பிள்ளை, சட்டையில்லாமகூட ரோட்டுல நடப்பான். பொண்ணுங்களால அப்படி நடந்துட முடியுமா?’ என்று மகளை அடக்கி வளர்க்கும் அம்மாவை மிகக் கவனத்துடன் பார்க்கும் மகன், பிறகு எப்படித் தன் சகோதரியையோ மனைவியையோ சமமாக நடத்துவான்? முளைக்காத மீசையை மனதுக்குள் முறுக்கிவிடுகிற அந்தச் சிறுவன், காலத்துக்கும் பெண் தனக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்கிற எண்ணத்தோடு வளர்வதற்கான சாத்தியம் அதிகம்.
இன்று ஓரளவு நகர்ப்புறங்களிலும் மேல்தட்டு குடும்பங்களிலும் கல்வியில் பாகுபாடு இல்லையென்றாலும் பல குடும்பங்களிலும் பெண் குழந்தைகளின் கல்விக்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ள ஒரு பட்டம் போதும் என்றும், இன்னொருவர் வீட்டுக்குப் போகப்போகிற பெண்ணுக்கு எதற்கு உயர் படிப்புகள் என்றும் கேட்கிற குடும்பங்கள் நம்மிடையே பல உண்டு. படிப்பில் மட்டுமல்ல விளையாடுகிற விளையாட்டுக்களில், உடுத்துகிற உடைகளில், நண்பர்களோடு பழகுவதில் என்று பலவற்றிலும் பெண்ணுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதனால்தான் பலரது வீடுகளிலும், ‘வயசுப் பொண்ணை வீட்ல வச்சுக்கிட்டு இருக்கறது வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கற மாதிரி இருக்கு’ என்கிற வசனம் அடிக்கடி எதிரொலிக்கிறது. ஆண் பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் அவர்களுடைய பெற்றோரின் வயிற்றில் பால் மட்டும்தான் சுரக்கும்போல. பெண்ணை ஓரளவு சுயசார்புடன் வளர்க்கும் அம்மாக்களும் சுற்றியிருக்கும் நான்கு பேருக்குப் பயந்து, துணைக்கு அண்ணனையோ அப்பாவையோ அழைத்துப் போகச் சொல்வார்கள்.
பணியிடங்கள் பெண்களுக்கு மற்றுமோர் போர்க்களம். ஆணும் பெண்ணும் இங்கே ஒரே தராசில் அமர்ந்தாலும் கண்ணுக்குத் தெரியாத மாய வலை பெண்களின் தட்டை ஒரு போதும் ஆணுக்கு நிகராக வைக்காது. ஆணும் பெண்ணும் ஒரே தரத்திலான வேலையைச் செய்தாலும் பெண் என்பதாலேயே அவர்களின் ஊதியம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்படியே ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைத்தாலும், அது அவள் பெண் என்பதால் கிடைத்த சலுகையாகவும் இங்கே பேசப்படுகிறது. தொழிற்கல்விகள் எல்லாம் பெரும்பாலும் ஆண்களுக்கே பரிந்துரைக்கப்பட, ஆசிரியர் பணி, வங்கிப் பணி போன்றவை பெண்களுக்கான பிரத்யேகத் துறைகளாக அறிவிக்கப்படுகின்றன. உடலுழைப்பு சார்ந்த வேலைகளிலும் இதே பாகுபாட்டைப் பார்க்கலாம். விவசாயப் பணியிலும் கட்டிடப் பணியிலும் பெண் தொழிலாளர்களுக்கு எப்போதும் இறங்கு முகம்தான். ஆண் கொத்தனார் செய்கிற அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்தாலும், அவர்களை மேஸ்திரிகளாக இங்கே யாரும் அங்கீகரிப்பதில்லை. ‘பெண்ணாள்’ என்ற ஒரு பதத்தை வழங்கி, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கூலியைத்தான் தருகின்றனர்.
இச்சூழலில் இன்றைக்கும், பெண்களின் சமத்துவம் வெறுமனே வாக்களிக்கும் உரிமையை விட அதிகமாக உள்ளது. சமத்துவம் என்பது இப்போது உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு சமமான அணுகலை வழங்குவதற்காகவும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கும், இன்னும் இருக்கும் பாகுபாடுகளை எதிர்த்து போராட வேண்டும். பேசுவது, விருப்பப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது, வேலைக்குப் போவது, திருமணம் செய்துகொள்வது என்று அடிப்படை உரிமைகளைக்கூடப் பெண்கள் இன்று போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. துணிந்து முடிவெடுக்கும், தனித்துச் செயல்படும் பெண்களை, ‘அவ குடும்பத்துக்குச் சரிப்பட்டு வரமாட்டா’ என்று பெண்களே விமர்சிப்பது, நம்மிடையே ஊறிக் கிடக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் எச்சமே. ஒவ்வொன்றுக்கும் போராடிப் போராடியே இன்று பல பெண்கள் அலுத்துப் போய்விட்டனர். பெண்களின் இன்றைய தேவை பெண்ணுரிமை அல்ல. சம உரிமை கிடைத்தாலே போதும், அவர்கள் அனைத்தையும் வென்றெடுத்துவிடுவார்கள்.
பெண்களின் உரிமையை முடக்கிப் போடுவதில் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அதனால் முதலில் வீட்டி லிருந்துதான் சமத்துவ சமூகத்துக்கான செயல் பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பாலினப் பாகுபாடின்றி வளர்க்க வேண்டும். ஆணுக்குக் கல்வி யையும் பெண்ணுக்கு வீட்டு வேலையையும் கற்றுத் தரும் பிற் போக்கு வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் பெண்ணியம் அல்லது பெண்கள் சமத்துவம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உணர்ந்து, புரிந்து செயல்படுகிற நாளில் பாலின பேதம் என்ற வார்த்தைக்கே தேவையிருக்காது! மகளிர் சமத்துவ தினம் கொண்டாடுவதன் மாண்பு மகளிரை மதிப்பதில்தான் அடங்கி யிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது