பணக்கார நாடான இந்தியாவுக்கு ஏன் நிதி? - டிரம்ப் கேள்வி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அண்மையில் அங்கு சென்றார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்ற நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்புக்கு அவர் வாழ்த்துக்களை கூறிய நிலையில் இரு நாட்டுக்கும் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சமயத்தில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க பொருள்களுக்கு நட்பு நாடுகள் அதிக இறக்குமதி வரி போடுவதால்அமெரிக்க பொருட்களை அங்கு கொண்டு போய் சேர்ப்பது மிகவும் கடினமாக இருப்பதாக கூறினார்.
குறிப்பாக இந்தியாவும் அதிக இறக்குமதி வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்க பொருட்களை அங்கு விற்பனை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியை இனி நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் (Department of Government Efficiency–Doge) தலைவராக உள்ள எலன் மஸ்க் இந்த முடிவை எடுத்தார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்டபோது, நாம் ஏன் இந்தியாவுக்கு 182 கோடி நிதி கொடுக்க வேண்டும். அவர்களிடமே நிறைய பணம் உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு போய் சேர்ப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தியா மீதும் பிரதமர் மோடி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் நிதி தர வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஏற்கனவே அமெரிக்காவுக்கு அதிக இறக்குமதி வரி விதித்தால் அதே போன்று 100 சதவீதம் பதிலுக்கு நாங்களும் வரி விதிப்போம் என்று ஏற்கனவே அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.