.உரிய நீதி கிடைக்குமா?
1912 ஆம் ஆண்டு. ஸ்வீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோம், ஓர் ஒலிம்பிக் போட்டியைக் கண்டது. அந்த ஒலிம்பிக் போட்டியில் ஐந்து போட்டிகள் அடங்கிய பெண்டாத்லன், பத்து போட்டிகள் அடங்கிய டெகாத்லான் என்ற இருவேறு போட்டிகளிலும் ஜேம்ஸ் பிரான்சிஸ் தோர்ப் என்ற ஜிம் தோர்ப் வெற்றி பெற்றார். இந்த இரு போட்டிகளையும் உள்ளடக்கிய தனித்தனி தடகள போட்டிகளில், 9 போட்டிகளில் ஜிம் தோர்ப் முதல் வீரராக வென்றார்.இவை தவிர ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் தோர்ப் ஐந்தாவதாக வந்தார். நீளம் தாண்டுதலில் அவருக்கு 7ஆவது இடம். 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் தோர்ப்பின் திறமையைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைக்காதவர்களே இல்லை. அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வீரராக தோர்ப் கருதப்பட்டார்.ஜிம் தோர்ப் அமெரிக்காவைச் சேர்ந்தார். அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான சிவப்பிந்தியர்கள் என தவறாக அழைக்கப்படும் ஆதிகுடியைச் சேர்ந்தவர் அவர்.
ஸ்வீடன் நாட்டு மன்னர் ஐந்தாம் குஸ்தாவ், ஜிம் தோர்ப்பை நோக்கி, ‘சார். நீங்கள் இந்த உலகத்தின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்!’ என்று சொன்னபோது, ‘நன்றி மன்னர் அவர்களே!’ என்று பதில் அளித்தார் தோர்ப்.
ஆனால் விதி மெல்ல சிரித்தது.
ஒலிம்பிக்கில் இரட்டைத்தங்கம் வென்ற ஜிம் தோர்ப்பின் ஒளிப்படம் நாளிதழ்களில் வெளிவந்தது. அதை பார்த்த இதழாளர் ஒருவர், ‘ஏம்ப்பா. இந்த ஜிம் தோர்ப், ராக்கி மவுண்ட் பேஸ்பால் போட்டியில் பணத்துக்காக விளையாடியவர் இல்லையா?’ என்று பிரச்சினையைக் கிளப்பினார். தொழில்முறையிலான ஆட்டக்காரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கக் கூடாது என்பது விதிமுறை.
ஆகவே, ‘ஜிம் தோர்ப் பணத்துக்காக விளையாடியவர். ஆகவே அவர் அமெச்சூர் அல்ல. தொழில்முறை ஆட்டக்காரர். அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது செல்லாது’ என்று அந்த இதழாளர் ஒரு புகார் மனு எழுதி, அதை ஒலிம்பிக் அமைப்புக்கு அனுப்பி வைத்தார். ஆம். 1912 ஒலிம்பிக் போட்டிக்கு முன் தோர்ப் ஒரு பேஸ்பால் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதில் அவர் பணம் பெற்றுக் கொண்டு விளையாடியது என்னவோ உண்மைதான். தோர்ப் பெற்றது வெறும் 25 டாலர்கள்தான். அதுகூட அறியாமை காரணமாக அவர் வாங்கிக் கொண்ட பணம் அது.
ஜிம் தோர்ப் மீதான புகார் மனுவை ஆராய்ந்த ஒலிம்பிக் அமைப்பு, ‘ஜிம் தோர்ப், ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற வெற்றி செல்லாது’ என அறிவித்தது. அவர் அமெச்சூர் இல்லை என்பதால் அவருக்கான 2 தங்கப் பதக்கங்கள் பெண்டாத்லன் போட்டியில் அவருக்கு அடுத்தபடியாக வந்த நார்வே வீரர் பை, டெகாத்லான் போட்டியில் இரண்டாவதாக வந்த ஸ்வீடன் வீரர் வெய்ஸ்லாண்டர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. ஆனால் தோர்ப் மீது கொண்ட மதிப்பு காரணமாக அந்த வீரர்கள் இருவரும் பதக்கங்களை வாங்க மறுத்து விட்டனர்.
பதக்கங்கள் மறுக்கப்பட்டதால் ஜிம் தோர்ப் மனம் உடைந்து போனார். ஆளே மாறிப்போனார்.1932ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கைக் காண ஜிம் தோர்ப் வந்தபோது அவர் யார் என்றே யாருக்கும் தெரியவில்லை.அரங்கத்தில் இருந்த ஊழியர் ஒருவர் மட்டும் ஜிம் தோர்ப்பை அடையாளம் கண்டு, அவருக்கு இலவச நுழைவுச்சீட்டை வழங்கி ஒலிம்பிக்கைக் காணச் செய்தார்.ஜிம் தோர்ப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியை, நவீன ஒலிம்பிக்கின் தந்தையாகக் கருதப்படும் கூபர்டின் கூட அந்தக்காலத்தில் கண்டித்திருக்கிறார். ‘அமெரிக்க பழங்குடி இனத்தவர் என்பதால் அவரை எளிதாக உங்களால் தூக்கி வீச முடிந்தது’ என்று கூபர்டின் சாடியிருக்கிறார்.
ஜிம் தோர்ப், அவரது வாழ்க்கைப் பாதையில் அதன்பிறகு பல்வேறு வேலைகளைச் செய்தார். குழந்தைகள் காப்பகம் ஒன்றின் கண்காணிப்பாளராக, தொழிற்சாலை காவல்காரராக, வாரத்துக்கு 4 டாலர் சம்பளத்துக்குப் பழம் பறிப்பவராக ஜிம் தோர்ப் பணியாற்றி இருக்கிறார். பிற்காலத்தில் உதட்டுப் புற்றுநோய் காரணமாக மனவேதனையுடன் 1953ஆம் ஆண்டு ஜிம் தோர்ப் இறந்து போனார். அவர் பெற்ற பதக்கங்கள் ஒலிம்பிக் அமைப்பால் 1983ஆம் ஆண்டு அவரது குடும்பத்துக்கு மீண்டும் வழங்கப்பட்டன. அதாவது 30 ஆண்டுகளுக்கு(!) பிறகு ஜிம் தோர்புக்கு உரிய நீதி(!) வழங்கப்பட்டது.
இந்திய மற்போர் வீராங்கனை வினேஷ் போகத் மனு தொடர்பான வழக்கில், பன்னாட்டு விளையாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.உரிய நீதி கிடைக்குமா என்று பார்ப்போம்.