தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடா?- வாய்ப்பே இல்லையாம்!
சுட்டெரிக்கும் கோடை காலம் என்பதால் மின்சார தேவையும் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவு 107 கோடி லிட்டர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் மே 1 வரை வழக்கமான அளவை விட 80 சதவீதம் குறைவான அளவே மழை பெய்துள்ளது.
இந்நிலையில்மத்திய அரசு நடத்திய 'பே ஜல் சர்வேக்ஷன்' (Peyjal Survekshan) ஆய்வில் இந்தியாவில் உள்ள 485 நகரங்களில் 46 நகரங்கள் மட்டுமே மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை 90%-க்கும் மேல் பூர்த்தி செய்து விட்டதாக அரசு கூறினாலும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பலரும் குடிப்பதில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சென்னையில் 70% குடியிருப்புகள் குடி தண்ணீர் கேன்களை பயன்படுத்துகின்றன. 25 கி.மீ. நீள கடற்கரை கொண்ட சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பது சென்னையின் மற்றொரு சவாலாகும்.கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
தற்போது பூண்டி ஏரியில் 1,020 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2,930 மில்லியன் கன அடி, கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகையில் 386 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2,389 மில்லியன் கன அடிஎன மொத்தம் 6,855 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.வீராணம் ஏரி வறண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 8,263 மில்லியன் கனஅடியாக இருந்தது. இந்த ஆண்டு நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 1,408 மில்லியன் கனஅடி நீர் குறைவாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ? என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் கூறியுள்ளது. பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே சென்னையில் அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கும் நிலையில் அந்நகரில் உள்ள மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால் அந்த நிலை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு நகருக்கும் வராது என்ற ஆறுதல் செய்தி கிடைத்துள்ளது