ஊட்டி, கொடைக்கானலுக்கு E Pass என்பது தவறான போக்கு ஏன்? மாற்று வழி என்ன? விரிவான ரிப்போர்ட்!
உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும், வரும் 7-ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி அங்கு செல்ல முன்கூட்டியே இ-பாஸ் பெற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். எனினும், இ-பாஸ் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சில பயணிகள், கூட்ட நெரிசல் உள்ள நாளில் வருவதை தவிர்க்க இது உதவும் என்றார்கள் அதே சமயம் இந்த E Pass நடைமுறை மூலம் லஞ்சம், ஊழல் போன்ற அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெற வழி வகுத்து விடும் என்போருமுண்டு. ஏற்கெனவே மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் சில சமூக விரோதிகள் காவல் துறை உதவியோடு Green Tax என்று அனைத்து வாகனங்களிடமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் அது போன்ற அரசு உத்தரவு எதும் இருப்பதாக தெரியவில்லை. அந்த பணம் அரசாங்கத்திற்கும் செல்வது போவதும் தெரியவி ல்லை. கடந்த மூன்று ஆண்டுகலாமாக அனைவருக்கும் தெரிந்து நடைபெறும் இந்த கொள்ளையை தடுக்க எந்த அரசு அதிகாரியும் முன்வைரவில்லை. இதை முதலில் அரசு தடுக்க வேண்டும். E Pass நடைமுறை மூலம் மேலும் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த E Pass நடைமுறை இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தடையின்றி சென்று வரலாம் என்ற தனிமனித உரிமைகளை பாதிப்பது போல் உள்ளது. நாளை இதை முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த இது போன்ற உத்தரவு வேண்டும் என்ற கோரிக்கை எழும். என்ற பீதிக் குரலும் எழும்பியுள்ள நிலைடில் இந்த முறையை நீக்காவிட்டால் விடுதி மற்றும் உணவங்களை மூடிவிட்டு போரட்டம் நடத்தப் போவதாகவும் வந்துள்ள் அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. .!
அதாவது உதகை மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளது. உத்தேசமாக உதகைக்கு தினமும் 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நடந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிக்கப்படும். ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும், கொரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை உதகை மற்றும் கொடைக்கானலில் மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்த இ–பாஸ் வழங்கும் முன்பு, வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்? எத்தனை பேர் வருகின்றனர்? ஒரு நாள் சுற்றுலாவா? அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். உதகையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் மே 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் பதிவு செய்வதற்கான இணையதளம் நாளை மாலை தொடங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் இருந்தால் போதுமானது.
அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.
இந்த நடைமுறையானது மே 7 முதல் 30ம் தேதி வரை சோதனை முறையில் அமலில் இருக்கும்.
செல்போன் எண்வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து நீலகிரி வரும் மக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்தும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது இமெயில் முகவரியை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சொந்த நாட்டிற்குள்ளே பாஸ்போர்ட் வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது போல் Pass வாங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல. நீதிமன்றத்தின் நோக்கம் சரியானதாக இருக்கலாம் ஆனால் அதனால் பெரிய அளவில் எந்த பலனும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருத்து பலமாக எழுகிறது. பண பலம் இல்லாத பாமர மக்களுக்கு இது சிரமத்தை தான் உண்டாக்கும். தமிழக அரசு இந்த உத்தரவை நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
இதற்கு பதிலாக 1.) காரமடை - கல்லாறு- மேட்டுப்பாளையம் By Pass திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, 2.) லவ்டேல் - HPF இந்த பகுதியில் ஊட்டி நகருக்குள் செல்லாமல் ஒரு மற்றுபாதை சீராக்கப்படலாம். 3.) மசினகுடி - கோத்தகிரி சாலை ஊட்டி நகருக்குள் செல்லாமல் மாற்று பாதை ஒழுங்குபடுத்தப்படலாம் என்றும் சட்ட விரோதமான கட்டடங்கள், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலாம், சட்டவிரோதமாக மரம் வெட்டுவது வனவிலங்குகளை துன்புறுத்துவது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் ஐகோர்ட்டுக்கு அரசு எடுத்துச் சொல்லி இந்த இ பாஸ் முறைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சூழலில், கொடைக்கானலில் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இ-பாஸ் நடைமுறையினால் குறைந்த அளவிலான சுற்றுலாப்பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் ரிசார்ட் உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர். எனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சங்க தலைவர் அப்துல் கனிராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முன்னெடுப்புகளை ஓட்டல் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து செய்யும். இதற்காக இன்று நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்த ேகாரிக்கை மனுவை கொடுக்கவுள்ளோம். அதையும் மீறி இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டால் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் போராட்டம் செய்வோம். முதற்கட்டமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் மூடப்படும். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எங்களது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளும் திறக்கப்பட மாட்டாது. இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யும் வரை இதுபோல் போராட்டங்களை தொடர்ந்து செய்வோம். என்று தெரிவித்தார்.
நிலவளம் ரெங்கராஜன்