For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஏன் இம்முறை பாரதீய ஜனதா உறுதியாகத் தோற்கிறது?

07:28 PM May 30, 2024 IST | admin
ஏன் இம்முறை பாரதீய ஜனதா உறுதியாகத் தோற்கிறது
Advertisement

சுவாரசியமான கேள்வி இல்லையா? 90 களின் துவக்கமாக இருக்கலாம், கோடை விடுமுறையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவனாக இருந்த காலத்தில் என்னுடைய சக நண்பன் ஒருவன் நான் பாரதீய ஜனதாவை ஆதரிப்பேன் என்று என்னிடம் சொன்னான். என்னால் இன்றுவரை அந்த அதிர்ச்சியை செரித்துக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் ஊரகப் பகுதியில் வசிக்கிற ஒரு கீழ்நிலை நடுத்தரக் குடும்பம் பாரதீய ஜனதாவை ஆதரிக்காது என்று அப்போது நான் உறுதியாக நம்பினேன். எனது நம்பிக்கையின் அடிப்படைகள் வேறு. நான் ஒரு மிக ஆழமான திராவிட அரசியல் சிந்தனைகளால் உந்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன். என்னைச் சுற்றிலும் அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், மார்க்ஸ், மு.வரதராசன், பாரதிதாசன் இன்னும் கூடுதலாக லியோ டால்ஸ்டாய், ஆப்ரகாம் லிங்கன் என்று பலரது சிந்தனைத் தொகுப்புகள் நிறைந்திருந்தது. ஏறக்குறைய பல குடும்பங்களில் எனது இந்த அனுபவம் துவக்க நிலையில் இருந்தது, இடதுசாரித் தத்துவங்களும், திராவிட இயக்க முன்னெடுப்புகளும் தான் வீட்டிற்கு வெளியேயும் பரவிக் கொண்டிருந்தது. வழிபாடுகள் இருந்தது, மதம் இருந்தது, சாதி அழுத்தமாக இருந்தது, ஏழ்மை, அறியாமை, வேலையின்மை, மூடநம்பிக்கைகள் என்று பிற இந்தியாவின் எல்லாக் குளறுபடிகளும் இருந்தன.

Advertisement

ஆனால், வலதுசாரித் தத்துவம், நிறுவனமயமான இந்துத்துவ மதம், பிற மதங்களைத் தூற்றும் மனநிலை இவற்றை நான் எங்கும் பார்க்கவில்லை, அப்படியான மனிதர்களை நாங்கள் வேடிக்கையாக அல்லது புருவத்தை உயர்த்தியபடி விசித்திரமாகப் பார்க்கப் பழகி இருந்தோம். கல்லூரி காலத்தில் H.ராஜாவின் தந்தையாரும், அழகப்பா பொறியியல் கல்லூரியின் சமஸ்கிருதப் பேராசிரியரான திரு.ஹரிஹர சர்மாவுடன் மருத்துவர் ஷேக் அப்துல்லாவின் வீட்டு மாடியில் நடக்கும் ஆங்கில வகுப்பில் அவரோடு நாங்கள் பெரியாரை சிறுமைப் படுத்திப் பேசியதற்காக சண்டையிட்டு மன்னிப்புக் கோர வைத்த நினைவுகள் உண்டு. ஆகவேதான் பாரதீய ஜனதாவை ஆதரித்த அந்தக் கிரிக்கெட் நண்பனை என்னால் செரிக்க முடியவில்லை.

சரி, நாம் கட்டுரைக்கு வருவோம், உங்களுக்கு இந்த இரண்டு அரசியல் தலைவர்களையும் தெரியும், நாராயன் ரானே, நிதின் கட்கரி இருவருமே மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வளர்ந்து வந்த தேசிய அளவில் அறியப்பட்ட பாரதீய ஜனதாவின் தலைவர்கள். இருவரும் மத்திய அமைச்சர்கள், ஒருவர் மோடி அமைச்சரவையில் MSME துறை அமைச்சர், இன்னொருவர் தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். இவர்கள் இருவரும் இந்தத் தேர்தலில் தோற்றுப் போவார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

Advertisement

நான் நம்புகிறேன், மகாராஷ்டிராவில் 25 இடங்களுக்கு மேல் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்றாலும் இந்தப் புகழ்பெற்ற தலைவர்கள் தோற்கிறார்கள். நிதின் கட்கரி நாக்பூர் தொகுதி வேட்பாளர், நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைமையகம். இப்போது நிதின் கட்கரி ஏன் சஞ்சய் ராவத்திடம் தோற்கலாம் என்பதற்கான‌ காரணங்களைப் பார்க்கலாம்.

1 - உத்தவ் தாக்கரேயின் UBT மீது மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய அனுதாப அலை. காரணம் 2 - மோடி & கோவுக்கு எப்போதும் போட்டியாளராக முன் வைக்கப்படுகிறவர் நிதின் கட்கரி என்பது. இதே காரணங்களுக்காகவே ரத்னகிரி தொகுதியிலும் விநாயக் ராவத்திடம் நாராயன் ரானே தோற்கலாம். மகாராஷ்டிராவில் மூன்று‌ ஆண்டுகள் வசித்தவன் என்ற வகையில் அங்கிருக்கும் மராட்டியர்களை ஓரளவுக்கு‌ என்னால் புரிந்து கொள்ள முடியும். அப்பாவி மராட்டியர்களிடம் இனவாதத்தை விதைத்து வளர்ந்து செழித்ததுதான் பால்தாக்கரேயின் சிவசேனா என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. இம்முறை அவர்கள் உத்தவ் தாக்கரேயின் பக்கம் நிற்கிறார்கள். இந்தத் தேர்தலில் ஏற்கனவே பாரதீய ஜனதாவிடம் இருந்த தொகுதிகளில் பாதியை பிடுங்கி விடுவார்கள் என்பதுதான் களநிலவரம். எனது மகாராஷ்டிர நண்பர்களும் கூட இதையே எதிரொலிக்கிறார்கள்‌ என்பது கூடுதலாக இந்த ஜாம்பவான்களின் வீழ்ச்சியை நம்ப வைப்பதற்கான காரணியாக இருக்கிறது.

இன்னும் நாம் கட்டுரைக்குள் வரவில்லை, பாரதீய ஜனதாக் கட்சி பிற‌ அரசியல் கட்சிகளைப் போல ஒரு அரசியல் கட்சி, அதனுடைய கோட்பாடுகள், நம்பிக்கைகள் வலதுசாரி இந்துத்துவத்தை நோக்கி இருக்கிறது என்பதற்காக அந்தக் கட்சியே அழிக்கப்பட வேண்டும் என்பதல்ல எனது வாதம்.

ஜனநாயக நாட்டில் வலதுசாரி இந்துத்துவா என்பது ஒரு வழிமுறை, அந்த வழிமுறை‌ நீதியை நோக்கி செயல்படுகிறதா? சமூக ஒற்றுமையை முன்வைக்கிறதா என்ற கேள்வி எழும்‌போது இயல்பாகவே நான்‌ அந்தக் கோட்பாட்டுக்கு எதிரியாக மாறுகிறேன், எதிர்க் கோட்பாட்டை முன்வைக்கிறேன், தேர்தல் வழியில் அந்தக் கட்சியை வீழ்த்தி நீதிக்கான கோட்பாடு வெற்றி பெறுகிறதா என்பதை நோக்கி நகர்கிறேன். இதுதான் நாடாளுமன்றத் தேர்தல் வழியிலான ஜனநாயகத்தில் சரியான‌ வழிமுறை. ஆனால், ஒரு கட்சியாக நீங்கள் பாரதீய ஜனதாவை எடுத்துக் கொள்ளுங்கள், 2014 ஆம் ஆண்டில் வளர்ச்சி ஊழல் எதிர்ப்பு மற்றும் குஜராத் மாதிரியை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு பிரமாண்டமான Brand ஆக முன்வைக்கப்பட்வர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, அது வெற்றியைக் கொடுத்தது.

ஆனால், 5 ஆண்டுகளில் அவர் வாக்குறுதியளித்த எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக கட்சியின் மிகப்பெரிய ஆற்றல் மிகுந்த ஒற்றைத் தலைவராக அவர் தன்னை வடிவமைத்துக் கொண்டார். அதிகாரம், பொருள், வளங்கள் எல்லாம் மடைமாற்றப்பட்டதன் காரணமாக இதுகுறித்து கட்சியோ, தாய் இயக்கமோ பெரிதாகக் கவலை கொள்ளவில்லை.

இரண்டாம் முறை தேசப் பாதுகாப்பு, 5 ஆண்டு காலம் போதவில்லை போன்ற காரணங்கள் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. இம்முறை அவர் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை அமீத் ஷாவின் துணையோடு அழித்தொழித்தார். இரண்டாம் நிலைத் தலைவர்கள்‌ யாரும் தலையெடுத்து விடாதபடி எல்லா வழிகளையும் அடைத்தார். எங்கும் மோடி, எதிலும் மோடி என்கிற‌ தோற்றத்தை உருவாக்கினார். ராமர் கோவில் முழக்கத்துக்காக அவருக்கு கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் வாக்களித்தார்கள், 30 கோடி உயர் நடுத்தர வர்க்கம் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியில் மயங்கி தங்கள் உச்சபட்ச வாக்கு வலிமையை அவருக்கு வழங்கி விட்டார்கள். ஆனால் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பிற 100 கோடி இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்கான‌ எந்த முகாந்திரமும் அவரிடம் இல்லை. அவருக்கான அதிகபட்ச இடங்கள் முடிந்து போனது.இப்போது இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றுவதற்கான முழக்கங்கள் எதுவும் அவரது கைவசமில்லை.

கூடுதலாக அவருக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளைத் தாண்டி அவர் பிற 100 கோடி இந்திய சிவில் சமூகத்தின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, மைய ஊடகங்களைத் தாண்டி சமூக இணைய தளங்களில் இருந்து வந்த கடுமையான‌ எதிர்வினைகளை அவரது கோடி ஊடகங்களால் சமாளிக்க முடியவில்லை. புகழ் பெற்ற துருவ் ரத்தியில் இருந்து ஜீவா டுடே வரைக்கும் மட்டுமில்லாமல் பெயர் தெரியாத பல்லாயிரம் YouTube சேனல்களையும், மீம்ஸ்களையும், Content Creator களையும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினார்.

ஒருபக்கம் உட்கட்சியில் ஏற்பட்ட ஜனநாயகப் படுகொலை, மற்றொருபுறம் சமூக இணையதளங்களின் வீச்சு இரண்டும் சேர்ந்து இப்போது அவரது ஒற்றைத் தலைமையின்‌ மீது கொரில்லாத் தாக்குதல் தொடுக்கிறது. ஒருவேளை அல்ல, உறுதியாக இம்முறை மோடி தோற்றுப் போய் வெளியேறினால் கூட பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் கட்சியின் இந்த வீழ்ச்சியை சரிசெய்து மீண்டு வருவதற்குக் குறைந்தது இன்னும் பத்தாண்டுகள் தேவைப்படும். நாடு முழுவதும் நம்பிக்கையான பழைய சகாக்களை பாரதீய ஜனதாக் கட்சி இழந்ததுதான் மோடியின் வீழ்ச்சிக்கான மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடையும் வெற்றி என்பது உண்மையில் அவர்களது வெற்றி அல்ல, முழுமையாக இந்திய சிவில் சமூகத்தின் வெற்றி.

பல்வேறு தரவுகளையும், நாட்டின் பிற‌பகுதி வாக்களர்களின் மனநிலையையும் ஆராய்ந்து பார்த்தால் இம்முறை‌ பாரதீய ஜனதாக் கட்சி அடைகிற தோல்வி என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அரசியல் கட்சியாக அதன் செயல்திட்டங்கள் அடைந்த தோல்வியாகவே இருக்கும். ஒற்றைத் தலைமையை நம்பி அதிகாரத்தைக் குவித்து நாட்டின்‌ வளங்களைக் கொள்ளையடித்து, பொருளாதாரத்தை சூறையாடிய மோடி-அமீத்ஷாவின் ஜனநாயகப் படுகொலையே அவர்களின் இந்தத் தோல்விக்கு மிகமுக்கியமான பிற கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய காரணி என்பதே எனது ஆழ்மனதில் இருந்து வருகிற அந்த முதல் கேள்விக்கான விடை.

நீதியின் பாதைக்கு வாருங்கள், இந்த தேசத்தின் வெள்ளந்தியான எளிய உழைக்கும் மக்களின் தேவைகளையும், அவர்களின் துயரங்களைத் துடைக்கும் உண்மையான நோக்கங்களையும் ஒரு அரசியல் கட்சியாக முன்வையுங்கள். மக்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற‌ எளியவர்களும் பாரதீய ஜனதாவை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் கூட ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சியை எட்டியிருக்கிறோம். நாங்கள் எதிர்ப்பது ஏழைத்தாயின் மகனான மோடியையோ அவரது உடலையோ அல்ல, நாங்கள் எதிர்ப்பது அநீதியின் சுவடுகளை, எளிய மக்களுக்கு எதிரான உங்கள் செயல்பாடுகளை மட்டும்தான்.

கை.அறிவழகன்

Tags :
Advertisement