மோடி ஆட்சி தொடருமா?-குழப்பத்தில் இந்தியச் சந்தை!
உலக அளவிலான சாதகமற்ற நிலவரம், அந்நிய முதலீடு வெளியேற்றம் காரணமாக பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக சந்தை ஆய்வாளர் கள் தெரிவித்துள்ள நிலையில் நம் நாட்டில் நிலையற்ற அரசியல் தன்மையால் 2012 க்கு பிறகு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் இந்திய முதலீடுகளை விற்று உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. .
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்திய பங்குச்சந்தை நிலையற்ற தன்மையில் உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கிய சில நாட்களிலேயே தொடர்ந்து நிஃப்டி வீழ்ச்சியை கண்டது. அதன் பின்னர் சற்று உயர்ந்தாலும் அரசியல் மாற்றம் ஏற்படும் என முதலீட்டாளர்கள் நினைப்பதாலேயே சந்தை வீழ்ச்சியை கண்டதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தை மீதான நம்பிக்கை குறைந்து உள்ளதையே சந்தை தரவுகள் காட்டுகின்றன. ஏப்ரல் மாத தொடக்கத்தில் 33,400 கோடி ரூபாய் வரை அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை இந்திய சந்தையில் இருந்து எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி கூறிக் கொண்டாலும் தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் வாக்குப்பதிவு குறைவதும் அரசியல் சூழ்நிலையும் ஆளும் கட்சிக்கு சாதகமானதாக இல்லை என்பதையே சந்தை நிலவரங்கள் காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே இழப்புகளை தவிர்ப்பதற்காக முதலீட்டாளர்கள் பெரும் அளவு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
முன்னதாக பிரபல பொருளாதார நிபுணர் பரக்கலா பிரபாகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.வுக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதாக கூறியுள்ளார்.
பொருளாதார முறைகேடு, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பது ஆகியவை பா.ஜ.க. வினருக்கே எதிராக திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள் ளார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க. இழந்து விட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.