எங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தை(யும்) காயப்படுத்திய பபாசி திருந்துமா?
நாங்கள் பதிப்பகம் தொடங்கி 6 வருடங்கள் முடிந்து ஏழாம் வருடம் அடி எடுத்து வைக்கிறோம். இந்த ஆறு வருடத்தில் 700 புத்தகங்களை பதிப்பித்துள்ளோம்.150 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எங்களை நம்பி தங்கள் புத்தகங்களை எங்களிடம் பதிப்பித்துள்ளார்கள். இதை வெறும் வியாபாரமாக மட்டுமே நாங்கள் பார்க்கவில்லை. பல லட்சங்கள் செலவு செய்து பல தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளோம். என்றாவது ஒரு நாள் இவற்றை உலகம் கவனிக்கும் கொண்டாடும் என உறுதியாக நம்புகிறோம்.ஏதோ எங்களால் முடிந்த வரையில் கடந்த மூன்று வருடங்களாக ஸீரோ டிகிரி விருதுகள் என அறிவித்து வாழ்நாள் சாதனையாளர் விருது, நாவல் போட்டி , குறுநாவல் போட்டி, சிறுகதைகள், என பரிசு அறிவித்து மிக நேர்மையாக நடத்திக்கொண்டு வருகிறோம்.
இலக்கிய உலகில் எங்கள் பதிப்பகத்தை பலருக்கு நன்றாகவே தெரியும். நியாயமாக புத்தகங்கள் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டும், பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் நன்றாக வளர வேண்டும் என்று நினைக்கும் எந்த அமைப்பும் நீங்கள் போன வருடம் இத்தனை புத்தகங்களை பதிப்பித்தீர்கள், இத்தனை அரங்குகள் எடுப்பீர்கள் இந்த வருடம் நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பெருகி இருக்கின்றன, ஆகையால் உங்களுக்கு பெரிய அரங்கம் வேண்டுமா? நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டால் அது வளர்ச்சிக்கு வழி .அதே அமைப்பு நீங்கள் போன வருடம் நான்கு அரங்குகள் எடுத்தீர்கள், இந்த வருடம் உங்களுக்கு ஒரு அரங்குதான் என்று சொல்வது இந்தத் தொழிலை எப்படி வளர்க்கும் என்று எனக்குப் புரியவே இல்லை.
எங்களுக்கு நடந்தது இதுதான் கடந்த நான்கு வருடங்களாக 4 அரங்குகள்தான் எடுத்து வருகிறோம். உறுப்பினராக அல்லாமல் இருப்போருக்கு என்ன தொகையோஅதை கொடுத்துதான் எடுத்து வருகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னரே பபாசி நீங்கள் அசோசியேட் மெம்பர் என சொல்லி நாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டார்கள் . அதில் முக்கியமாக சொல்லியிருப்பது சங்கத்துள் நடக்கும் தேர்தலில் வாக்குரிமை கிடையாது. அதைத்தவிர மீதி எல்லா சலுகைகளும் உண்டு. அதாவது உறுப்பினருக்கு எத்தனை அரங்குகள் தரப்படுமோ, அத்தனை அரங்குகளை அசோசியேட் மெம்பர்களும் எடுத்துக்கொள்ளலாம். மெம்பர்களுக்கு என்ன சந்தாவோ அதேதான் உங்களுக்கும் என தெளிவாக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைக் கோடிட்டு போன முறை நான் நான்கு அரங்குகள் கேட்டபோது எல்லா இடங்களிலும் பிரஷர் சார். புரிந்து கொள்ளுங்கள். இரண்டு நான் முடியும் என்றார்கள். உறுப்பினர் அல்லாதோர் பிரிவில் எடுத்துக்கொள்கிறேன் என்று அதிக பணம் கொடுத்துத்தான் போன வருடம் எடுத்தேன். இந்த வருடமும் ‘போன வருடம் நான் அசோசியேட் மெம்பராக இருந்தும் நீங்கள் எனக்கு மெம்பர் விலையில் நான்கு அரங்குகள் தரவில்லை. இம்முறையாவது தாருங்கள் என்றதற்கு, புரிந்து கொள்ளுங்கள் சார் . எல்லா இடத்திலிருந்தும் pressure, associate நம்பருக்கு இரண்டு அரங்குகள்தான் ஒதுக்க முடியும். உங்களுக்கு நான்கு அரங்குகள் வேண்டுமென்றால் ‘நான்-மெம்பர்’ கேட்டகிரியில் 3 1/2 லட்ச ரூபாய் கொடுத்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள். அவ்வளவு பணம் கொடுத்து அரங்கு எடுத்து நிச்சயமாக போட்ட பணத்தை எடுக்கவே முடியாது. ஆகையால் இரண்டு போதும் என அதற்குண்டான தொகையை செலுத்தி விட்டேன் உங்களுக்கு இரண்டு அரங்குகள் உறுதி என்றும் சொல்லிவிட்டார்கள்.
நாங்களும் புத்தகத் திருவிழாவுக்கான எல்லா வேலைகளையும் மும்முரமாக செய்துகொண்டிருந்தோம். குலுக்கல் நாள் அன்று நல்ல வேளையாக எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஷங்கரையும் ,சுதர்சனையும் அங்கு அனுப்பி இருந்தேன். இரவு எட்டே முக்கால் மணிக்கு சுதர்சன் என்னிடம் பரபரப்பாக ‘அண்ணா நமக்கு இரண்டு அரங்குகள் இல்லை ஒரு அரங்குதான் ஒதுக்கி இருக்கிறார்கள் என்னவென்றே புரியவில்லை’என்றான். உடனே நான் ஜீவ கரிகாலனை அழைத்து இது நிஜம்தானா என்று கேட்டவுடன் அவரும் பதறிப் போய் விசாரித்துவிட்டு ஆம் நான் உடனே அங்கு செல்கிறேன் நீங்களும் வருகிறீர்களா என்றார். நான் அங்கு சென்றவுடன் பப்பாசியிலிருந்து என்னிடம் வந்து ஏதோ தவறு நடந்து விட்டது. நீங்கள் கவலைப்படாமல் போங்கள். நாளை உங்களுக்கு இரண்டு அரங்குகள் ஒதுக்கி தருகிறோம் என்றார்கள். சரி என்று நம்பி கிளம்பி விட்டேன்.
ஆனால் 20க்கு 10 என அழகாக அமைந்திருக்கும் அரங்கத்தை கொடுக்காமல் பத்துக்கு 20 என்ற சைஸ் இருக்கும் ஓர் அரங்கை கொடுத்திருக்கிறார்கள். இதில் நிற்கவும் முடியவில்லை நடக்கவும் முடியவில்லை எல்லா புத்தகங்களையும் வைக்கவும் முடியவில்லை. வருபவர்கள் அனைவரும் எங்களை துக்கம் விசாரித்து தீர்த்து விட்டார்கள். போதாக்குறைக்கு இந்த மழையும் பெய்து 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை பாழாக்கிவிட்டது. ஏதோ கடைசி நிமிடத்தில் நமக்காக இரண்டு அரங்குகள் கொடுத்தார்களே என்று இங்கு வந்து பார்த்தால்தான் தெரிகிறது மெம்பரே இல்லாத பல புதிய நிறுவனங்களுக்கு இரண்டு அரங்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களை சார்ந்தவர்களுக்கு இன்னும் இரண்டு அரங்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, புத்தகத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத பல அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இத்தனை வருடம் இதெல்லாம் நாம் ஏன் பேச வேண்டும், நாம் ஏன் கேட்க வேண்டும், ஒரே துறையில் இருக்கும் நாம் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும். சகித்துக் கொள்வோம் என்று அதை சகித்துக் கொண்டுதான் இருந்தேன். இன்று என்னால் முடியவில்லை அத்தனையும் சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்துக் கொண்டு வருங்காலங்களில் ஏதாவது கஷ்டம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் சிந்தனை அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். இந்தப் பதிவால் எதுவும் பெரிதாக மாறிவிடும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக என் மனதில் இருந்த பாரத்தை, கடுப்பை, எரிச்சலை கண்டிப்பாக இறக்கி வைத்து விட்டேன். குறைந்தபட்சம் நிறைய பேருக்கு என்ன நடந்திருக்கிறது என்றாவது தெரியட்டும்.
இதைப் படித்து பொங்கி எழுந்து, நிறைய கர்ப்பிணிப் பெண்கள், பெரியவர்கள் புத்தகத் திருவிழாவுக்கு வருகிறார்கள். நடக்கும் பாதையில் மேடு பள்ளங்கள் இருக்கக் கூடாது என்று நல்ல பாதைகள் அமைந்தாலோ, மழை பெய்யும்போது ஒழுகாத நல்ல பந்தல்கள் அமைத்தாலோ, மலம் ஜலம் கழிக்கும் இடங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுத்தமாக அமைக்கப்பட்டாலோ ….இப்படி எந்த மாறுதல்கள் நடந்தாலும் எனக்கு சந்தோஷமே.
என்ன நீங்கள் இப்படி எழுதி விட்டீர்கள் என்று மனதில் வைத்துக்கொண்டு கங்கணம் கட்டி நமக்கு உறுப்பினர் சீட்டு கிடையவே கிடையாது என்று அவர்கள் செயல்பட்டால், வருந்தும் ஒரே விஷயம் வருடா வருடம் எங்களை வந்து சந்திக்கும் வாசகர்களை பார்க்க முடியாமல் போகும். எங்கள் எழுத்தாளர்கள் அவர்களுக்காக போடும் கையெழுத்தின்போது அவர்கள் கண்களில் கண்ணீரையும் அந்த பேரன்பையும் எங்களால் ரசிக்க முடியாமல் போய்விடக் கூடும் என்பதைத் தவிர வேறில்லை. நேர்மையாக செயல்படும் எங்களுக்கு பணரீதியாக ஏற்படும் இழப்பை இறைவன் எப்படியாவது ஈடு செய்து கொடுத்து விடுவான்.