அமெரிக்காவின் போக்கால் உலகப் போர் மூளுமோ?
இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஒரு வார காலமாக போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் ஏவுகணைகளை ஏவி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த போரில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் களமிறங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று 2000 வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டு உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் நேரடியாக களமிறங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து உலகப் போர் மூளும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி லெபனானை ஒட்டிய இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் 28 நகரங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இச்சூழலில்தான் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்க சுமார் 2,000 அமெரிக்க வீரரக்ளுக்கு பென்டகன் "களமிறங்க தயார் ஆகுங்கள்" என்ற உத்தரவை அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜே பைடனின் உத்தரவின் பெயரில் இந்த உத்தரவு சென்றுள்ளது. போர் உச்சம் அடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதனால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரேல் படைகளுக்கு கூடுதல் மருத்துவ உதவி அல்லது வெடிகுண்டு உதவி, ஆயுத உதவி போன்ற பல்வேறு உதவிகளை அமெரிக்க படை வீரர்கள் வழங்குவார்கள். நேரடி பாதுகாப்பு, தாக்குதல் பணிகள், பல்வேறு இடங்களை பிடிப்பது உள்ளிட்ட பணிகளிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருக்கும் . இஸ்ரேலுக்கு மட்டுமின்றி காஸா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட இவர்கள் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அங்கே படைகளை குவித்து இஸ்ரேலுக்கு போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் வகையில் அமெரிக்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போரில் அமெரிக்கா கப்பலை அனுப்பி இருந்தாலும் நேரடியாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. உதாரணமாக அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது. இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சில சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைந்துள்ளது. இந்த கப்பல் மத்திய கிழக்கிற்கு சென்றாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது படைகளை களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி உள்ளதால் போர் உண்மையில் உலகப்போராக மாற உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.