வெள்ளத்தில் சென்னை மிதப்பது ஏன்?-அதிர்ச்சியூட்டூம் ஆய்வு தகவல்!
சென்னை நகரின் சுமார் 7% நிலப்பகுதி 2040ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் என்று சில மாதங்க்களுக்கு முன் வந்த ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.மேலும் இந்த ஆண்டில் பதிவான வெப்ப அலை இதுவரை இருந்ததைவிட அதிக பாதிப்புகளை சென்னையில் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப் பேரிடர்களை நகரின் ஒரு சில பகுதிகளாவது எதிர்கொள்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும்.
சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான 'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறது.குறிப்பாக சென்னை பெருநகரம், வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.“கடந்த 2015ஆம் ஆண்டில் மழை அளவு அதிகமாக இருந்தது என்றாலும், இது முன்பு நிகழாதது அல்ல. ஆனால், வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் நிலைமை மோசமானதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் என்கிறது அந்த அறிக்கை.
இந்த அறிக்கை குறித்துப் பேசும் சூழலியலாளர்கள், “இனி சதுப்பு நிலத்தில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே, மிச்சம் இருக்கும் சதுப்பு நிலங்களையாவது நாம் பாதுகாக்க முடியும்,” என்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மீதமுள்ள சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கப் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக" தெரிவித்தார். கடந்த 1911ஆம் ஆண்டு வருவாய் ஆவணப் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைத் தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் எஞ்சியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. நகராட்சி மற்றும் நீர்வளத்துறை இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம். மக்களும் இதற்கான ஒத்துழைப்பைத் தரவேண்டும். ஆக்கிரமிப்புகள் காரணமாக சதுப்பு நிலம் அழிந்திருக்கிறது. மனிதர்களால் ஏற்படும் கழிவுகளும் ஆபத்தானவையாக உள்ளன," என்றார்.
சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகியவை முக்கியமான சதுப்புநிலப் பகுதிகளாக விளங்குகின்றன."சென்னை பெருநகரை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சதுப்பு நிலங்கள் குடியிருப்புப் பகுதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலேயே" இத்தகைய அழிவு ஏற்பட்டுள்ளதாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஆனால், எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களை உடனடியாகக் காக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை சுட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
அதற்கு முதல்படியாக, “எந்த வகையிலும் சதுப்பு நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக முடிவெடுக்க வேண்டும்” என்கிறார், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோ. சுந்தர்ராஜன்.வெள்ளத்தைத் தடுக்க மட்டுமல்ல, வறட்சியைக் கட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்கள் முக்கியம் என்கிறார் அவர்.
நிலவளம் ரெங்கராஜன்
'